சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் பாராளுமன்ற வரலாற்றிலிருந்து எதனையுமே பெறவில்லை

புதன் ஓகஸ்ட் 05, 2015

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு 20 பாராளுமன்ற பிரதிநிதிகளை வடக்கு கிழக்கின் தமிழ்மக்கள் தருவார்களாயின் 2016 ஆம் ஆண்டில் அரசியல் தீர்வை பெற்றுத்தர முடியும் என்னும் நம்பிக்கையை ஊட்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

 


சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் பாராளுமன்ற வரலாற்றிலிருந்து எதனையுமே கற்கவில்லை என்பதே இலங்கைத் தமிழர்களின் வரலாறு என்று தீர்க்க தரிசனம் மிக்க தமிழ்த்தலைவர்களினால் கணக்குப் போடப்பட்டிருப்பது தெரிகிறது.

 


21 மில்லியன் வரையிலான மக்களை கொண்டுள்ள நாடான இலங்கையின் ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் 225 மக்கள் பிரதிநிதிகள் இருப்பர். மக்கள் தொகையில் 75 சதவீதமானோர் சிங்கள இனத்தினர். அண்ணளவாக 10 வீதத்தினரே இலங்கைத் தமிழர்கள்.  இது இன்றைய யதார்த்த நிலை. சுதந்திரத்திற்கு பின்னரான இரு தசாப்தங்கள் வரையில் வாக்காளர்கள் அன்றைய இடதுசாரித்தலைவர்களால் வர்க்க ரீதியில் சிந்திப்பதற்கு பழக்கப்பட்டிருந்தனர். கணிசமான மக்கட்பகுதியினர் இனவேறுபாடுகளை பொருட்படுத்தாது மக்கள் என்ற அடிப்படையில் வாக்களித்து மக்கள் பிரிதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தனர். ஆயினும் இதன் பின்னைய தசாப்தங்களில் தொழிலாளர் வர்;க்கம், ‘பரந்த மக்கள்’ என்னும் சொற்பிரயோகங்கள் மறைந்து போயின. 

 

 

இடதுசாரி முற்போக்கினரும் தம்மை இனவாதிகளுடன் கரைத்துக் கொண்டனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் பாரம்பரியமும் அருகிவிட்டது. இன்றுள்ளது  இனங்களின் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்றமே. அதாவது 75 வீதம் சிங்கள இனத்தவரும் மீதி 25 வீதத்தினர் இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியத் தமிழர், பறங்கியர் என்னும் இனங்களும் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்றமே. மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் தற்போது இனப்பிரதிநிதிகளாகவே பாராளுமன்றத்தை நிரப்பியுள்ளனர். இதனால் பாராளுமன்றம் நாட்டின் இனங்களை கிட்டத்தட்ட அதே விகிதாசாரத்தில் கொண்டுள்ளது. 

 

இந்த பாராளுமன்றமே இன்றுவரை சிறுபான்மை இனங்களுக்கு சமவுரிமையையோ, சமவாழ்வையோ, அந்தஸ்த்தையோ வழங்க மறுத்து வந்தது என்பதனை அரசியல் நோக்கர்கள் நன்கு அறிவர். இனங்களுக்கிடையே முரண்பாடுகளும் முறுகல் நிலையும் அதிகரித்து வருவதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.  75 வீதமான சிங்கள இனத்தவர் எத்தனை கட்சிகளாக பிரிந்து நிற்பினும் பாராளுமன்றம் அவர்களின் அதிபலம் மிக்க பெரும்பான்மை காரணமாக அவர்களுக்கேயான ஏகபோக ஆட்சி மன்றமே. ஒற்றையாட்சி முறைமையில் வேரூன்றி நிற்கும் இப் பாராளுமன்றம்; பெரும்பான்மை இனம் சார்ந்த எந்த தீர்மானத்தையும் இலகுவாகவே நிறைவேற்றிக் கொள்ளும். அவ்வாறே நிறைவேற்றியும் நடைமுறைப்படுத்தியும் வந்ததே வரலாறு. இவற்றைக் குறிப்பாக தமிழ்மக்கள் அவதானிக்கவும் விமர்சிக்கவும் தவறவில்லை. உயர் கல்விக்கு தகுதி பெறுவதற்கு சிங்கள இனத்தவருக்கு குறைவான புள்ளிகளும் தமிழ் இனத்தவருக்கு கூடுதலான புள்ளிகளையும் அமுலாக்கம் செய்வதில் நியாயம் இருப்பதாகக் கண்டதும் இதே பாராளுமன்றமே. 

