இலவசக் கல்வி பாதுகாக்கப்படுமா?

வெள்ளி சனவரி 15, 2016

கல்வி என்ற சொல்­லுக்கு பல­ராலும் பல அர்த்­தங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அந்த அர்த்­தங்­களின் அடிப்­ப­டையில் நோக்­கு­கின்­ற­போது, ஒருவர் இந்த உலகில் பெறு­கின்ற அறிவு, ஆற்றல், அனு­பவம் என்­ப­வற்றின் தொகுப்பே  கல்வி எனச் சுருக்­க­மாகக் கூற முடியும்.

ஒருவர் பெறு­கின்ற கல்வி அவ­ரது ஆளு­மைக்கும், ஆற்­ற­லுக்கும் திற­னுக்கும் அடித்­த­ள­மாக இருந்து அவ­ரது ஒவ்­வொரு செயற்­பாட்­டையும் சிறப்­புற மேற்­கொள்ள வழி வகுக்கும். இவ்­வா­றான கல்­வியை, கல்வி கற்கும் வய­தெல்­லையைக் கொண்ட ஒவ்­வொரு பிள்­ளையும் கற்­றுக்­கொள்­வதும் கற்­றுக்­கொள்ள வழி ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும். 

அந்த அவ­சி­யத்தை இலக்­காகக் கொண்டே ஒவ்­வொரு பிள்­ளையும் கல்வி கற்­ப­தற்­கான உரிமை உல­க­ளா­விய ரீதியில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் கூட கல்­விக்­கான உரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த அடிப்­படை உரி­மையை பெற்­றுக்­கொள்ளும் கடமை இந்­நாட்டில் பிறக்கும் ஒவ்­வொரு பிள்­ளைக்கும் உரித்­தா­னது. 

 

உல­க­ளா­விய ரீதியில் கற்றல் - கற்­பித்தல் செயற்­பா­டுகள் பல வடி­வங்­களில் முறை­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. உலகின் சில நாடு­க­ளி­லேதான் இல­வசக் கல்வி முறைமை நடை­மு­றையில் காணப்­ப­டு­கி­றது. ஒரு சில ஐரோப்­பிய நாடு­களில் ஆரம்­பக்­கல்விப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வச கல்வி முறைமை உள்­ள­போ­தி­லும், இடை­நிலைப் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள்  கொடுப்­ப­னவு செலுத்­தியே கல்வி கற்கும் நிலை காணப்­ப­டு­கி­றது.   இருந்­த­போ­திலும், ஆரம்பக் கல்வி முதல் பல்­க­லைக்­க­ழகக் கல்வி வரை இல­வ­ச­மாக வழங்கும் பிரேசில், மொறி­சியஷ் போன்ற விரல்­விட்டு எண்ணக் கூடிய நாடு­களின் வரி­சையில் இலங்­கையும் காணப்­ப­டு­வது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது.

இலங்­கையும் இல­வசக் கல்­வியும்
ஏறக்­கு­றைய 2300 வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட கல்வி வர­லாற்றைக் கொண்­ட­தொரு நாடாக இலங்கை விளங்­கு­கி­றது. இலங்­கையை ஆண்ட மேற்­கு­ல­கினர் அவர்­களின் கொள்­கை­க­ளுக்கும் தேவை­ளுக்­கு­மேற்ப  கல்வி வாய்ப்பை வழங்­கினர்.

இருந்­த­போ­திலும், அவர்­களின் கொள்­கை­க­ளுக்கு இணங்­காத பலர் கல்வி வாய்ப்பை இழந்­த­மையை  இலங்­கையின் கல்வி வர­லாற்றில் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது. 

இருப்­பினும், 1836ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட கோல்­புறூக் ஆணைக்­கு­ழுவின் ஊடாக பாட­சாலைக் கல்வி முறைமை என்ற நவீன கல்வித் திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­திட்­டத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட முத­லா­வது பாட­சா­லை­யாக கொழும்பு றோயல் கல்­லூரி திகழ்­கி­றது. இதன் பின்னர் பல பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டன. 

