சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரத்தின் நீட்சியே சில புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம்!

செவ்வாய் டிசம்பர் 08, 2015

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பினை கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இவற்றில் சில அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளமையானது சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரத்தின் நீட்சியாகும்.

அமைதிப் பேச்சுக்களில் ஒரு பக்கம் ஈடுபட்டு வந்த முன்னைய ரணில் அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்தி பலவீனமாக்கும் தந்திரத்திலும் ஈடுபட்டது.

உலகத் தமிழ் மக்களின் பேராதரவுடன் ஆயுதபலத்தில் வளர்ச்சியடைந்து இராணுவச் சமநிலையில் மேலோங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்திலும், இராசதந்திர தளத்திலும் நேரிடையாக எதிர்கொள்ள முடியாத சிங்கள அரசு பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பலவீனப்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டமையே அன்றும் சமாதானத்திற்கான கதவுகள் இறுகச் சாத்தப்பட்டு இன அழிப்பு யுத்தம் தமிழர்கள் மீது திணிக்கப்படக் காரணமாயிருந்தது.

மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே சிறிலங்கா பிரதமராக பதவியேற்ற நாள் முதல் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நீதிக்கான போராட்டமாக அனைத்துலக ரீதியில் உறுதியுடன் முன்னெடுத்து வரும் புலம்பெயர் தமிழர்களை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

புலம்பெயர் தமிழர்களின் பலத்தை சிதைப்பதற்கு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே மங்கள சமரவீர, சுமந்திரன் உள்ளிட்டவர்களுடன் சில புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் லண்டனில் மேற்கொண்ட சந்திப்பு அமைந்திருந்தது. எமது விரலைக் கொண்டே எமது கண்ணைக் குத்தியது போன்று எம்மவர்கள் சிலரது பங்கேற்புடனே ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு கிடைத்திருக்க வேண்டிய நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டதற்கான துரோக விதை இந்த லண்டன் சந்திப்பில்தான் விதைக்கப்பட்டது.

தமிழினத் துரோகத்தின் நச்சுச்செடியாக வளர்ச்சியடைந்திருக்கும் சில அரசியல்வாதிகள் மூலம் தாயக அரசியல் வெளியை தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்திருக்கும் சிங்கள அரசு புலம்பெயர் தளத்திலும் சில அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள். அதன் வெளிபாடாகவே இந்தத் தடை நீக்கம் அமைந்துள்ளது.

எவ்வாறு ஆயுத ரீதியில் நாம் பலம்பெற்று விளங்கிய போது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் எம்மைப் பலவீனப்படுத்தினார்களோ அவ்வாறே புலம்பெயர் தளத்தையும் பலவீனப்படுத்தி நீதிக்கான போராட்டத்தை சிதைத்துவிட சிங்கள அரசு திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றது. அதற்காகவே எமக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதற்காக சில அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மீதான தடையை நீக்கியுள்ளது.

சிங்கள அரசானது நல்லிணக்கத்தை விரும்புவது உண்மையாக இருந்தால் தடை செய்யப்பட்டுள்ள அனைத்து அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மீதான தடையை நீக்கியிருக்க வேண்டும். மாறாக சில அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான தடையினை மட்டும் நீக்கியுள்ளமையே பிரித்தாளும் தந்திரத்தின் உச்சமாகும் 

முள்ளிவாய்கால் பேரழிவுடன் தமிழர்களாகிய நாம் மூச்சடங்கிப் போய் மூலையில் முடங்கிவிடுவோம் என்று நினைத்து குதூகலப்பட்ட சக்திகளின் எண்ணத்தை தகர்த்து உலகப்பெருவெளியில் நீதிக்கான போராட்டமாக மாற்றியதுடன் தேச விடுதலைப் போராட்டத்தை இன்றும் உயிர்ப்போடு முன்னெடுத்து வரும் தமிழ் இளையோர் அமைப்பு (TYO), மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையில் அங்கத்துவம் வகித்துவரும் கனேடியத் தமிழர் தேசிய அவை (NCCT) ஆகிய இரு அமைப்புகளையும் சில செயற்பாட்டாளர்களையும் தடைநீக்கப் பட்டியலில் சேர்த்ததன் மூலம் இச் சதியினை அரங்கேற்றியுள்ளது சிங்கள அரசு.


மேற்குறிப்பிட்ட TYO, NCCT அமைப்புகள் மற்றும் சில செயற்பாட்டாளர்கள் மீதான தடை நீக்கத்தின் மூலம் தமிழர் விரோத சக்திகள் மீதான தடை நீக்கத்தை ஐயுறாதிருக்க வேண்டும் என்பதனைக் காட்டிலும் தேச விடுதலைப் போராட்டத்தில் ஒன்றுபட்ட சக்தியாக போராடிவரும் எமக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் இனப்படு கொலைக்குள்ளாக்கப் பட்டிருக்கும் எமது உறவுகளுக்கும் சிரழித்து சின்னாபின்னமாக்கப் பட்டிருக்கும் சகோதரிகளுக்கும் நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தை பலவீனப்படுத்தி இல்லாதொழிக்கும் நோக்கமே முனைப்புப் பெற்றுள்ளது. சிங்களத்தின் இந்த சதி முயற்சியானது நல்லிணக்கத்திற்கு பதிலாக சமாதானத்திற்கான கதவுகளை இறுகவே சாத்தியுள்ளது.

அன்பான உறவுகளே!

எமது தாயகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட இன அழிப்புப் போரின் மூலம் அழித்தொழிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதியை பெறுவதற்கான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்ட சக்தியாக இருப்பது அவசியாமாகும். சிங்கள அரசு தூக்கிப்போடும் சலுகைகளுக்காக எமது உரிமைகளை நாம் ஒருபோதும் கைவிட்டுவிட முடியாது.

எப்போதெல்லாம் சிங்கள அரசு அரசியல், பொருளாதாரம், இராசதந்திர ரீதியில் பின்னடைவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து நிற்கிறதோ அப்போதெல்லாம் இப்படியான பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் எம்மை பலவீனப்படுத்தி தன்னைக் காத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றது. அற்ப சலுகைகளுக்காக சிங்களம் விரிக்கு தந்திர வலையில் சிக்காது இழந்துவிட்ட உரிமைகளையும், மறுக்கப்பட்டுவரும் நீதியினையும் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் அனைவரும் அணிசேருமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.

 

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் அறிக்கை கீழே