கனடாவில் இணையவழி குற்றங்களை விசாரிக்க புதிய மத்திய புலனாய்வுக் குழு

வெள்ளி டிசம்பர் 04, 2015

கனடாவில் இணையவழி குற்றங்கள் மற்றும் இணைய தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு புதிய மத்திய புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்கும் திட்டம் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) RCMP காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த திட்டம் முதற் பகுதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முழுமை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கி 40 புதிய பதவிகள் காலப்போக்கில் உருவாக்கப்படும் எனவும் முழுதிட்டத்திற்கும் எதிர்வரும் 5 வருடங்களில் கனேடிய மத்திய அரசிடமிருந்து 30 மில்லியன் டொலர் நிதி எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம்; அச்சுறுத்தல், பழிவாங்கல் மற்றும் இணையத் தாக்குதல் உள்ளிட்ட தாக்கங்களை கனடாவில் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 5 ஆண்டுகளின் பின்னர் 15 புள்ளி திட்டமாக தொடரப்படவுள்ள இந்த புதிய திட்டம், இணைய அச்சுறுத்தல்களை முன்னுரிமை அடிப்படையில் இனங்காண, சிறப்பு திறன் கொண்ட கருவிகள் மற்றும் பயிற்சிகள் மூலம் இணையவழி குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.