1931ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் இலங்கைக் கல்வி முறை­மை­யா­னது இல­வசக் கல்வி என்ற நிலைக்கு மாற்­றப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்த முயற்­சியின் பய­னாக கால­னித்­துவ காலத்து இலங்கை நிரு­வாகப் பேர­வையின் முதல் கல்வி அமைச்­ச­ரான கிறிஸ்தோபர் வில்­லியம் விஜே­யகோன் கன்­னங்­க­ரா­வினால் 1940ஆம் ஆண்டு இல­வசக் கல்வி முறைமை இந்­நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 

ஆரம்பப் பாட­சாலை மாண­வர்கள் முதல் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வரை இல­வசக் கல்வி வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற இலக்­குடன் அந்தப் பெருந்­த­கையால் இல­வசக் கல்வி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதனால், இல­வசக் கல்­வியின் தந்­தை­யென இது­வரை கன்­னங்­கரா அழைக்­கப்­ப­டு­கிறார். மத்­திய மகா வித்­தி­யா­ல­யங்கள் அவ­ரி­னா­லேயே உரு­வாக்­கப்­பட்­டன.

முத­லா­வது உரு­வாக்­கப்­பட்ட மத்­திய மகா வித்­தி­யா­ல­ய­மாக விளங்­கு­வது மத்­து­கம மத்­திய மகா வித்­தி­யா­ல­ய­மாகும். நக­ரப்­பு­றங்­களில் வாழ்ந்த சமூ­கத்தின் உயர் வர்க்­கத்­தி­னர்கள் மாத்­திரம் பெற்று வந்த கல்வி வாய்ப்பை கிரா­மப்­புற  மக்­க­ளுக்கும் கிடைக்கச் செய்த பெருமை சீ.டப்­ளியு.டப்­ளியு கன்­னங்­க­ரா­வையே சாரும் என்­பதும் மனதில் நிறுத்­தப்­ப­ட­வேண்­டி­யது.

அவ­ரினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இலவச் கல்வி வாய்ப்பின் மூலமே இலங்கை மக்கள் எழுத்­த­றிவு மிக்­க­வர்­க­ளாக உள்­ளனர். தென்­கி­ழக்­காசிய நாடு­களின் சனத்­தொ­கையில் 98.1 வீதம் எழுத்­த­றிவு கொண்ட மக்­களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்­கி­றது. அர்ப்­ப­ணிப்­புள்ள ஆசி­ரியர்­களின் கட­மை­யு­ணர்வும் கற்­பித்தல் உணர்வும் இந்த நிலையை அடையச் செய்­தி­ருக்­கி­றது.

பாட­சாலைக் கல்­வியின் தாக்கம் இலங்­கையை ஆசி­யா­வி­லேயே  எழுத்­த­றி­வு­டை­யோரை அதிகம் கொண்ட நாடு என்ற நிலைக்கு உயர்த்­தி­யி­ருக்­கி­றது என்றால் அதற்குக் கார­ண­மாக அமை­வது பாட­சா­லையின் இல­வசக் கல்வி  முறைமை எனக் குறிப்­பிட முடியும். 

ஆனால், சம­கா­லத்தில் பாட­சாலை இல­வசக் கல்வி முறை­மை­யா­னது மேல­திக வகுப்பு அல்­லது டியூசன் வகுப்­புக்கள் அல்­லது  கல்வி முகாம்கள் என்ற பெயர்­களில் பணம் தேட­லுக்­கான கல்வி வியா­பார முறை­மை­யாக மாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

இதன் மூலம் பாட­சா­லை­க­ளி­னூ­டாக வழங்­கப்­படும் இல­வசக் கல்­வியின் எதிர்­காலம் இத்­த­கைய மேல­திக வகுப்­புக்­க­ளினால் சீர­ழிக்­கப்­ப­டுமா என்ற கேள்­வியும் அச்­சமும் சமூக மட்­டத்தில் பர­வ­லாகக் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

பாட­சா­லைக்­கல்­வியும்  டியூசன் வகுப்­புக்­களும்
1940ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட இலவச் கல்வி முறை­யி­னூ­டாக ஏழை மாண­வர்­களும் பாட­சா­லை­களில் அனு­மதி பெற்று கல்வி வாய்ப்பைப் பெற்­றுக்­கொண்­டனர். மத்­திய மகா வித்­தி­யா­லயம் என்று ஆரம்­பிக்­கப்­பட்ட பாட­சா­லைகள் பின்னர் தேசிய பாட­சாலை, மாகாணப் பாட­சாலை என மாற்­றப்­பட்­டன.

