சோரம் போனது அமெரிக்கா ,சிறிலங்காவுக்கு ஆதராக ஜெனீவாவில் பிரேரணை

வியாழன் ஓகஸ்ட் 27, 2015

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை அமெரிக்கா முன்வைக்கும் என்று, உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வால் அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளே நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் வாதிட்டு வருகிறது.

 

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறித்த பிரேரணை செப்டம்பர் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா மற்றும் இந்த விவகாரத்துடன் தொடர்பு பட்ட அனைவரும் ஒன்றிணைந்த இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி யுத்தக்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கை, இல்லாது செய்யப்பட்டது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், நிஷா பீஷ்வாலுக்கும் இடையில் சந்திப்பு!

 

தேசிய கூட்டமைப்புக்கும், அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் போது தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன் கடந்த தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் யுத்தக்குற்ற அறிக்கை வெளியாக்கப்படும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நிஷா பீஷ்வால் இதன் போது உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து வாய்திறக்கவில்லை அமெரிக்கா! சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சார்பில் சிறிலங்கா தொடர்பாக கருத்து வெளியிடப்படும் சந்தர்ப்பங்களில், பொறுப்புக்கூறல், போர்க்குற்றங்கள் , மனித உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்படுவது வழக்கம்.

 

எனினும், நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் மற்றும், இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர், போர்க்குற்றங்கள், பொறப்புக்கூறல், மனித உரிமைகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

 

அவர்கள் சுருக்கமான உரையின் போது இந்த மூன்று சொற்களையும் பயன்படுத்தவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, தண்டனை விலக்குரிமை, நல்லிணக்கம், போன்ற சொற்களையே அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். கடந்தவாரம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கொழும்புடன் முதலாவதாக இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ள வொசிங்டன், சிறிலங்கா தொடர்பாக காண்பித்துள்ள மென்போக்கு சமிக்ஞையாக இது கருதப்படுகிறது.

 

அதேவேளை, “சில விடயங்களை அடைவதற்கு முன்னோக்கிச் செல்வது கடினமானது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்த முயற்சிகளை நிறைவேற்ற காலஅவகாசம் தேவை என்பதை ஏற்கிறோம். குறுகிய காலத்துக்குள் ஆச்சரியங்களை எதிர்பார்க்க முடியாது” என்றும் ரொம் மாலினோவ்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 


தமிழரசுக் கட்சியின் குழிபறிப்புகள் ஆரம்பம் ! தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரான அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித்தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்காமல் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்திற்கு இரண்டு பேரை தேசியப்பட்டியல் உறுப்பிளர்களாக நியமித்திருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார். இந்த கோரிக்கை தொடர்பில் திருகோணமலையில் இரண்டு முக்கிய பேச்சுவார்ததைகள் நடைபெற்றிருந்தபோதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது, கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசு கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல. எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது தமிழரசு கட்சி மட்டும் செய்துகொண்டு போவது என்பதும் ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல; ஒரு கூட்டமைப்பு தத்துவங்களுக்கும் நல்லதல்ல; ஆனால் இதனை மிகவும் வெட்கம் கெட்டத்தனமாக தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என்பதுதான் ஒரு விடயம்” என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

 

அதேசமயம், இந்த பிரச்சனை குறித்து தமது கட்சி இரண்டொரு தினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இதுகுறித்த விரிவானதொரு நேர்காணலை வழங்குவதற்குத் தற்போது தான் தயாரில்லை என்றும், சுருக்கமானதொரு கருத்தை மட்டுமே இப்போது தன்னால் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

 

ஜங்கரநேசன்,டெனீஸ்வரனிற்கும் ஆப்பு? நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் தொடர்ச்சியாக கட்சியின் வெற்றிக்கு பாடுபடாதவர்களை களையெடுக்க கூட்டமைப்பு உயர்மட்டங்கள் முற்பட்டுள்ளன.அவ்வகையினில் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசனும் பதவியிறக்கப்படலாமென நம்பப்படுகின்றது.