 


ஆயினும், அடிக்கடி ஜனநாயகம் என்ற சொல்லினை உச்சரிக்கும் தேவை உள்ளதால் தவிர்க்க முடியாதபடி சிறுபான்மையினப்பிரதிநிதிகளுக்கு ‘இனிப்பு’ வழங்குவதும் ஒரு சம்பிரதாயம் தான். மொத்தத்தில்  சிறுபான்மை இனங்களை பொறுத்தவரையில் இது ஒரு மலட்டுப் பாராளுமன்றமே. 
எவ்வாறாயினும், இந்த சிங்கள இனத்தின் ஏகபோக பாராளுமன்றம் தமிழ் மொழி உபயோகத்திற்கு ஒரு ஏற்பாடு செய்யவில்லையா? மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிறுவவில்லையா? ஒரு தமிழரசுக்கட்சித்தலைவரை எதிர்க்கட்சித்தலைவராக ஆக்கவில்லையா? அதிகம் ஏன்? இன்னும் பெரும் ஆரவாரத்துடன், பதவிகளுக்காகவும் முண்டியடித்தபடி தலைகளில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் மாகாண சபைகளை இலங்கையின் பாராளுமன்றம் வடக்கு கிழக்கு மக்களுக்கு தரவில்லையா? என்னும் கேள்விகளை ஒருவர் தர்க்க ரீதியாக கேட்கவும் நியாயங்களை எதிர்பார்க்கவும் இயலும். 
தெரிபவற்றை மட்டும் காண்பது விலங்குகளுக்கும் கூட இயல்பானது. பின்னணிகள் பற்றியெல்லாம் தேடல் செய்வதும் வரலாறு உறுத்தும் உண்மைகளை ஆதாரமாக கொள்வதும் அவசியமாகும். பெரும்பான்மைக்கட்சிகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தக்களுக்கும் பேரப்பேச்சுகளுக்கும் வரலாற்றில் என்ன நடந்தது? 1965 ஆம் ஆண்டின் தேர்தலில் பெரும்பான்மைப்பலம் போதாமலிருந்த டட்லி சேனநாயக்கவின்  ஜ.தே.கட்சிக்கு  பேரப்பேச்சுகளின் அடிப்படையில் 14 எம்.பிக்களை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி சாதித்தது என்ன? 2015 ஆம் ஆண்டிலும் 1965 ஆம் ஆண்டினை வாயில் நீரூற நினைவுபடுத்தும் வகையில் என்னதான் உள்ளது? அன்று எம். திருச்செல்வம் கியூ. சி. அமைச்சராக முடிந்தது. இதற்கு அப்பால் எதுவுமே நடைபெற்றதில்லை. 

 


