இனப்பிரச்சினை வேறு, வன்னிப் போர்க்குற்றம் வேறு!

திங்கள் ஓகஸ்ட் 31, 2015

இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணை நின்று போனமை தமிழ் மக்களுக்கு தாங்கொணாத வேதனையைத் தந்துள்ளது. தமிழ் மக்களின் முழு நம்பிக்கையும் போர்க்குற் றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை மீதிருந்த நிலையில்,  சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பமில்லை என்ற செய்தி மீண்டும் ஓர் இழப்பை சந்தித்தது போன்ற உணர்வை நம் அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் கடவுளுக்குச் சமமான அளவில் அமெரிக்காவை நம்பியிருந்தனர். ஆனால் மைத்திரி -ரணில் ஆட்சியில் சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதுபோல அமெரிக்கா நடந்து கொண்டமை பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது எனலாம்.

 

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை விவகாரத்தை எடுத்து, அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அயராது பாடுபட்ட அமெரிக்கா இப்போது இப்படி மாறியது ஏன்? இந்த மாற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் கொழும்புத் தலைமை மெளனமாக இருப்பதன் சூத்திரம் என்ன? ஒன்றுமே புரியாத புதிராக உள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் போதெல்லாம் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்கள் வைத்த நேர்த்திகள் எத்தனை?

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானம் என்ன? அதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதகம் யாது? என்பது பற்றி எதுவும் தெரியாத சாதாரண மக்களும் இறைவா! ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற வேண்டும் என்று மன்றாடியதன் அடிப்படை அனைத்தும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடக்கும் என்பதுதான்.

 

ஆனால், சமகால சூழ்நிலையும் அமெரிக்காவின் இராஜாங்க துணைச் செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு வந்து போனதன் பின்பான நிலைமையும் சர்வதேச விசாரணை சாத்தியமில்லை என்பதை உறுதி செய்துள்ளது. இலங்கை இன விவகாரம் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு அமெரிக்கப் பிரதி நிதிகள் வந்து போன பின்பான ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இருந்த சூழ்நிலை மாற்றத்துக்குள்ளாகி, நிஷாவின் வருகைக்குப் பின்பான நிலைமை நிஷா புயலுக்குப் பின்பான வடக்கின் புவியியல் சூழ்நிலை எப்படி இருந்ததோ அதுபோன்ற நிலையை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி விட்டது.

 

எங்களின் இழப்புகள் அனைத்தும் வீணாகிப் போயிற்று. நாங்கள் நம்பியிருந்த தமிழ் அரசியல் தலைமை கொழும்புக்கும் அமெரிக்காவுக்கும் இணங்கிப் போயிற்று என்ற உண்மைகளை தமிழ் மக்கள் இப்போது உணரத் தலைப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஒரு கதை. லண்டனில் இன்னொரு கதை என்றவாறு தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் ஈனர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள் நம்பிக் கெட்டனர்.  

 

எது எப்படி ஆயினும் தீர்ப்பை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது என்பதை அந்த நாடும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். அதேநேரம் இலங்கை அரசுக்கும் கொழும்பில் உள்ள தமிழ் அரசியல் தலைமைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் தாழ்மையாக நாம் சொல்லும் செய்தி.

 

வன்னியில் நடந்த போர்க்குற்றமும் தமிழ் இன விவகாரமும் ஒன்றல்ல. போரில் தமிழினம் அழிக்கப்பட்டது தொடர்பிலான சர்வதேச விசாரணையை இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்புபடுத்தி,  இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் போதும், முன்பு நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்தால், வன்னியில் ஆறாய் ஓடிய அழு கண்ணீரும் குருதியும் வஞ்சகத்தை வஞ்சிக்கும் என்பது நிறுதிட்டமான உண்மை.