மாகாணப் பாட­சா­லை­களும்  1 ஏபி தரப் பாட­சாலை, 1 சீ தரப் பாட­சாலை, வகை 2, வகை 3 பாட­சா­லைகள் என வகுக்­கப்­பட்­டன. இவ்­வாறு நாடு­பூ­ரா­க­வு­முள்ள ஏறக்­கு­றைய 10,012 பாட­சா­லை­களில் 4,037,857 மாண­வர்கள் இல­வசக் கல்­வியின் பயனைப் பெற்று வரு­கின்­றனர்.
 
இந்­நாட்­டுப்­பிள்­ளை­களின் கல்வி விருத்­திக்­காக முத­லா­வது கல்வி அமைச்சர் கன்­னங்­க­ர­வினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்பட்ட இல­வசக் கல்விப் போதனை மாத்­தி­ர­மின்றி. இல­வச பாட­நூல்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன. அத்­தோடு, முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ஜே.ஆர். ஜய­வர்­த­ன­வினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இல­வச சீரு­டையும், ஆர் பிரே­ம­தா­சா­வினால், தொடங்­கப்­பட்ட இல­வச மதி­ய­வு­ணவும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை பிள்­ளை­களின் கற்­ற­லுக்­கான பணச் செலவை ஓர­ளவு பெற்­றோர்­க­ளுக்குக் குறைத்­தி­ருக்­கி­றது.

நேர­டி­யாக இல­வச சீருடை வழங்­காமல் அதற்குப் பதி­லாக பண பவுச்சர் வழங்கும் நடை­முறை 2015ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது, அவற்றில் நிவர்த்தி செய்யக் கூடிய தவ­று­களும் நடை­முறைச் சிக்­கல்­களும் காணப்­பட்­ட­போ­தி­லும், நேரடி இல­வச சீருடை வழங்­கப்­ப­டு­வ­தனால் இலா­ப­ம­டைந்த ஒரு சிலர் அவற்றை  ஏற்­றுக்­கொள்­ளாது எதிர்த்து கோஷம் எழுப்­பி­ய­தையும், இதில் ஒரு சில கல்­வித்­து­றை­சார்­பு­டை­யோரும் பங்­கு­கொண்­ட­தையும் காண முடிந்­தது. இவர்களும் கல்­வி­யையும் கல்­விசார் விட­யங்­க­ளையும் வியா­பா­ர­மாக்க முனை­ப­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர்.

மாண­வர்­க­ளுக்கு இல­வச மதி­ய­வு­ணவு வழங்­கு­வ­திலும் ஆங்­காங்கே ஒரு சில முறை­கே­டு­களும் மோச­டி­களும் இடம்­பெ­று­வ­தையும் அறியக் கூடி­ய­தா­க­வுள்­ளது. இவற்றில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களும் கல்­வித்­து­றையில் அங்கம் வகிப்­ப­வர்­க­ளேதான். இவர்­களும் கல்வி வியா­பா­ரத்தின் பங்­கு­தா­ரர்­க­ளாகச் செயற்­ப­டு­ப­வர்­க­ளாக உள்­ளனர். 

இவை தவிர, பாட­சா­லை­களில் மாண­வர்­களை தரம் ஒன்று முதல் 12 வரை சேர்த்­துக்­கொள்­வ­தற்கு எவ்­வித கட்­ட­ணங்­களும் பெறக் கூடாது என்று கல்வி அமைச்­சினால் சுற்­று­நி­ரு­பத்­தி­னூ­டாக அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ள போதி­லும், ஒரு சில தேசிய, மாகாணப் பாட­சாலை அதி­பர்கள் அவற்றைப் பொருட்­ப­டுத்­தாது நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பணம் பெறும் கல்வி வியா­பா­ரி­க­ளாகச் செயற்­ப­டு­வதைக் காண முடி­கி­றது. 

