ஈழக் கோட்பாட்டை முன்நிறுத்தும் கட்சியைத் தெரிவு செய்வது காலத்தின் கட்டாயம்

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
அன்பார்ந்த தமிழ் மக்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!   மட்டக்களப்பு மாவட்ட மக்களும் தாயக உரிமைக்காக போராடி ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளையும்இ பொதுமக்களையும் இழந்த வீரம் விளைந்த மாவட்டம். துரோகிகள் மட்டக்களப்பு மாவட்ட மக்களை இனவெறி சிங்களவர்களிடம் காட்டிக் கொடுத்து பல்வேறு வடிவத்தில் நெருக்கடிகளை தொடுத்த போதிலும், தங்களின் தாயக உரிமை ஒன்றே பிரதானம் என வெளிக்காட்டியவர்கள். இன்றும் தாயக வேட்கையுடன் செயற்படுவதுடன் அதே நிலைப்பாட்டிலுள்ளவர்கள்.   பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை.   அதனால் தான் நமது இனம் ஆயதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும் - தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.    அவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்?   தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் சனநாயக ஆணையாக வெளிக் கொணர்வதற்கும் அந்நிலைப்பாட்டிலிருந்து தமிழர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டிய தேவை இன்று உண்டு. ஆகவே இங்கு அதிமுக்கியமானது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதல்ல எத்தகைய கொள்கைக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்பதே.   சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளுக்கோ அல்லது அவற்றுக்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கும் எந்த ஒரு கட்சிக்கோ தமிழ் மக்கள் ஆதரவளிக்க முடியாது. அப்படி ஆதரவளிப்பது எமது இனத்தின் ஒட்டுமொத்த அரசியற் தற்கொலைக்குச் சமானமாகும். அப்படியாயின் நாங்கள், அதாவது தமிழ் மக்கள் எந்தக்கட்சிக்கு, அவற்றில் யாருக்கு ஆதரவளிப்பது?   .தேசம் (பிரிக்கப்படாத வடக்கு-கிழக்கு) தாயகம், சுயநிர்ணயம் என்பன வெற்றுக் கோசங்கள் அல்ல. அவை தீர்வுக்கான அடிப்படைகள். இவற்றை ஏற்றுக் கொள்ளாத  எந்தவொரு அரசியலமைப்புத் தீர்வும் - அது சமஷ்டி அரசியலமைப்பாக இருந்தாலும் - அது நீடித்து நிலைக்காது.  உலகெங்கும் உள்ள அரசற்ற தேசங்கள் அனைத்தும் கடைப்பிடிக்கும் அரசியல் தர்மம் இதுவே.  எமது கோரிக்கைகளின் நியாயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசாது - சிங்கள மக்களிடமும் சர்வதேசத்திடமும் எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஒளித்து வைப்பதால் எமக்கான தீர்வு வந்துவிடாது. மாறாக தமிழ் மக்களது அரசியல் தமிழ்த் தேசியம் சார்ந்த சுயநிர்ணய அரசியல்தான் என்ற யதார்த்த்தை கூறக் கூடியவர்களையே நாம் எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்;டும்.    தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தனியே தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் கைகளில் தேங்கி நிற்பதுவும் அவர்கள் தாமே மக்களின் பிரதிநிதிகள் அதனால் தாமே முடிவுகளை எடுப்போம் மக்களும் மக்கள் அமைப்புகளும் தம்மைக் கேள்வி கேட்பது கூடாது என்று கூறுவதும் இனியும் தொடரக் கூடாது.   கூட்டுமுயற்சிகள் அனைத்தும் பேரினவாத சக்திகளுடன் இணைந்து தமிழர்களின் தாயகம் நோக்கிய போராட்டத்தினை முற்றுமுழுதாக மழுங்கடித்து இனத்தின் கருவைவே அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.    ஆகவே, எமது தமிழ் இனத்தினை இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும், தாயகம் நோக்கிய விடுதலைப் போராட்டத்தினை வென்றெடுப்பதற்காகவும் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணயம் போன்ற ஈழக் கோட்பாட்டை முன்நிறுத்தும் கட்சியைத் தெரிவு செய்வது மட்டக்களப்பு மக்களுக்கு மாத்திரமல்ல, அனைத்து தமிழர்களினதும் காலத்தின் கட்டாயம் ஆகும்.     குள்ளநரிக் கூட்டங்களின் குள்ளத்தனங்களை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு கொண்டுவருவோம் என அனைவரும் உறுதியெடுப்போம்.   நன்றி தேசியவாதிகள்  மட்டக்களப்பு மாவட்டம்