சங்கத் தமிழர்களும், மாட்டிறைச்சியும் - கலாநிதி சேரமான்

செவ்வாய் டிசம்பர் 08, 2015

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தொற்றுநோய் போன்று இந்தியாவில் பரவி வரும் மாட்டிறைச்சி நுகர்வுத் தடையைத் தற்பொழுது தமிழீழத்திற்கும் விரிவுபடுத்தும் முயற்சிகளில் ‘இந்துத்துவா’ அடிப்படைவாதிகள் ஈடுபடுகின்றனரா? என்று ஐயப்படும் அளவிற்கு அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு யாழ்ப்பாண இந்துப் பூசகர்கள் சம்மேளனத்தின் தலைவர் வழங்கிய செவ்வி அமைந்திருக்கின்றது.

 

குருக்கள் பீ.சிவலோகநாதன் என்ற இந்நபர் வழங்கிய செவ்வி சிலோன் ருடே என்ற ஆங்கில மொழியிலான தென்னிலங்கை ஊடகத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை டி.பி.எஸ்.ஜெயராஜ் எனப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளை வசைபாடுவதில் புகழ்போன தனிநபர் (கனடாவில் வசிப்பவர்) தனது இணையத்தில் மீள்பிரசுரம் செய்துள்ளார்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மாட்டிறைச்சி உண்டதாலேயே யுத்தத்தில் தோல்வி கண்டதாகவும், மறுபுறத்தில் மாட்டிறைச்சி உண்பத்தை சிறீலங்கா படையினர் தவிர்த்ததாலேயே அவர்கள் வெற்றி பெற்றதாகவும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றையும் பீ.சிவலோகநாதன் வெளியிட்டிருக்கின்றார்.

 

பீ.சிவலோநாதன் கூறியது இதுதான்:

 

‘‘பிரபாகரன் ஒரு இந்து. ஆனால் அவர் தர்மத்தின் பாதையைப் பின்பற்றவில்லை. அவரது தந்தை வல்வெட்டித்துறை ஈஸ்வரன் கோவிலின் தலைமை அறங்காவலர்களில் ஒருவர். பிரபாகரன் தனது மதத்தைப் பின்பற்றவில்லை. ஆனால் சில பத்திரிகைகள் அவரை பற்றுமிக்க இந்துவாக சித்தரிக்க முற்பட்டன. இந்துக்கள் மரக்கறி மட்டும் உண்பவர்கள். சில இந்துக்கள் இறைச்சி உண்டாலும், அவர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. எமது கோரிக்கைகளை அலட்சியம் செய்து பிரபாகரனின் படை மாட்டிறைச்சியை உண்டது. மாட்டிறைச்சியை உண்ண வேண்டாம் என்று எமது திருவிழாக்களில் நாங்கள் பிரசங்கம் செய்தோம். அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களும் பங்குபற்றினார்கள். மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவதாக அவர்கள் உறுதியளித்தாலும் அதனை நிறைவேற்றாது தொடர்ந்தும் மாட்டிறைச்சி உட்கொண்டார்கள். அவர்களின் வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளாகவே இருந்தன. ஆனால் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்ப்பதாக உறுதியளித்த சிறீலங்கா படையினர், யுத்தத்தில் ஈடுபட்ட தமது படையினருக்கு மாட்டிறைச்சியை விநியோகிப்பதை நிறுத்தினார்கள்.’’

 

மாட்டிறைச்சி உண்பதும், உண்ணாமல் விடுவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுடன் சம்பந்தப்பட்டது.

 

அதேநேரத்தில் மாட்டிறைச்சி உண்டதாலேயே யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தார்கள் என்று பீ.சிவலோநாதன் கூறியிருப்பது அவரது சிந்தனை வரட்சியையே காண்பிக்கின்றது.

 

முட்டாள்தனத்திற்குப் பெயர்போன பரமார்த்த குருவும் அவரது சீடர்களும் போன்று பீ.சிவலோநாதனும், அவரது செவ்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களும் நடந்து கொண்டார்கள் என்று அவர்களின் அபத்தமான கருத்தை நாம் அப்படியே விட்டு விடலாம்.

 

ஆனாலும் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிநாத சிந்தனையாக மாட்டிறைச்சி நுகர்வுத் தடை அமைவதால் இங்கு ஒரு வரலாற்றுப் பதிவை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

 

அது மாட்டிறைச்சிக்கும், சங்கத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிய பதிவாகும்.

 

பண்டைக் காலத்தில் தமிழர்கள் புலால் (இறைச்சி) உட்கொண்டது தொடர்பான பல பதிவுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவபெருமானுடன் மோதியதாக சைவ புராணங்களில் குறிப்பிடப்படும் நக்கீரன் என்ற தமிழ்ப் புலவரால் எழுதப்பட்ட திருமுருகாற்றுப் படை என்ற பக்தி இலக்கியத்தில் தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தமிழர்கள் ஆடு வெட்டி, அதன் குருதியைத் தினை, பரப்பு, வெள்ளரிசி ஆகியவற்றில் கலந்து, ஆட்டுத் தசைகளைப் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது அது பின்வருமாறு:

 

‘‘சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யொடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து
குடந்தம்பட்டு கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ
செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலி செய்து
பல்பிரப்பு இரீஇ
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து...