இவ்­வாறு பிள்­ளை­களைப் பாட­சா­லை­களில் இணைப்­ப­தற்­காக பணம் பெற்ற அதி­பர்கள் மீதான குற்றம் நிரூபிக்­கப்­பட்டு இட­மாற்­றப்­பட்டும் பணி நீக்கம் செய்­யப்­பட்டும் உள்­ளனர்.

ஒரு சிலர் தொடர் விசா­ர­ணை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். இத்­த­கை­ய­வர்­களின் செயற்­பா­டு­களும் இல­வசக் கல்­வியின் எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்கும் கல்வி வியா­பார முயற்­சி­யா­கவே கரு­தப்­பட வேண்­டி­யுள்­ளது.

இந்­நாட்டின் எதிர்­கால சந்­த­தி­யினர் இல­வசக் கல்­வியின் முழுப் பய­னையும் அடைந்­து­கொள்ள வேண்­டு­மென்­ப­தற்­காக வழங்­கப்­ப­டு­கின்ற அனு­கூ­லங்­களை முறை­யாக நிறை­வேற்ற ஒரு சில ஆசி­ரி­யர்­களும் அதி­பர்­களும் தயங்­கு­வது அல்­லது அவற்றைப் புறக்­க­ணித்துச் செயற்­ப­டு­வது,  அவற்றை வழங்க மறுப்­பது அங்­கீ­க­ரிக்­கப்­பட முடி­யா­தவை.  

இற்­றைக்கு 30 அல்­லது 40 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாட­சா­லை­களில்  தவணைக் காலத்­திற்குள் பாடப்­ப­ரப்­புக்கள் ஆசி­ரி­யர்­க­ளினால் நிறைவு செய்­யப்­பட்டு பரீட்­சை­க­ளுக்கும் மாண­வர்கள் தோற்­றினர். அவ்­வாறு தோற்­றிய மாண­வர்­களில் பலர் சித்­தி­ய­டைந்து வெவ்­வேறு துறை­களில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குச் சென்று பட்­டப்­ப­டிப்­புக்­களை  நிறைவு செய்து உயர்­ப­த­வி­க­ளையும் வகிக்­கி­றார்கள். 
அக்­கால ஆசி­ரி­யர்கள் கற்­பித்­தலை பணம் தேடும் தொழி­லாகக் கரு­த­வில்லை.  ஒரு புனித பணி­யா­கவே கரு­தினர்.  

பாட­சாலை நேரங்­களை மாண­வர்­களின் வகுப்­பறைக் கற்றல் கற்­பித்­த­லுக்­கான நேர­மாகப் பயன்­ப­டுத்­தினர். அவ்­வா­றான ஆசி­ரி­யர்கள் இன்றும்  கௌர­வத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றனர். 

ஆனால், சம­கா­லத்தில்  சில டீயூசன் வகுப்­புக்­களை நடாத்­து­கின்ற அல்­லது அவற்றின் முகா­மை­யா­ளர்­க­ளாகச் செயற்­ப­டு­கின்ற  சில ஆசி­ரி­யர்­கள், ஆசி­ரியப் பணி­யினை பாட­சா­லையில் பகுதி நேரத் தொழி­லா­­கவும் டியூசன் வகுப்­புக்­களில் முழு நேரத் தொழி­லா­கவும் கருதிச் செயற்­ப­டு­வது இல­வசக் கல்­வியின் எதிர்­கா­லத்தைக் கேள்விக் குறிக்குள் தள்­ளி­யி­ருப்­ப­தோடு கல்வி வியா­பா­ரத்தை மேலோங்கச் செய்­தி­ருக்­கி­றது.

