சித்தாந்தத்தை அழிப்பதன் ஒரு அங்கமாகவே தேசப்புதல்வி இலக்கு வைக்கப்பட்டார்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி

செவ்வாய் அக்டோபர் 20, 2015

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பால் உயிர்நீத்த தமிழீழ மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராக திகழ்ந்த தமிழினி (ஜெயக்குமரன் சிவகாமி) அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக் கிளை ஆகிய நாம் எமது வீரவணக்கத்தை செலுத்துகிறோம். 


 தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக நெருப்பாற்று நீச்சலில் சுமார் ஒன்றரை தாசப்தத்துக்கு மேலாக ஈடுபட்ட அர்ப்பணிப்பும் ஆளுமையும் மிக்க தமிழினி அவர்களின் மரணம் தமிழீழ தேசத்திற்கு பேரிழப்பு. 

 

ஆயுதங்கள் மௌனமான பின்னும், எந்த நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்தப்பட்டதோ, அந்த நோக்கத்தை தன் நெஞ்சத்தில் ஆழமாக பதித்து, அதனை இன்னொரு வடிவத்தினூடாக அடைவதற்கு சிந்தனைகளை தனக்குள் செதுக்கியிருந்த தமிழினி அவர்களின் சாவு தமிழீழ மக்களின் இதயங்களில் இடியாக விழுந்துள்ளது. 


பன்முக ஆளுமையுடன் திகழ்ந்த தமிழினி அவர்களின் சிந்தனைகளை சிங்கள அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறையால் ஒடுக்க முடியவில்லை என்பதை 2009 பின்னரான அவரது எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கிறது. 

 

காலப்போக்கில் தமிழினி அவர்களின் சிந்தனைகள் பகிரப்பட்டு கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்படுமிடத்து, தமிழீழ மண்மீட்பு என்ற உன்னத இலக்கு மீண்டும் பலமடையும் என தூரநோக்கோடு கணிப்பிட்ட சிங்கள இனஅழிப்பு படைகள் மிகநுட்பமாக நகர்த்திய கட்டமைப்பு சார் இனஅழிப்புக்கு இரையாகிப் போயுள்ளார் தமிழீழ தேசத்தின் விடியலுக்காக ஓயாது உழைத்த ஒரு முக்கிய தூண். சித்தாந்தத்தை அழிப்பதன் ஒரு அங்கமாகவே தேசப்புதல்வி இலக்கு வைக்கப்பட்டார். 

 

இவருக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்ற இத்தருணத்தில், இவர் எந்த இலட்சியத்திற்காக சுமார் பதினெட்டு ஆண்டுகள் போராடினாரோ, அந்த இலட்சியப் பயணத்தை தொடர்வதற்கு உறுதிபூணுகிறோம்.

 

 
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி