எழுதலுக்கான தவமாகவே வாழ்க்கை...

ஞாயிறு சனவரி 24, 2016

கோடைநாள் ஒன்றின் அடைமழை...
மழை வீழ்ந்து எழுந்துவரும் மண்வாசம்...
அந்த மழைத்துளியுள் தோன்றி நிற்கும்
வண்ணமிகு வானவில்..
புல்நுனியில் தூங்கிய படியே தொங்கும் பனித்துளி...
தூரத்தில் எங்கோ கேட்கும் நட்டுவாங்க சப்தம்...
அலைதழுவும் கரைமீது இன்னும்
அழியாது இருக்கும் பாதச்சுவடுகள்...
பள்ளிப்பராயத்தை எமக்கு மீள நினைவூட்டியபடி
வெள்ளைநிறமும் வேறுவண்ணங்களுடன்
பள்ளி செல்லும் சின்னஞ்சிறுவர்கள்...
முற்றத்தில் அப்போதுதான் பூத்த செம்பருத்தி...
காற்றில் மிதந்துவரும் நாம் விரும்பிய
ஏதோ ஒரு பாடல்வரிகள்....
எப்போதும் எங்கோ போராடிக்கொண்டே
இருக்கும் யாரோ ஒருவனின் நம்பிக்கை குரல்..
மழைக்காலத்தில் மெதுவாக தவழும் பொன்வண்டுகள்...
ஒரு யுக பிரசவத்தையே மனதுள் ஏற்படுத்தும்
அற்புத வீணை ஒன்றின் மீட்டல்..
கார்கால மேகத்துக்கு தோகை எடுத்தாடும்
மயில் ஒன்றின் கர்வமிகு அழகிய கண்கள்...
இத்தனையும் இன்னும் பலவும்
எப்போதும் எம் கண்முன்னே இருக்கிறது...
அத்தனையிலும் அழகை அதனிலும்
பெரிதான நம்பிக்கை அதனை தரிசி,
உலகம் உன்னை கைவிட்டது என்று யார் சொன்னார்.
இத்தனை உலக இயக்கமும் மொத்தமாய்
உன் உயிர்வாழ்வதை உறுதியாக்கவே...
தவளும் குழந்தைக்கு யார் சொல்லித் தந்தது...
நிலத்தை உதைத்து மேல் எழுந்து நின்று பழகு என்று.
எல்லாம் இழந்தபின்பும் இன்னும் எழுதலுக்காக
தவம் இருக்கும் ஒவ்வொரு போராளியும்
உலகின் முகத்தில் ஆழமாக எழுதிச்செல்வான்
‘எம்மை வெல்ல யாராலும் முடியாது’ என.

- ச.ச.முத்து