கலிபோர்னியா துப்பாக்கிச் சூடு - ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

சனி டிசம்பர் 05, 2015

14 பேரை பலி கொண்ட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்பெர்னார்டினோ நகரில் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது ஒரு தம்பதி கடந்த 2–ந் தேதி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்ற சயீத் ரிஸ்வான் பாரூக் (வயது 28) அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக்(27) இருவரையும் போலீசார் பின்னர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பாரூக் சட்டைப் பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக் பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதையும் அவர்கள் உறுதி செய்தனர். இருவரும் அண்மையில்தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், 14 பேரை பலி கொண்ட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளதாக அரசு சாரா விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் இரண்டாம் நிலை கொமண்டர் ஜஸ்ரவி தேஸ் என்பவர் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவலில், தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த தம்பதியினர் ஐ.எஸ்.-ன் சிறப்பு ஏஜெண்ட் என்றும் முஸ்லீம்களை கொன்று குவித்து வரும் அமெரிக்காவிற்கு எதிராக அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பல்வேறு ஐ.எஸ் பயங்கரவாத இயக்க ஆதரவாளர்களும் இந்த சம்பவத்தை வரவேற்றுள்ளதோடு, சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படையினருக்கு தங்களது எதிர்ப்பையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாக அந்த புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.