ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு எதிரான ஆன்லைன் யுத்தம்

வெள்ளி டிசம்பர் 11, 2015

உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான ஆன்லைன் யுத்தத்திற்கு தேதி குறித்திருக்கிறது பிரபல ஹேக்கிங் இணையதளமான ‘அனானிமஸ்’ (Anonymous).

ஏற்கனவே ஐ.எஸ். அமைப்பின் பல்வேறு உறுப்பினர்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற இணையதள பக்கங்களை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியதோடு மட்டும் இல்லாமல் அவற்றை ஹேக் செய்திருக்கும் இந்த ‘அனானிமஸ்’ இப்பொழுது அறிவித்திருப்பது ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான “உலகின் உச்சக்கட்ட கோப வெளிப்பாட்டு நாள்” (#OpDayofRage).

இதற்காக வரும் டிசம்பர் 11-ம் தேதியைக் (இன்று) குறித்து வைத்திருக்கும் இவர்கள்,  அந்த நாளில் உலக நெட்டிசன்கள் அனைவரும்,  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரை அவமதிக்கும் வண்ணம்  ட்ரால்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் அப்லோட்  செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் ஐ.எஸ். அமைப்பினரின் அக்கவுண்ட்களை கண்டறிந்து,  அவற்றை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டவும் வேண்டுகோள் விடுக்கின்றது இந்த ‘ஹேக்டிவிஸ்ட்’ இணையதளம்.

இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது இருக்கும் உலக மக்களின் பயமின்மையையும், அவர்களை எதிர்க்கத் துணிந்தவர்களும் உலகில் உள்ளனர் என்ற நிலைப்பாட்டையும் அந்த அமைப்பினர் மத்தியில் விதைக்க நினைத்திருக்கிறது ‘அனானிமஸ்’.  சார்லீ ஹெப்டோ நிகழ்வுக்குப் பிறகு ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான #OpIsis என்ற முழக்கத்தை முழங்கி,  பல ஐ.எஸ். அமைப்பினரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்ததும், ஒரு வயாகரா விளம்பரத்தைக் கொண்டு அவர்களின் ஒரு வெப்சைட்டையே முடக்கியதும் இந்த ‘அனானிமஸ்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக மேலை நாடுகளில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். மோகத்தால் பல இளைஞர்கள் அந்த அமைப்பின் வசம் வீழ்ந்துவிடுகிறார்கள். தமிழக இளைஞர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இத்தகைய ஹேக்டிவிஸ்ட் உலக மக்களின் துணிச்சலைக் காட்டுவதோடு மட்டும் இல்லாமல், ஐ.எஸ். மோகத்தை பெருமளவில் குறைக்க வழி செய்கிறது.

இதற்கான வழிமுறைகளாக சிலவற்றை பட்டியலிடுகிறது இந்த இணையதளம். 

* ஐ.எஸ். அமைப்பை வெறுப்பவர்களை குறிக்கும் வார்த்தையான தேஷ் (Daesh) என்பதைக் குறிக்கும் வகையில் #Daesh மற்றும் #Daeshbags ஆகிய ஹேஷ்டேக்குகளை பரப்புதல்.

* ட்விட்டர் , ஃபேஸ்புக் , இன்ஸ்டாக்ராம் ஆகியவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரை கேலி செய்யும் விதமான போஸ்ட்களை அப்லோட் செய்தல்.

* #Daesh மற்றும் #Daeshbags ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்குதல்.

* பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் புகைப்படங்களை ஷேர் செய்து அவர்களை கிண்டல் செய்வது.

* ஐ.எஸ். அமைப்பினர் உபயோகப்படுத்தும் ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் பரப்பி அவற்றை கேலிக்குள்ளாக்குவது.

* யூடியூபில் ஐ.எஸ். அமைப்பினரை கிண்டல் செய்து வீடியோக்கள் பதிவு செய்தல்.

* ஐ.எஸ். அமைப்பினரை கிண்டல் செய்யுமாறு புகைப்படங்களையோ ஸ்டிக்கர்களையோ உங்கள் ஊரில் பரப்புதல்.

ஒரு யுத்தத்தையே தொடக்கி வைத்திருக்கும் இவர்களின் நிலைப்பாடுதான் என்ன?

"அவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்று நாம் அவர்களுக்கு காட்டுவோம்" என்பதையே பதிலாக வைத்திருக்கிறது இந்த அனானிமஸ்!