ஐ தே க கூட்டமைப்பின் அழுத்தங்களுக்குள் உள்ளது -வீரவன்ச கண்டுபிடிப்பு

சனி சனவரி 09, 2016

ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டை ஒரே நாளில் மாற்றிக் கொண்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தமே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றை அரசியல் சாசனப் பேரவையாக மாற்றியமைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவே உத்தேச புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டுமென்பது தற்போதைய சட்டமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தை நேற்றைய தினம் காலையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதியும் பிரதமரும் இதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தனது இணக்கப்பாட்டை மாற்றிக் கொண்டு பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றப்பட வேண்டுமென கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.