சீனாவில் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு!

ஞாயிறு ஓகஸ்ட் 16, 2015

சீனாவில் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு!
சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் 90 பேரை காணவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

சீனாவின் துறைமுக நகரங்களில் ஒன்றான தியான்ஜினில் உள்ள ருய்ஹாய் பண்டகசாலையில் ரசாயனங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களில் கடந்த 12–ந் தேதி இரவு 11.20 மணிக்கு இரு வெடி விபத்துகள் நேரிட்டன. அந்தப் பகுதியை உலுக்கிய இந்த வெடி விபத்துகளில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 500–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறின.

இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது என்று சீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் தீயணைக்கும் படை வீரர்கள் 21 பேரும் அடங்குவர்.  721 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் அதன் பேரழிவில் இருந்து அந்த நகரம் மீள வில்லை. சுமார் 1½ கோடி மக்கள் வசிக்கிற அந்த நகரத்தில், தொடர்ந்து சிறு வெடி விபத்துக்களாலும், தீயினாலும் பதற்றம் தொடர்கிறது. பொதுமக்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

வெடி விபத்துகள் தொடர்பான வதந்திகளை பரப்புவதாகக்கூறி 300–க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பவ பகுதியில் 200–க்கும் மேற்பட்ட ராணுவ அணு மற்றும் உயிரி ரசாயன வல்லுனர்கள் ஆய்வு பணிக்காக விரைந்துள்ளனர். அவர்கள் அங்கு ஆய்வு நடத்துகின்றனர்.

வெடி விபத்து நடந்த பகுதியில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் வசித்து வருகிற மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு சீன அரசு உத்தரவிட்டது. 
முதலில் வெடிவிபத்து நடந்த இடத்தில் கால்சியம் கார்பைடு, பொட்டாசியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் போன்ற ரசாயனங்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அங்கு சோடியம் சயனைடு என்னும் கொடிய விஷ ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சோடியம் சயனைட் ரசாயனம், வெள்ளை நிற படிகம் ஆகும். அது கலந்த நச்சுகாற்றை சுவாசித்தால், உட்கொண்டால் மரணம் ஏற்படும். ஏனெனில் இது ஒக்சிஜன் செயல்பாட்டை முடக்கி விடும். இது போன்ற ரசாயனங்களின் ஆபத்து, தொடர்ந்து வெளிவரும் புகை, உயிராபத்து ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் காரணமாக சம்பவ இடத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் வசிக்கிற மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விபத்து ஏற்பட்ட இடத்தில் சுமார் 85 தீயணைப்பு படை வீரர்களை காணவில்லை, அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.