இனஅழிப்பு இன்னும் முடியவில்லை வெறும் காட்சி மாற்றமே இலங்கையில்

ஞாயிறு சனவரி 24, 2016

சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களுக்கும், நம்பிக்கை கொடுத்தவர்களுக்கும் பேரிடியாக இலங்கையின் தற்போதைய நிலைமைகளை வெட்டவெளிச்சமாக்கி வருகின்றன மனித உரிமை அமைப்புக்கள்.

புதிய ஆட்சியாளர்களுக்கு நல்லிணக்க, நல்லாட்சி அரசு என பட்டயம் கொடுத்து, பல்வேறு நாடுகளும் சாமரம்வீசி தங்கள் தங்கள் ஆதாயங்களைப் பெறமுனைந்தாலும், உண்மையில் இலங்கைத் தீவில் இப்போதும் இனஅழிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்பது அம்பலமாகிவருகின்றது. இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் ‘ஆட்சி மாற்றம் ஒரு காட்சி மாற்றமே’ தவிர, இனவாதத்தின் கோரமுகம் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றது என்பதை உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பொன்று ஆதாரப்படுத்தியிருக்கின்றது.

மைத்திரிபால சிறிசேன சிறீலங்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஓராண்டாகிவிட்டபோதும், தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் சிங்களப் படைகளால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்று தென்னாப்பிரிக்காவைக் சேர்ந்த மனித உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தாலும், தமிழர்கள் சிலர் இன்றளவும் கடுமையான வன்முறைக்கும் சித்ரவதைக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் உள்ளாகிவருவதாக அக்குழு ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது. 

முன்பு விடுதலைப் புலிகள் அமைப்பில் செயலாற்றியவர்கள் மற்றும் சிறார் போராளியாகச் சேர்க்கப்பட்டவர்களில், ஆண்கள் பதினைந்து பேரையும் பெண்கள் ஐந்து பேரையும் இந்தச் சர்வதேச அமைப்பு விசாரித்திருந்தது. பாதுகாப்பின் நிமித்தம் அந்தச் சாட்சியாளர்களின் விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படவில்லை என்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் 2015ம் ஆண்டில் அடிக்கடி பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டு சாட்சியமளித்தவர்களின் விபரங்களை வெளியிட சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் மறுத்திருக்கின்றது.

எனினும், தகவல் தெரிவித்த அனைவருமே, மைத்திரிபால சிறிசேனவின் (2015ம் ஆண்டு) ஆட்சியில் சிறீலங்காக் காவல்துறையினராலும், இராணுவ உளவுப் பிரிவினராலும் மோசமான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஒரே நேரத்தில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொடுமைகளையும் அனுபவித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நடந்தேறிவரும் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு தமிழ் அரசியல்வாதிகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளும் அறிந்து வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கவலையளிக்கும் வகையில் இலங்கையில் வெள்ளை வான்கள் இன்னும் செயற்படுவதாகவும், இது வழக்கமான நடவடிக்கையயான்றாக இருப்பதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தைச் சேர்ந்தவரும், ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவருமான யஷ்மின் சூகா தெரிவித்துள்ளார். அடக்கு முறை தொடர்பான அரச இயந்திரத்தை நீக்குவதற்கு வழி செய்யும் அவசர பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு ஒன்று இல்லாததால் இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது இருக்க முடியாது என்பதை இது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவைஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்கள் இலங்கைக்கு திரும்பிச் சென்றால் அவர்களும் இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று எச்சரித்துள்ள அந்த அமைப்பின் ஆய்வாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு படையயடுத்து வரும் பல்வேறு நாடுகளின் அரசியல் பிரமுகர்களும், இராஜதந்திரிகளும் புதிய அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் நிலையில், சிங்களப் பேரினவாதத்தின் உண்மை முகத்தை தென்னாப்பிரிக்காவைக் சேர்ந்த மனித உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டம் அம்பலப்படுத்தியிருக்கின்றது.

ஆனாலும், கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது என சிறீலங்கா ஆட்சியாளர்களைப் பாராட்டியுள்ளார். அதேபோன்றுதான், சிறிசேனா மேற்கொள்ளும் அணுகுமுறை பாராட்ட தகுந்ததாக இருக்கிறது என்று இலங்கைக்கு கடந்தவாரம் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இன்னொரு பாராட்டுப் பத்திரத்தை வழங்கியுள்ளார். உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டத்தின் அறிக்கை வெளிவந்ததன் பின்னரேயே இவர்கள் இருவரும் பாராட்டியுள்ளதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, நல்லாட்சி என்ற பெயருடன் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கண்ணுக்குத் தெரியாத தமிழின அழிப்பை இந்தச் சர்வதேசம் அம்பலப்படுத்த முன்வரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. காணாமல்போனவர்கள் தொடர்பான சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்குழு தமது விசாரணைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில்தான், காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார். காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது இவரது கருத்து.

காணாமல்போனவர்கள் குறித்து மகிந்தவின் ஆட்சியில் பங்கேற்றிருந்த மைத்திரிபால சிறீசேனவிற்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவிற்கோ தெரியாமல் இருக்கமுடியாது. உண்மைகளைத் தெரிந்துகொண்டும் இருவரும் நடாகமாடிவருகின்றனர்.  காணாமல்போன இரு சிறுவர்கள் கடந்த ஆண்டு இடம்பெற்ற சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது மைத்திரிபால சிறீசேனவின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நிற்கின்ற ஆதாரங்கள் இருந்தும் இன்றுவரை அந்தச் சிறுவர்களை கண்டுபிடிக்க முயலாத சிங்களப் பேரினவாதம், காணாமல்போன ஏனைய தமிழ் மக்களைக் கண்டுபிடித்துக்கொடுக்கும் என்று நம்பியிருக்க முடியாதுதான். ஆனால் எந்தவித ஆதாரங்களுமின்றி காணாமல்போனவர்களை உயிரிழந்துவிட்டதாகக் கூறுவது சிங்களப் பேரினவாதத்தின் மமதையன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.

எனவே, காட்சி மாறினாலும் இனவாத ஆட்சி மாறாத சிங்களப் பேரினவாதத்தை சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இன்னும் இன்னும் புதிய ஆதாரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் முன் கொண்டுசென்று சேர்க்க தமிழர்கள் தொடர்ந்து ஓயாது முற்படவேண்டும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு