இந்தியாவில் 1,866 அரசியல் கட்சிகள்!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015

இந்தியாவில் கடந்த மார்ச் 2014 முதல் சென்ற மாதம் வரை 239 புதிய அமைப்புகள் அரசியல் கட்சி அங்கீகாரம் கேட்டு தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளன. இதையடுத்து, தற்போது இந்தியா முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,866-ஆக உள்ளது. 

இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- 
ஜூலை 24, 2015 வரையிலான தகவலின்படி, 1866 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. அவற்றில், 56 கட்சிகள் தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகாரம் பெற்றவை. மற்றவை அங்கீகாரம் அளிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள். கடந்த 2014 பொதுத்தேர்தலில் 464 அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. கடந்த 2014-ல் மார்ச் 11 முதல் 21-ந்தேதி வரை மட்டும் 24 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 26-ந்தேதி ஒரே நாளில் மேலும் 10 புதிய கட்சிகள் பதிவு செய்தன.

இவை அனைத்தும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு ஒருவான கடசிகளாகும். இதையடுத்து கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் நாட்டின் மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,627-ஆக ஆனது. அதற்கு பிறகு 239 புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. இந்த புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தேர்தலில் தனிச்சின்னத்துடன் போட்டியிடுவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் தற்போது கைவசம் உள்ள 84 சின்னங்களில் இந்த புதிய கட்சிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.