தேசம் காத்த எங்கள் காவலன் கரிகாலனுக்கு அகவை அறுபத்தொன்று…!

Thursday November 26, 2015

அகிலம் வாழ் தமிழரெல்லாம்
அகத்தில் உங்களை இருத்தி
நெஞ்சமதை நிமிர்த்தி
நாம் தமிழர் என்றும்
நம் தலைவன் பிரபாகரன் என்றும்
மார்பு தட்டி முழக்கமிட்டு
உங்கள் பிறப்பின் நாளை
திருநாளாய் பெருநாளாய்
கொண்டாடி மகிழ்கின்றோம்
எம் தலைவா..!

ஆண்டாண்டாய் ஆண்ட இனம்
அடிமைப்பட்டு வீழ்ந்த போது
வல்வையின் மண்ணிலே
வல்லவனாய் நீ மலர்ந்தாய்
எம் அடிமையின் விலங்கொடிக்க
புலிக்கொடியின் கீழ் படை திரட்டி
பகைவர் கதையை முடித்தாய்
கரிகாலன் எங்கள் காவல்
கடவுளாய் வரம் தந்தாய்
வரலாறு பல நூற்றில் இடம் பிடித்தாய்
முப்படைகளையும் நீ அமைத்து
தமிழர்க்கு என்றொர் அரசமைத்து
எதிரிகள் யாவரும் உங்கள்
பெயரை கனவிலும் நினைவிலும்
உச்சரிக்க வைத்த தன்மான வீரனே
எங்கள் தலைவா..!

கானகம் கூட உங்கள் வீடானது
மரங்கள் கூட உங்கள் கூடானது
தேசம் மீட்பதே உங்கள் இலக்கானது
இளைஞர்கள் சேனைகள்
உங்கள் துணையானது
உலகத் தமிழர்களுக்கு எல்லாம்
உங்கள் பெயர் உயிரானது
காலம் தந்த வீரத்தமிழா எங்கள் தலைவா..!

வரி உடையில் உங்கள் நடை கண்டு
எதிரி படைகள் குலை நடுங்கும்
ஆண்டுக்கு ஒரு முறை
உங்கள் குரல் கேட்க்க
தமிழினம் மட்டுமா காத்திருக்கும்
சிங்கள அரசோடு உலக அரசும்
அல்லவா…..
ஒன்று கூடி செவி தீட்டி காத்திருக்கும்
அப்போதே நாம் உணர்ந்து விட்டோம்
நீங்கள் எங்கள் தேசத்தின்
தந்தை என்றும்
நீங்கள் எங்கள் தேசத்தின்
சொத்து என்றும்
தமிழர் எழுச்சிக்கு உரமிட்ட
எங்கள் தலைவா!

உங்கள் சுட்டு விரலுக்குள்ளே
எதிரி மட்டுமா சுழன்றான்
வல்லமை பேசும் வல்லரசுகளும்
அல்லா…
சுழன்றது எம் தலைவா
உங்கள் சொல்லும் செயலும் ஒன்றே
உங்கள் தீர்க்க தரிசனமும் நன்றே
என்று இன்றே நாம்
உணர்கின்றோம் நம் தலைவா….!

கரிகாலன் எங்கள் காவலன்
அவன் புவியாழ வந்தவன்
தமிழர் எமக்கு அடையாளம் தந்தவன்
களத்தில் எதிரியை வென்றவன்
தமிழர்கள் இதயத்திலே உறைந்தவன்
தமிழரின் துயரம் துடைத்திட
வந்த இறைவனிவன்
எதிரிக்கும் மனிதநேயம் காட்டும்
மனிதநேய வித்தகன்
அண்ணனாய் எம்மை வழி நடத்தியவன்
அணையாத விளக்காய்
எமக்கு ஒளி தருபவன்
இருள் இல்லை ஒரு நாளும் எமக்கு
எம் தலைவன் சூரியதேவனின்
கொள்கை வழியில் நடந்தால்…!

வீழ்ந்து கிடந்தோம் உங்கள்
வரவால் எழுந்தோம்
தலை நிமிர்ந்தோம்
அடிமை என்று எம்மை வதைத்தவரின்
சிறையை உடைத்தோம்
ஐநா வரை குரல் தொடுத்தோம்
தமிழர் என்னும் இனத்தின்
நிலை உரைத்தோம்
உங்கள் வரவால் எம் தலைவா
எங்கள் தமிழ் குமரா
காலத்தை வென்ற மா தலைவா
உங்கள் வரவை எம் விழிகள்
நோக்கி காத்திருக்கிறதே
வாரும் எங்களுக்காய் வாரும்
தமிழர் எங்கள் தலைவா
எம் இன்னிலையை பாரும்
தலைவா எங்கிருந்தாலும்
நீங்கள் வாழ்க
எங்களுக்காக அவதரித்த
உத்தமனே வாழ்க!

– யாழவன் ராஜன் (பிரான்ஸ்)