தமிழரின் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, எழுந்த பொன்னான நாள்- தலைவரின் பிறந்தநாள்

Thursday November 26, 2015

எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும், எம்மைப் பிணைந்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்படவேண்டும், எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும். இந்த இலட்சியம் ஈடேறவேண்டுமாயின் நாம்  போராடித்தான் ஆகவேண்டும், இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும் என்ற தலைவரின் சிந்தனைக்கு நிகராக போராடிவரும் தமிழர்களுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்றைய தினமானது எமது தேசியத் தலைவரின் பிறந்தநாள் ஆகும் . தமிழரது துன்பத்தை அகற்ற தமிழருக்குக் கிடைத்த வரமே எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆவர்.

இவர் வல்வெட்டிதுறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக 26ஆம் திகதி கார்த்திகைமாதம் 1954இல்  பிறந்தார். இவருக்கு அண்ணனும் இரண்டு அக்காவும் இருக்கின்றனர்.  தமிழருக்கு எதிராக சிங்களவர் நடாத்திய கலவரம் ஒன்று அவரது நான்கு வயது பருவத்தில் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது.

1970ஆம் ஆண்டு அவரது தோழர்களுடன் "தமிழ் மாணவர் பேரவை" தொடங்கினார். அக்குழுவில் இளையவராக இருந்தமையால் அவரை "தம்பி" என்றே அழைத்தனர். பின்னர் அவர் தமிழகம் சென்று வந்திருந்தபோது "புதிய தமிழ்ப் புலிகள்" என்ற பெயரில் ஓர் இயக்கத்தை தொடங்கினார். 1976  வைகாசி 5 ஆம் திகதி "புதிய தமிழ் புலிகள்" இயக்கத்தை "தமிழீழ விடுதலைப்புலிகள்" என நிறுவினார். இவ் இயக்கமானது தமிழரது விடுதலையை நோக்கி இயக்கப்பட்டது. "எமது மக்களின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் நிலைநாட்டவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். அந்தச் சுதந்திரமும் கௌரவமும் நிலைநாட்டாதவரை எமது போராட்டம் தொடரும் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்கூற  விரும்புகின்றேன்" என்பதே தலைவரது சிந்தனையாக இருந்தது. அவ்வாறே தனது இயக்கத்தை கொண்டு சென்றார். அத்துடன் விடுதலைப்போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம். இதுவும் அவரது சிந்தனையில் ஒன்றாகும்.

விடுதலைப்போராட்டத்தையும் மக்களையும் வேறு வேறு என்று பாராமல் எல்லோரும் ஒன்று  என்றே போராட்டத்தை தொடங்கினார். தனது ஒவ்வொரு நொடியையும்  தமிழினத்தின் விடுதலைக்காக செலவிடுகின்றார்.

தலைவர் கூறியுள்ளார் "ஒரு விடுதலை இயக்கத்துக்குப் பின்னால் மக்கள் அணிதிரண்டு, அந்த இயக்கத்தின் இலட்சியத்தில் பற்றுக்கொண்டு, போராட்டத்தில் பங்கு கொள்ளும்பொழுதுதான் விடுதலை சாத்தியமாகிறது" என்று. நாம் பேசுவதை குறைத்து செயலில் எமது வேகத்தை காட்டவேண்டும். "இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.“

எனவே என் அன்பு உறவுகளே! எமது இலட்சியத்தை அடையும்வரை எமது ஒற்றுமை வலுப்பெறவேண்டும். விடுதலைப் போரட்டம் என்பது தனிநபரின் சொத்து அல்ல, அதனால் பல இன்னல்கள் வந்து சேரும், ஆயினும் எமது இலட்சியத்தை மறந்து நாம் சென்றுவிடக்கூடாது. ஒரு நிமிடம் நாம் இழந்தவற்றை எண்ணிப்பார்த்து, எமது தலைவரின் சிந்தனைகளை நினைவுகூர்ந்துகொள்ள வேண்டும். அதன்பின்னே செயற்பட வேண்டும் இல்லையேல் நாம் போராடியதின் அர்த்தத்தை இழந்துவிடுவோம்.

"நாம் துணிந்து போராடுவோம்.... சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.“

இந்த இனிய பொழுதில் எமது தலைவரின் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டு, அவர் பின்னே சென்று அவரது கனவான தமிழீழத்தை வென்றெடுப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோமாக.

தமிழ் இளையோர் அமைப்பு - ஜேர்மனி