என்னவென்று கிட்டுவை வகைப்படுத்தலாம் - ச.ச.முத்து

சனி சனவரி 16, 2016

என்னவென்று கிட்டுவை வகைப்படுத்தலாம்…,

ஒரு போராளியாக, மதியூகம் நிறைந்த வீரமிக்க ஒரு தளபதியாக, புதிய போராளிகளை உருவாக்கிய ஒரு ஆசிரியனாக, போர்க்காலத்தில் மக்களுக்குள் ஏராளம் சுயசார்பு அமைப்புகளை கட்டமைத்த ஒரு சிற்பியாக, விடுதலை கருத்துகளை காவிச்சென்று மக்களிடம் சேர்க்க ஊடகங்களை உருவாக்கி செல்நெறி வகுத்தவனாக, தடம் மாறி மக்கள் விரோத சக்திகளாக மாறிய தலைமைகளின் கீழ் இருந்த அமைப்புகளை தடுத்து களத்தில் இருந்து அகற்றிய நுட்பம் நிறைந்தவனாக, தமிழ்தேசிய எழுச்சிக்காக கலைகளை எவ்விதம் பயன்படுத்த முடியுமோ அதனைவிடவும் அதிகமாக கலைகளை விடுதலைக்காக ஊக்கப்படுத்திய ஒரு கலை விமர்சகனாக, பல பக்கங்களில் எழுதி சொல்லவேண்டிய விடயத்தை அதனைவிட காத்திரமாக மனதுக்குள் புக வைக்கும் வர்ணங்களை கையாண்ட அற்புதமான ஒரு ஓவியனாக, கவிதையின் அழகியலுக்குள் அதன் புரட்சித்தன்மைக்குள் ஒன்றித்து அதனை ரசிக்கும் கவிதை வாசகனாக, மேடைப் பேச்சுகளின் போலித்தன்மையிலும் எதுகை மோனை நடையிலும் வெறுப்படைந்திருந்த எம் மக்களுக்கு முதன்முதலில் மேடையில் ஒரு புலிவீரன் எத்தனை இயல்பாக யதார்தமாக பேசுவான் என்பதை புரிய வைத்தவனாக, எந்த நேரமும் விடுதலைக்கான ஏதோ ஒரு நகர்வில் நின்றவனாக என்று எத்தனையோ எழுதலாம்.

இதில் ஒவ்வொன்றைப் பற்றியும் பலநூறு பக்கங்கள் எழுதக்கூடிய அளவுக்கு அவனது செயற்பாடுகள், அதில் அவனது ஆளுமை, முழுமையான ஈடுபாடு என்பன இருந்துள்ளன. அமைப்பில் இணைந்தபோது அவன் வைத்திருந்த சிறிய குறிப்பு எழுதும் கொப்பியின் உள்பக்கத்தில் அவன் எழுதி வைத்திருந்த ‘ பழைய முறைகளில் பரிசோதனைகளை செய்துவிட்டு விளைவுகள் மட்டும் புதியதாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை’ என்ற அல்பேர்ட் ஐன்ஸ்ரினின் வாசகத்துக்கு ஏற்றாற் போல அவன் புதிய புதிய கள சோதனைகளை போராட்டபாதையில் நடாத்தி நடாத்தி அதற்குள்ளாகவே மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை இந்த விடுதலைப்போராட்டத்துக்கு வழங்கியவன்.

யாழ்குடா எங்கும் எந்த நேரத்திலும் தொடர் வாகன கவசவாகன அணிகளாக வந்திறங்கி மக்களை தாக்கி சூறையாடி கொன்று சிங்களபடைகள் எறிந்த பொழுகளில் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்று கிட்டு சிந்தித்ததன் விளைவுதான் முகாம்களில் இருந்து வெளிக்கிட எத்தனித்த படைகளை சிறிது நேரம் மறித்து செய்த தாக்குதல்கள். அவை தந்த பாடங்களும் பலன்களுமே கிட்டுவுக்கு புதிய உத்திகளை முகாம்களை சுற்றி காவல் அரண்களை சென்றிபொயின்களை அமைத்து இரவுபகலாக கண்காணிக்கும் முறை. அதன் உச்ச வளர்ச்சிதான் 1985 ஏப்ரல் 10ம்திகதி தமிழீழ தாயக நிலப்பரப்பின் ஒரு பகுதி தமிழர்களின் சுதந்திர நிர்வாகத்துள் வந்தது. 1619 யூன் மாதம் போர்த்துகேசியரிடம் இழந்த தமிழீழ இறைமையை இருநூற்றி சொச்ச வருடத்தின் பின் கிட்டு என்ற அற்புத தளபதி தேசிய தலைவரின் வழிகாட்டலில் மீட்டதும் இவ்வாறேதான்.

இதனை எவ்வாறு சாதித்தான் என்று ஒருமுறை அவனிடமே கேட்டபோது அவனுக்கே உரிய கண்கள் விரிந்த சிரிப்புடன் ‘ உடையாள்புரத்தில் 83ல் ராணுவ கவசவாகனத்தை நேரெதிராக நின்று தாக்கிய நாள் முதல் தொடர்ந்த பல தாக்குதல்களில் அவன் வெறுமனே தானியங்கி துப்பாக்கியை இயக்கியோ உந்துவிசை எறிகணையை செலுத்தியோ மட்டும் நின்றிருக்கவில்லை. சிங்களபடைகளின் உளவியலை, மனோவலிமையின் மையத்தை கணித்தபடியே நின்றிருக்கிறான். அந்த சிங்கள மனோ உறுதிக்கு அவன் இடைக்கிடை வைக்கும் கொள்ளி சில நேரங்களில் வித்தியாசமானதாககூட இருந்துள்ளது. ஒருமுறை போராளிகள் சிலரை அழைத்து நிறைய சீனவெடிகளை கடைகளில் வாங்கி வரச்சொன்னான். எதுக்கு ஏதுக்கென்று அவர்கள் திகைத்தபடி வாங்கிவர அவர்களை அழைத்தபடி அவனும் சென்று இரவில் பலாலி முகாமுக்கு அருகின் பனை வடலிக்குள் சீன வெடிகளை கொழுத்தி பல நிமிட நேரம் பலாலி முகாமை அதிர்ச்சிக்குள்ளும், தாறுமாறான ஓட்டங்களுக்கும் உள்ளாக்கினான்.

