கசாப்புக் கடைக்காரரிடம் ஆடுகள் எதிர்பார்க்கும் கருணையும் ஐ.நா. மன்றத்திடம் தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதியும்!

புதன் ஓகஸ்ட் 05, 2015

செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான காத்திரமான அறிக்கை ஒன்று வெளிவரும் என்று தமிழர்கள் நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இம்முறையும் இலவம் காத்த கிளிகளின் நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படப்போகின்றது என்பதை அறிக்கை வெளிவருவதற்கு முன்பாகக் கண்டறிந்து பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் அபாய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

 

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை தங்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாக சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா. விசாரணை குறித்து வரும் செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படவுள்ள விவாதத்தை, பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று தங்களுக்கு கிடைத்துள்ளதாக சனல் 4 குறிப்பிட்டுள்ளது.

 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. கூறுகிறது. சுருங்கி வந்த நெரிசல் மிக்க பாதுகாப்பு வலயத்துக்குள் சிறீலங்கா அரச படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலிலேயே, இவர்களில் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. அதேவேளை விடுதலைப் புலிகளும் கூட, தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மனித கேடயங்கள் போன்ற மோசமான மீறல்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

 

ஆனால், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நாவுடன் இணைந்து ‡ ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளுடன் சிறீலங்கா அரசாங்கம் முழுமையான உள்நாட்டு விசாரணை ஒன்றை உருவாக்குவதற்கான, திட்டவரைவு ஒன்றைக் கொண்டிருப்பதாக இந்த ஆவணங்களில் இருந்து தோன்றுகிறது. பெரும்பாலான மனித உரிமை அமைப்புகள், உள்நாட்டு நீதிப் பொறிமுறையை அமைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்துள்ளன. அது, வெற்றியாளரின் நீதிமன்றமாகவே இருக்கும் என்றும் பலர் எச்சரித்துள்ளனர். கசிந்துள்ள ஐ.நாவின் திட்டங்களின்படி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளர்களாக, சிறீலங்கா அரசாங்கமும், வடக்கு மாகாணசபையும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதுபற்றி தம்முடன் ஐ.நா. எந்தக் கலந்துரையாடல் எதையும் நடத்தவில்லை என்று சனல் 4 ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்த ஆவணம் கசிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், உள்நாட்டு விசாரணையை நடத்துவதாக கூறினாலும் தமிழ் செயற்பாட்டாளர்கள், அனைத்துலக விசாரணையையே கோருகின்றனர் என்றும் சனல் 4 தனது செய்தியில் இந்த விடயம் குறித்து விபரித்துள்ளது.

 

குற்றவாளியிடமே நீதி விசாரணையை நடத்துமாறு உலகில் எங்குமே ஐ.நா. மனித உரிமைகள் சபை கூறியதாகத் தெரியவில்லை. போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு இழுத்துவரத் துடிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை, சிறீலங்காவிற்கு மட்டும் விதிவிலக்காக இவ்வாறானதொரு வாய்ப்பை வழங்குவதற்கு எவ்வாறு முன்வருகின்றது என்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கக்கூடியது. போர் நடைபெறும் இடங்களுக்கு தமது பணியாளர்களை அனுப்பி கண்காணிப்பதும், போரில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் முக்கிய பணியாக இருக்கின்றது. ஏன் தற்போது போர் நடைபெறும் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் கூட தனது பணியாளர்களுக்கு ஏற்படும் உயிராபத்துக்களையும் பொருட்படுத்தாது அவர்களை நிறுத்திவைத்து அங்கு ஏற்படும் இழப்புக்களை அடிக்கடி அறிவித்துக்கொண்டும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டும் வருகின்றது. ஆனால், போர் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழர் தாயகத்தில் இருந்து தமது பணியாளர்களை வெளியேற்றி சாட்சியமற்ற ஓர் இன அழிப்புப் போருக்கு துணை நின்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை, இப்போது இனப்படுகொலை செய்த கொலையாளிகளிடமே விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரத்தை கையளிக்க முனைவதென்பது, நடந்த இன அழிப்பை மூடிமறைப்பதுடன், எதிர்காலத்தில் தமிழர்கள் எந்தவொரு தீர்வுமின்றி, உரிமைகளற்ற நடைப்பிணங்களாக, நாதியற்ற இனமாக வாழ்ந்து அழிந்துபோகும் நிலைமையையே ஏற்படுத்தப்போகின்றதோ என்ற பேரச்சத்தையே ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இந்த முடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

 

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் சபை என்பது நீதியாளர்களின் கைகளில் இல்லை என்பதையே இவ்வாறான முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. தங்கள் தங்கள் நலன்களுக்காக வல்லரசுகள் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு மேடையாகவே ஐ.நா. மனித உரிமைகள் சபை விளங்குகின்றது என்பதையே இவ்வாறான முடிவுகள் உறுதியாக்குகின்றன. அந்த வகையில்தான் தங்களுக்கு ஆதரவான சக்திகளை சிறீலங்காவின் ஆட்சியில் அமர்த்துவதற்கான அல்லது ஆட்சியில் அமர்பவர்கள் தங்களுக்கு ஆதரவான சக்தியாக மாறவைக்கும் ஒரு பகடைக் காயாக இலங்கை மனித உரிமை மீறல் விடய ஐ.நா. அறிக்கையை மேற்குலகம் கையாள்கின்றது என்றே எண்ணத்தோன்றுகின்றது.

 

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படும் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட விரும்பினால், சிறீலங்காவிற்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பணியகத்துக்கான இரண்டாம் நிலை அதிகாரி ஜோசப் ஸ்கெல்லர் மட்டக்களப்புக்கு கடந்த வாரம் சென்றிருந்தபோது எச்சரிக்கும் தொனியில் மறைமுகமாக தெரிவித்திருப்பதும் இதன் இன்னொரு வடிவம் என்றே கொள்ளமுடிகின்றது.

 

எனவே, கசாப்புக் கடைக்காரரிடம் ஆடுகள் எதிர்பார்க்கும் கருணையும் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்திடம் தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதியும் ஒன்றுதான் என்பதையே இவ்வாறான முடிவுகள் தமிழ் மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றன. பழம் பழுத்து தானாக கூடையில் வந்து விழும் என்று காத்திராமல் தங்களுக்கான நீதியைத் தேடி தொடர்ந்து போராடவேண்டிய நிலையிலேயே தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். இதனையே செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அறிக்கையும் உணர்த்தப்போகின்றது என்பதையே பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

 

ஈழமுரசு ஆசிரியர் தலையங்கம்