பெற்றவையும் கிடைத்தவையும் பாராளுமன்றத்திற்கு வெளியே நடாத்தப்பட்ட மக்கள் போராட்டங்களின் பெறுபேறுகளே. அதாவது, தீர்வுகள் கிட்டாத நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே எடுத்து வரப்பட்டு தமிழ் மக்களின் நேரடிப்பங்குபற்றலின் விளைவாகவே அற்ப சொற்ப தீர்வுகள் எட்டப்பட்டன என்பதே நிதர்சனமான வரலாறு.  1956 ஜுன் 05 ஆம் திகதி காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் தொடக்கம் 1960 களின் கச்சேரி வாயில் சாத்வீகப் போராட்டம் என்பவற்றின் வரிசையில் இறுதியாக மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் என்பவற்றின் பேறாக  பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் வெளியேயான சக்திகளின் தலையீட்டினாலேயே இன்றுள்ள மாகாண சபைகள் போன்ற சலுகைகளேனும் பெறப்பட்டன. இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது தமிழினம் எவ்வௌற்றை பெற்றிருக்கிறதோ அவையெல்லாம் பாராளுமன்றத்திற்கு வெளியேயான போராட்டங்களின் விளைவுகளேயன்றி தென்னிலங்கை கட்சிகளுடனான பேரப்பேச்சுகளின் பெறுபேறுமல்ல பாராளுமன்றத்தில் ஏகபோக உரிமைகளை வைத்திருக்கும் தென்னிலங்கையின் ஒற்றையாட்சிப பாராளுமன்றின் தீர்மானத்தினாலுமல்ல. 

 


 இலங்கையின் பாராளுமன்றம் சிறுபான்மை இனங்களின் தேவைகளை முன்வைத்து பேரம் பேசுவதற்கான இடமாக பார்க்கப்படுவது சுத்த அறியாமை ஆகும். வரலாற்றினை மறைப்பதற்கு எடுக்கப்படக்கூடிய சூழ்சிசியுமாகும். ஏற்கனவே சிறுபான்மை இனங்களுக்கென்று  இருக்கக்கூடிய பாரம்பரிய ரீதியான உரிமைகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் பறித்தெடுப்பதற்கு சட்டங்களை இயற்றுவதற்கும், சிறுபான்மை இனங்களுக்கு எதிரான செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ஆதிக்க மன்றாகவே சிறுபான்மை இனங்கள்  பாராளுமன்றத்தை நோக்குகின்றன. சிறுபான்மை இனங்களின் மீது எடுக்கப்படும் கொடூரமான நடவடிக்கைகள், பறிப்புகள், அநீதிகளை அம்பலப்படுத்துவதற்கான ஒரு மேடையாகவே பாராளுமன்றத்தை தமிழ்த்தேசியப் பற்றுள்ள சக்திகள் முன்னைய காலங்களில் பயன்படுத்தி வந்துள்ளன. 

 

 

தவிர, ஒரு கட்சியுடன் பேரம் பேசி சில சலுகைகளை பெற முயல்வது முறையற்ற செயலும் ஒருவித திருட்டு நடவடிக்கையுமாகும். இது வரலாற்றில்  நிரூபிக்கப்பட்டுள்ளது.  1965 இல்  ஜ.தே.கட்சியுடன் பேரம் பேசி தேசிய அரசாங்கம் அமைத்ததை தொடர்ந்து ஆவேசமடைந்த தென்னிலங்கை அடுத்து வந்த தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனவாதிகளுக்கு வழங்கியதால் தமிழினத்திற்கெதிரான மூர்க்கத்தனமான திட்டங்கள் முன்;னெடுக்கப்பட்டு ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை’ தமிழர்களை தள்ளிச் சென்றது. குறுகிய நோக்கில் திருட்டுத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தீர்க்கதரிசனம் அல்ல. 

 


இலங்கை மக்கள், குறிப்பாக தென்னிலங்கையின் சிங்கள மக்களின் மனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்மானங்கள் எவையோ அவைகளால் மட்டுமே ஜக்கிய இலங்கையும் சிறுபான்மை உரிமைகளும் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படலாம். ஆயினும், இந்நிலைப்பாடு கானல் நீராகிவிட்டதால் ஒரே நாட்டின்  மக்கள் இரு தேசங்களாக தம்மை வகுத்தமைத்துக் கொள்வதை வருங்கால வரலாறு அனுமதிக்க வேண்டியிருக்கும். 


-   சங்கதி24ற்காக  த.தே.விடுப்பர்