ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் விசாரணைகளைப் பாதிக்கச் செய்யலாம்-இராணுவப் பேச்சாளர்

சனி சனவரி 09, 2016

ஐ.எஸ் அமைப்பு குறித்து புலனாய்வாளர்கள் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அந்த விசாரணைகளைப் பாதிக்கச் செய்யலாம் என்பதுடன் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சுதாகரித்துக் கொள்ளவும் கூடும் என்று எச்சரித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முப்படையினரும், புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக 24 மணித்தியாலமும் அது தொடர்பில் அவதானமாக இருக்கின்றனர். எமது இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் கடமைகளை சரியான முறையில் செயற்படுத்துகின்றனர். இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்படும் போது ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து புலனாய்வாளர்களினால் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போகும்.

ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்டிருந்தால், ஊடகங்களில் வெளியாகும் தேவையற்ற செய்திகளின் மூலம் அவர் தகவல்களைப் பெற்றுக் கொள்வார். இதனால் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்விடத்திலிருந்து தமது கடமைகளைச் செய்ய பெரும் சிரமமாக இருக்கும். அதேபோல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பவர் தமது தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளவும் கூடும். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு தரப்பு, புலனாய்வாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றனர். எனவே இது குறித்து தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டார்.