மாண­வனின் பாட­சாலை வரவில் கவனம் கொள்­ளாத டியூசன் ஆசி­ரி­யர்கள் அல்­லது ஆசி­ரிய முகா­மை­யா­ளர்கள் டியூசன் வகுப்­புக்­கான மாண­வனின் வரவில் அக்­க­றை­கொண்டு அம்­மா­ண­வனின் பெற்­றோ­ரிடம் முறை­யி­டு­ப­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றமை அவர்­களின் கல்வி வியா­பா­ரத்தில் உள்ள அக்­க­றையை தெளி­வு­ப­டுத்­து­கி­றது. 

அத்­துடன், ஒரு சில ஆசி­ரி­யர்­க­ளினால் பாட­சாலை தவணைக் கால பாட­வே­ளை­களில்  பாடப்­ப­ரப்­புக்­களை நிறைவு செய்­வதில் காட்­டாத அக்­கறை டியூசன் வகுப்­புக்­களில் நிறைவு செய்­வதில் காட்­டப்­ப­டு­வதை எந்தக் கண்­ணோட்­டத்தில் நோக்­கு­வது?

கல்­விக்­கான இணையத்­தள விப­ரங்­களின் பிர­கா­ரம், நாட­ளா­விய ரீதியில் ஏறக்­கு­றைய 7600 டியூசன் நிலை­யங்கள் உள்­ளன. ஆனால் இவ்­வெண்­ணி­கையை விட அதி­க­மா­ன­தா­கவே காணப்­படக் கூடும். இந்த  நிலை­யங்­களில் இடம்­பெ­றுக்­கின்ற கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டுகள் எந்­த­ள­வுக்கு வினைத்­தி­ற­னுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்­பது கேள்­விக்­கு­றி­யாகும்.

ஒரு சில கல்வி நிலை­யங்­களில் கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டுகள் வினைத்­தி­ற­னுடன் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் பல கல்வி நிலை­யங்­களில் இடம்­பெ­று­கின்ற  கல்வி நட­வ­டிக்­கைகள் வரு­வாய்க்கு முன்­னு­ரிமை வழங்கி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவே அறிய முடி­கி­றது.

ஏனெனில், ஒரு வகுப்பில் மாணவர் எண்­ணிக்­கை­யா­னது 35 என வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ள­போ­தி­லும், பல டியூசன் வகுப்­புக்­களில் 45க்கு மேற்­பட்ட மாண­வர்கள் ஒரே நேரத்தில் கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். இக்­கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டுகள் எத்­த­கைய அடை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதும் சாதா­ர­ண­மாக ஊகித்­துக்­கொள்ள முடியும்.

இருப்­பினும், எல்லா ஆசி­ரி­யர்­க­ளையும் இந்த கல்வி வியா­பார வட்­டத்­திற்குள் சேர்த்­துக்­கொள்ள முடி­யாது. அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­டு­கின்ற சம்­ப­ளத்­திற்கு ஏற்ப ஆசி­ரியர் பணி­யினை கௌர­வப்­ப­டுத்தி கட­மை­பு­ரி­கின்ற, மாண­வர்­க­ளி­னது கல்வி அடை­வு­க­ளிலும் பாட­சா­லையின் விருத்­தி­யிலும் அக்­கறை கொண்டு செயற்­ப­டு­கின்ற ஆசி­ரி­யர்­களும் சம­கா­லத்தில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும். 

பெற்­றோர்­களும் இல­வசக் கல்­வியின் பாது­காப்பும்
இல­வசக் கல்­வியின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­கு­றி­யாக்கி கல்வி வியா­பாரம் களை­கட்­டு­வ­தற்கு பெற்­றோர்­களும் கார­ண­கர்த்­தாக்­க­ளாக இருக்­கி­றார்கள் என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும்.

பெரும் போட்­டித்­தன்மை கொண்ட பரீட்­சை­க­ளா­க­வுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தர,  உயர்­தர தேசிய பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் தமது பிள்­ளைகள் நல்ல பெறு­பேற்றைப் பெற வேண்டும் என்­ப­தற்­காகப் பெற்­றோர்கள் படும்­பாடே பெரும்­பாடு. 

