ஒரு தாயின் கடுஞ்சினம் (உண்மைச் சம்பவம்)

புதன் ஓகஸ்ட் 05, 2015

கணவனைப் பறிகொடுத்து, பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்து, உடன் பிறப்புகளைப் பறிகொடுத்து, உறவினர்களைப் பறிகொடுத்து வாழும் ஆயிரக் கணக்கான தமிழ்த் தாய்மார்களில் திலகமும் ஒருவர். முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த திலகம் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார். அவரைத் தற்செயலாக யாழ் பொது மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அவர் கூறியவற்றில் சிலவற்றைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வது நலம் பயக்கும் என நினைக்கின்றேன்.

 

முல்லைத்தீவில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பொழுது தான் போரும் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவரது மகன் வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தான். பெரும் வசதி படைத்த குடும்பம் அல்ல அவர்களது குடும்பம். எனவே தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தாயார் திலகம் தனது 15 பவுண் தாலிக்கொடியை விற்று மகனிடம் கொடுத்தார். மகனும் மகிழ்ச்சியுடன் கொழும்புக்குச் சென்றார். இது நடந்தது 1996 ஆம் ஆண்டாகும். கொழும்புக்குச் சென்ற மகன் எப்படியும் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவான். தன் இரு சகோதரிகளுக்கும் உதவுவான் என்ற நம்பிக்கையில் தாயார் இருந்தார். அப்பொழுது சந்திரிகாவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கொழும்பில் தனது பயண ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த வேளை இருவர் வந்து அவனை அழைத்துச் சென்றனர். சிறிய விசாரணை என்று கூறி அழைத்துச் சென்றவர்கள் அவனை அதன் பின் வெளியே விடவேயில்லை.

 

வெளிநாடு செல்வான் தனது மகன் என நம்பியிருந்தவர்களுக்குப் பல மாதங்களின் பின்பே தெரிந்தது அவன் சிறீலங்காச் சிறையில் துன்பப்படுகின்றான் என்பது. 1996 இல் கைது செய்யப்பட்ட அவன் இற்றைவரை சிறையிலேயே வாடுகின்றான். 20 வயதில் கைது செய்யப்பட்டவன் 20 ஆண்டுகளாகியும் இப்பொழுதும் சிறையிலேயே வாடுகின்றான். 40 வயது ஆகிவிட்டது அவனுக்கு. வாழ்வின் அரைவாசிப் பகுதியைச் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அனுபவித்துவிட்டான். இவனைப் போல் எத்தனை தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுகின்றனர்.

 

நாங்கள் பெரிய வழக்கறிஞர்கள் சிறையில் வாடும் இளைஞர்களுக்காக வழக்காடுகிறோம் என்று வழக்கறிஞ அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். ஆனால் இந்த இளைஞனுக்காக வழக்காட எந்தத் தமிழ் வழக்கறிஞரும் வரவில்லை. தற்பொழுது சிங்கள வழக்கறிஞரே இவ் இளைஞனுக்காக வாதாட முன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மகன் சிறையில் வாடும் பொழுது எப்படிப் பெற்றவர்கள் நிம்மதியாக வாழ முடியும். 3 மாதங்களுக்கு ஒரு தடவை மகனைச் சிறைக்குச் சென்று பார்ப்பார்கள். அப்பொழுது குளிர்பானங்களை ஆசையுடன் எடுத்துச் சென்று மகனுக்கு கொடுக்க நினைப்பார்கள். ஆனால் அங்கு நிற்கும் சிங்களக் காவலர்கள் அவற்றை வாங்கித் தாங்கள் குடிப்பார்களாம். இது அவர்கள் அடையும் வேறு வகையான பாதிப்பாகும்.

 

இவ்வாறு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த பொழுது போர் வெடித்துப் பெரும் போராக மாறியது. 2009 இல் எறிகணை வீச்சுக்கும் குண்டு மழைக்கும் தப்பி ஓடிய பொழுது தனது இரண்டாவது மகனை எறிகணை வீச்சுக்குப் பலி கொடுத்துவிட்டு தன் உயிரைக் காக்கத் தன் இரு பெண் பிள்ளைகளுடன் ஓடினார் அத் தாய். இறந்த மகனை அப்படியே விட்டு விட்டு ஓடிய பொழுது பெற்ற தாயின் உள்ளம் எந்தளவு வேதனைப்பட்டிருக்கும். இவ்வாறு தான் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஏறிகணை வீச்சால் தலையில் பலத்த காயமடைந்த திலகம் எப்படியோ தப்பிப் பிழைத்து யாழ் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். தலையில் இன்னமும்  எறிகணையின் துண்டுகள் இருக்கின்றன. அவற்றை அகற்ற முடியாது உள்ளது. அகற்றுவதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய முனைந்தால் அவரது உயிருக்கு உறுதியளிக்க முடியாது என்பது மருத்துவர்களின் கருத்தாகும். இதனால் சில ஆண்டுகள் வாய்பேச முடியாமல் இருந்த திலகம் சிகிச்சையின் பின்னர் மெல்ல மெல்ல கதைக்க ஆரம்பித்தார். தொடர்ந்து உரையாட முடியாது விட்டாலும் சொற்கள் சிலவேளைகளில் உச்சரிப்புத் தடக்கினாலும் ஓரளவு பேசக் கூடியவராக உள்ளார். ஆனால் காலையில் எழுந்ததும் அவரால் பேச முடிவதில்லை. முகம் கழுவி தேநீர் குடித்த பின் வெற்றிலை பாக்குப் போட்டு சப்பிய பின்பே அவரால் கதைக்க முடிகிறது. தன் மகள்மார் இருவரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவர்களுடன் மகன்மாரின் நினைவுகளோடு வாழ்ந்து வருகின்றார்.

 

இரு நாள்களுக்கு முன்னர் ஒரு அரசியல்வாதி தங்களை அழைத்ததாகவும் அங்கு உதவிகள் கிடைக்குமென்று நம்பிப் பலர் சென்றதாகவும் ஆனால் அங்கு சென்றவர்கள் தங்கள் பிள்ளைகளை நீங்கள் தான் பிடித்தீர்கள் திரும்பத் தாருங்கள் என்று அவ்வரசியல்வாதியுடன் மோதியதையும் குறிப்பிட்டார். சந்திரிகாவுடன் பேசுகின்றார்கள் ரணிலுடன் பேசுகின்றார்கள் மைத்திரியுடன் பேசுகின்றார்கள் ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத என்னுடைய பிள்ளையும் அவனைப் போன்ற பல இளைஞர்களும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க எள்ளளவும் முயற்சிக்காமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு ஒவ்வொரு தேர்தலிலும் எங்களிடம் வருகிறார்கள். மைத்திரி நினைத்தால் உடனடியாக விடலாம் தானே. அதனை விட்டு விட்டு எங்களுக்கு வாக்களியுங்கள் சிறையிலுள்ளவர்களை விடுவிக்க ஆவண செய்வோம் என்கின்றனரே. என்னுடைய பிள்ளைக்காக கோட்டுக்கு (வழக்கு மன்றம்) வந்து வழக்குப் பேசவில்லையே இவர்கள். தேர்தல் என்று வந்ததும் ஓடி வருகினம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கோ அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வரட்டும் வந்து ஓட்டுக் கேட்கட்டும் நல்ல கேள்வி கேட்டு விரட்டி அடிப்போம்.

 

எங்கடை பிள்ளையள் எவ்வளவோ துன்பப்பட்டார்கள். துன்பப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் நாடாளுமன்றம் சென்று குசாலாக இருப்பதற்காக வாக்குக் கேட்க வருவார்கள். ஒருத்தருக்கும் வாக்களிக்கிறேல்லை என்று முடிவு செய்துள்ளோம் என்று அந்தத் தாய் கடுஞ் சினத்துடன் கூறினார். அதிலும் நியாயம் இருப்பது போல் தான் தெரிகிறது. இது ஒரு தாயின் கடுஞ்சினமல்ல அனைத்துத் தாய்மார்களின் கடுஞ்சினமாகும்.

 

- நற்பின்னை