இவ்விதம் இருக்கின்ற குறைந்த போராளிகளை வைத்து மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை வைத்துக்கொண்டு அவனால் ஒரு பெரும் எழுச்சியையே உருவாக்க முடிந்தது. மக்கள் மீதான ஆழமான பற்றும் மண்மீட்பு ஒன்றுதான் விடுதலைக்கான பாதை என்ற தெளிவுமே அவனது அத்தனை ஆற்றலுக்கும் அத்திவாரம். எந்தநேரமும் விடுதலைப் போராட்டத்துக்கு என்னவிதமாக இதனை பயன்படுத்தலாம் என்ன விதமாக இதனை செயற்படுத்தலாம் என்ற தேடலே அவனது ஆளுமைகளின் அத்திவாரம்.

85களில் யாழ்குடா கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அமைப்பின் அழைப்புக்காக அவசரம் கருதி தமிழகம் வந்திருந்தான். வந்த முக்கியமான வேலைகளின் மத்தியிலும் ஒருநாள் வடபழனியில் அமைந்திருந்த விஜயா கார்டன் என்றழைக்கப்பட்ட நாகிரெட்டியின் ஸ்ரூடியோவுக்கு போகவேணும் என்றான். விஜயா கார்டனின் ஒவ்வொரு நுட்பத்தையும், அங்கு மரங்கள் எவ்விதம் பராமரிக்கப்படுகின்றன என்ற விதத்தையும், எவ்வாறு சிறுசிறு செற்கை ஏரிகள் அங்கு அழைக்கப்பட்டிருக்கின்றன என்றும் மணித்தியால கணக்காக பார்த்தான். “யாழ் மண் எமது நிர்வாகத்தின்கீழ் வந்துவிட்டது. அங்கிருக்கும் குழந்தைகள் எந்தநேரமும் குண்டு சத்தமும் சிங்கள விமானங்களின் இரைச்சலுக்கு பயப்படும் நிலைமையுமே இருக்கிறது… குழந்தைகளின் மனநிலைமை, உடல்வளர்ச்சி என்பன இதனால் மிக சீர்கெடும்.இப்படியாக ஒரு பூங்காவை அமைத்து அங்கே எமது தேசத்து குழந்தைகள், சிறார்களை சுதந்திரமாக ஓடியாடி ரசித்து விளையாட வைத்தால் அவர்களின் மனஇயல்பு மாறும்” என்று சொன்னான். அவன் அப்போது 85ல் சொன்னதையே அவன் இறப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவனுடன் போலந்தில் நின்றிருந்த ஒரு செயற்பாட்டாளருக்கும் சொல்லி இருக்கிறான்.

போலந்தில் கிட்டு நின்றிருந்த அந்த இறுதி நாட்களில் ஒருநாள் இரவு கிட்டுவும் கிட்டுவின் துணைக்கு நின்றிருந்த செயற்பாட்டாளனும் போலந்த் நகர வீதியால் தமது அறைக்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அறைக்கு சென்றவுடன் கிட்டு அந்த செயற்பாட்டாளனிடம் கொஞ்ச காசு கொடுத்து நீ போய் நாங்கள் வரும் வழியில் வண்ண விளக்குகள் மின்ன அமைக்கப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வை பார்த்து வா என்று அனுப்பினான்.

அந்த செயற்பாட்டாளனும் ஒரு சில மணித்தியாலங்களில் அறைக்கு திரும்பினான். அவனிடம் கிட்டு கேட்டான் என்னமாதிரி இருக்கு அந்த நிகழ்வு என்றான். செயற்பாடடாளனும் ஏதேதோ சொல்ல கிட்டு இடைமறித்து ‘ உன்னை நான் அனுப்பினது அங்கை போய் எப்படி விளக்குகள் அழகாக அமைத்திருக்கிறார்கள். அதன் கம்பங்கள் எவ்விதம் நடப்பட்டு இருக்கின்றன. அதன் அலங்கார வளைவுகளின் நுணுக்கம் என்ன என்று பார்த்து வந்தால் நாளைக்கு எங்கடை நாட்டிலையும் எங்கடை சின்ன சிறுசுகளுக்கு இப்படி ஒரு அற்புத மின்விளக்கு பூங்காவை அமைக்கலாம் என்பதற்காகதான் என்றானாம்.

இதுதான் கிட்டு. இப்படித்தான் அவன் ஒவ்வொன்றையும் விடுதலைக்காக விடுதலைக்காக என்று தேடினான். இறுதியில் அவன் தன் தோழர்களுடன் தீயினில் வெந்ததுகூட விடுதலை என்ற உன்னதத்துக்கு தான். அவன் காட்டிய உறுதியின் ஒளியில் பாதை பற்றிய தெளிவு கண்டு விடுதலைக்காக உழைப்பதுதான் அவனுக்கும் அவனுடன் வீரச்சாவடைந்த தோழர்களுக்கும் உரிய உண்மையான நினைவு ஏந்தல் ஆகும்.
உறுதி எடுப்போமா..