ஒரு பாடத்­திற்கு பல டியூசன் வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பும் பெற்­றோர்­களும் செல்லும் பிள்­ளை­களும் உள்­ளனர். ஏறக்­கு­றைய மாத­மொன்­றுக்கு டியூசன் வகுப்­புக்­க­ளுக்­காக 20 ஆயி­ரத்­திற்கும் மேல­தி­மாகச் செலவு செய்யும் பெற்­றோர்­களும் இருக்­கி­றார்கள். இவ்­வாறு பிள்­ளை­களின் கல்­விக்­காக செலவு செய்யும் பெற்­றோர்­க­ளினால் வேறு சில பெற்­றோர்­களும் பிள்­ளை­களும் சிர­மத்­திற்­குள்­ளா­கின்­றனர்.

டியூசன் வகுப்­புக்­களின் தாக்கம் மத்­திய தர வர்க்க குடும்­பங்­களின் பொரு­ளா­தா­ரத்­திலும் பெரும் சுமையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஒரு பாட­சாலை வகுப்பில் உள்ள 30 மாண­வர்­களில் 25 மாண­வர்கள் டியூசன் வகுப்­புக்­க­ளுக்குச் செல்­லும்­போது எஞ்­சிய 5 மாண­வர்­க­ளி­னாலும் செல்­லாமல் இருக்க முடி­யாது.

அவ்­வாறு அம்­மா­ண­வர்கள் செல்­லா­தி­ருப்­பது அவர்­களை ஏனைய மாண­வர்­களின் நகைப்புக் கண்­ணோட்­டத்­திற்கு இட்டுச் செல்­கி­றது. பெற்­றோர்கள் மத்­தி­யிலும் கௌரவப் பிரச்­சி­னையை உரு­வாக்கி விடு­கி­றது. இக்­கௌ­ரவப் பிரச்­சி­னை­யா­னது சில பெற்­றோர்­களை பொரு­ளா­தார நெருக்­க­டிக்­குள்ளும் தள்­ளி­வி­டு­வதை  சமூ­கத்தின் மத்­தியில் சாதா­ர­ண­மாக அவ­தா­னிக்க முடிகிறது. 

பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் பெற்றோர் பாடசாலை மட்டத்தில் பிள்ளைக்கான பாட அலகுகள் நிறைவு செய்யப்படுகின்றதா? பாடசாலையில் பிள்ளையின் கல்வி அடைவு எந்த நிலையில் உள்ளது பிள்ளைக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகிறது என்பன போன்ற விபரங்களைப் பாடசாலை மட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வது அவர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். 

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் மாத்திரம் பெற்றோர்களின் பொறுப்பு முடிந்துவிடுகிறது என்ற மனநிலை மாறி பாடசாலை சமூகத்தின் ஒரு அங்கமாகச் செயற்படும் பெற்றோர் பாடசாலையினதும் ஆசிரியர்களினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும் அக்கறை கொள்வது மிக முக்கியமாகும்.

இந்த முக்கிய பொறுப்பானது பொறுப்பற்ற ஒரு சில ஆசிரியர்களின் கல்வி வியாபாரத்தினால் இலவசக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுக்கும்.

இலவசக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டுமாயின் டியூசன் வகுப்புக்கள் மட்டுப்படுத்தப்படுவதோடு வரையறை செய்யப்பட வேண்டும். எக்காரணங்களினால் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறித்து ஆராயப்படுவது அவசியமாகும்.. வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனாக்கப்படுவதுடன் அவற்றில் பாதகங்களை உருவாக்கும் காரணிகளும் அடையாளம் காணப்பட வேண்டும்.

பாடசாலைச் சூழல் ஆரோக்கியமிக்க, கல்வி நடவடிக்கைக்கான தளமாக மாற்றப்பட்டு மாணவர்களின் சிறப்பான அடைவுகளுக்கு பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளே முக்கிய காரணமென்ற மனப்பதிவுகள் ஏற்படுத்தப்படுகின்றபோது களைகட்டிக்கொண்டிருக்கும் கல்வி வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்டு இலவசக் கல்வி பாதுகாக்கப்படும்.

இல்லையேல் இலவசக் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.

- எம்.எம்.ஏ.ஸமட் -