 

சொற்களுக்கான விளக்கம்: மறி – ஆட்டுக்கிடாய்

 

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலி செய்து – மிகுதியான நிலைபெற்ற பெரிய தொடையினை உடைய கொழுத்த ஆட்டுக் கிடாயின் இரத்தத்துடன் கலந்த தூய வெண்மையான அரிசி.


இது முருகனுக்கு ஆடு வெட்டிப் படைப்பது பற்றியது.

 

ஆனால் அகநூறு என்ற சங்க இலக்கத்தியத்தில் பண்டைத் தமிழர்கள் மாட்டிறைச்சி உண்பது பற்றிய குறிப்புக்களும் உள்ளன. அது பற்றிய மூன்று பாடல்கள் அச் சங்க இலக்கியத்தில் உள்ளன. இதேபோன்று நற்றிணை என்ற சங்க இலக்கியத்திலும் மாட்டிறைச்சியைத் தமிழர்கள் உட்கொண்டமை பற்றி எழுதப்பட்டுள்ளது.

 

அவற்றில் அகநானூற்றின் 129ஆம் பாடலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

 

‘‘கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்’’


விளக்கம்: சிறிய ஊரினர் கையைத் தலைமீது வைத்து வருந்தும்படி அவருடைய கொழுத்த ஆவைக் (பசுவை) கவர்ந்து சென்று தின்ற கூரிய படையையுடைய மழவர்.

 

இதேபோன்று அகநானூற்றின் 249ஆவது பாடல் மாட்டிறைச்சியைப் பண்டைத் தமிழர்கள் உண்பது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:

 

‘‘தோகை தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுகளம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த’’

 

விளக்கம்:

 

மயிலின் தோகையிலுள்ள இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர் மழவர்கள். பல்வகையான பூக்களை உடையதான காட்டின் சுருங்கிய நிழல்களிலே அவர்கள் தங்கிக் கன்றினையுடைய பசுவைக் கொன்று அதன் ஊனைச் சுட்டுத் தின்பார்கள். புலால் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு ஊன்துணுக்குள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக மேல்காற்று எழுந்து வீசும்.

 

இவை மட்டுமன்றி அகநானூற்றின் 309ஆவது பாடல் பசுவை தமிழ்க் கடவுளுக்கு பலிகொடுத்துப் பின்னர் அதன் இறைச்சியை மறவர்கள் உணவாக உட்கொண்டது பற்றிக் குறிப்பிடுகின்றது:

 

‘‘வயவாய் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மறவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட
வான்கண் அகலறைக்’’

 

விளக்கம்: கொழுப்பா – கொழுத்த பசு

 

வெற்றி வாளினாலே வெட்டிக் கொன்றும், வில்வினைத் தொழிலினாலே அடித்து வெருட்டியும், பசுமந்தைகளைக் கைகொண்ட அஞ்சாமையாளரான மறவர்கள், அம்புகளைத் தொலைவுக்குச் செல்லுமாறு செலுத்தி நிரைகாவலரை ஓட்டியபின், வன்மையான காட்டு நிலத்தை அடைந்தனர். அடைந்தவராக தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினையுடைய வேம்பிற்கு கொழுத்த ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தூவித் தெய்வத்தைப் போற்றி வழிபட்டனர். பின் அப் பசுவின் புலாலினைப் புழுக்கி உண்டு விட்டுச் சென்றனர்.

 

இச்சங்க இலக்கியங்களில் இருந்து பண்டைத் தமிழர்கள் ஏனைய இறைச்சி வகைகளை மட்டுமன்றி மாட்டிறைச்சியும் உட்கொண்டனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு தாம் வழிபட்ட தெய்வங்களுக்கு ஆடுகளையும், பசுக்களையும் பலிகொடுத்துப் பின்னர் அவற்றைப் பண்டைத் தமிழர்கள் உட்கொண்டனர் என்பதையும் நாம் உணர முடியும்.

 

ஏன் யாழ்ப்பாணம் எனும் தமிழ் இராச்சியத்தை ஈழத்தீவில் நிறுவியதாக கூறப்படும் பாணர்கள் மாட்டிறைச்சியை உட்கொண்டது பற்றி நற்றிணை என்ற சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆக தமிழர்களின் பண்டைய வரலாற்றை மூடிமறைத்து விட்டு, ஆரியவாதம் பேசி பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா சித்தாந்தத்தைத் தமிழீழத்திலும் பரப்ப முற்படும் பீ.சிவலோகநாதன் போன்றவர்களுக்கு இவ் வரலாற்று உண்மைகள் கசப்பானவையாக இருக்கலாம்.

 

ஆனாலும் இவற்றைத் தமிழர்கள் அறிந்து கொள்வது இந்துத்துவா சித்தாந்தத்தின் விசம் தமிழ்த் தேசியத்திற்குள் ஊடுருவி அதனைச் சிதைப்பதைத் தடுப்பதற்கு அடிப்படையாக இருக்கும் என்றே கூறலாம்.