இரட்டை கொலை வழக்கு - அமெரிக்க நீதி மன்றத்தில் திடீர் திருப்பமா..?

வியாழன் ஜூலை 30, 2015

அமெரிக்காவில் இரட்டைக் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின்போது நேரில் ஆஜராகி வாதிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 


இந்தியாவை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 29). கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில் பென்சில்வேனியா மாநிலத்தில் கிங் ஆப் பிரஸ்சியா பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 2 பேரை கொலை செய்த குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 


சத்யவதி வெண்ணா (வயது 61) மற்றும் அவரது 10 மாத பேத்தி சான்வி வென்னா ஆகியோரை எச்.௧பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ள மென்பொறியாளரான ரகுநந்தன் கடத்தும் முயற்சியின்போது இந்த கொலை நடந்துள்ளது.

 


இந்த கொலை வழக்கு குறித்து கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் ரகுநந்தன் தனது சார்பில் விளக்கம் அளிப்பதற்கு நேரில் ஆஜராவதற்கு மாண்ட்கோமெரி நகர நீதிபதி ஸ்டீவ் ஓ நீல் அனுமதி அளித்த நிலையிலும், உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பான மற்றும் கடுமையான நடைமுறைகளை குறித்து அனுமதி அளிப்பதற்கு முன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் என்று அந்நாட்டு உள்ளூர் ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

 


ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவரான ரகுநந்தனுக்கு தேவைப்பட்டால் உதவி செய்வதற்கு என ஸ்டீபன் ஹெக்மேன் மற்றும் ஹென்றி ஹில்லெஸ் என இரண்டு வழக்கறிஞர்களை நீதிபதி நியமித்துள்ளார்.