இந்து கோவிலில் குண்டு வைத்த நப ரை அடையாளம் காட்டினால் சன்மானம் வழங்கப்படும்

வியாழன் ஓகஸ்ட் 20, 2015

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மதேவன் இந்து கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடித்து சிதறியது. இதில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தாய்லாந்து பொலிசார் தேடி வருகின்றனர். 

 

இந்த நிலையில் கோவிலுக்கு குண்டு வைத்தவரின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. 

 

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் இளைஞர் ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது. அவர் மஞ்சள் நிற ‘டி-சர்ட்’ அணிந்து உள்ளார். ஒரு பை வைத்து உள்ளார். கோவிலுக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த சாமி சிலைகளை படம் எடுத்து உள்ளார். சந்தேகநபரின் முடி கருமை நிறத்தில் உள்ளது. கையில் பட்டைகள் அணிந்து இருந்தார். குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாக கோவிலில் இருந்து அவர் வெளியேறி விட்டார். 

 

இந்தநிலையில் தாய்லாந்து நாட்டின் காவல்துறை, குற்றவாளி என சந்தேகப்படும் இளைஞரின் கணினி உருவப்படத்தை வெளியிட்டுள்ளது.  மேலும் அவரை பற்றி துப்புக் கொடுத்தால் 1 மில்லியன் பாஹ்த் (தாய்லாந்து பணம்) பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் இது பற்றி பிரதமர் பிரயுத் சான் யூச்சா கூறும் போது, “குற்றவாளி மாட்டிவிடக் கூடாது என்பதால் அவர் கொல்லப்பட வாய்ப்புள்ளது. எனவே குற்றவாளிக்கு நெருக்கமானவர்கள் அவனை உடனே சரண் அடையும் படி கூறுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்