 

நடந்து முடிந்த தேர்தலில் பெர்து மேடைகள் எதிலுமே ஏறி பிரச்சார நடவடிக்கைகளினில் அமைச்சர் ஜங்கரநேசன் ஈடுபட்டிருக்கவில்லை.
சிறீதரனிற்கு மட்டும் ஆதரவு வழங்கி கருத்துக்களினை வெளியிட்டிருந்தார். தனக்கு ஆதரவு வழங்காதவர்களை அரசியல் ரீதியினில் பழிவாங்க சுமந்திரன் முற்பட்டுள்ள நிலையினில் ஜங்கரநேசனிற்கெதிராக தனது எடுபிடிகளான சுகிர்தன்,சயந்தன் மற்றும் ஆனோல்ட் தரப்புக்களினை உசுப்பிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஜங்கரநேசன் பதவியிறக்கப்பட்டால் ஏற்படும் வெற்றிடத்திற்கு சுழற்சி முறையினில் அமைச்சு பதவி வழங்கப்படுமென உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.ஏற்கனவே முதலமைச்சரிற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள இக்கும்பல் தற்போது அமைச்சர் ஜங்கரநேசனிற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனிடையே தேர்தல் தோல்வி காரணமாக குழப்பமுற்றிருக்கும் டெலோ தலைமையும் அமைச்சரான டெனீஸ்வரனை பதவியிறக்க முடிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

 

டெலோ சார்பினில் எந்தவொரு பிரச்சாரங்களினிலும் டெனீஸ்வரன் ஈடுபடாமை கட்சித்தலைமையிடையெ சீ;ற்றத்தை தோற்றுவித்துள்ளது.ஆனால் அந்த பதவி யாருக்கு வழங்கப்படுமென்பது பற்றி தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை . தொடங்கியது வெட்டி ஓட்டம்! நிஷா பிஸ்வால் சந்திப்பில் சுரேஸ் இல்லை!

 

கூட்டமைப்பில் சுரேஸ்பிறேமச்சந்திரனை புறம்தள்ளும் தமிழரசுக்கட்சியின் சம்பந்தன் – சுமந்திரன் தரப்பினது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. அவ்வகையில் தற்போது கொழும்பு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பிலேயே இம்முறை சுரேஸ்பிறேமச்சந்நிரன் காய்வெட்டப்பட்டுள்ளார். அவரிற்கான அழைப்பு இம்முறை விடுக்கப்படவில்லையென தெரியவருகின்றது.

 

நடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்கில் பின்தங்கிய சுரேஸிற்கு பங்காளிக்கட்சி என்ற வகையில் தேசியப்பட்டியலில் இடம் வழங்க கோரப்பட்டிருந்தது. எனினும் சம்பந்தன் – சுமந்திரன் தரப்பினது குழிபறிப்பினால் அவர் புறந்தள்ளப்பட்டிருந்தார். இந்நிலையில் உள்ளக விசாரணை பற்றி அமெரிக்க அரசு பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் அவர்களுடன் வாதிடக்கூடிய ஒருவராக சுரேஸ்பிறேமச்சந்திரனே இருந்திருந்தார். கடந்த முறை நிஷா பிஸ்வால் உடன் இடம்பெற்றிருந்த சந்திப்பில் உள்ளக விசாரணையினையை எதிர்த்து வாதிட்டவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் மட்டுமே. எனினும் இப்போது அவரும் புறந்தள்ளப்பட்டு வெறும் ஆமாம் போடும் கும்பலொன்று சந்திப்புக்களில் பங்கெடுக்கும் சூழலொன்று தற்போது உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கும் கௌரவத்தை, மற்றைய கட்சிகளும் வழங்க வேண்டும் – சுரேஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கும் கௌரவத்தை மற்றைய கட்சிகளும் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

மேலும் அவர் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தேசியப் பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டாக இயங்க வேண்டும்.

 

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை நடைமுறைப்படுத்துவது போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதேபோன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் போதும் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்பட்டிருக்க வேண்டும்.அதனைத் தான் மக்களும் ஏற்றுக் கொண்ட விடயம் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தனித்துவமாக தனி ஒரு கட்சி மட்டும் தன்னிச்சையாக செயற்படுவது சரியான வழிமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் கூட்டாக இயங்க ஆணை கொடுத்திருக்கும் தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக இணைந்து முடிவுகளை எடுத்தால், இணைந்து செயற்படுகின்ற கட்சிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அவ்வாறு இல்லாமல் ஒரு கட்சி மட்டும் தானாக முடிவுகளை எடுப்பது கட்சிகளுக்கும் மக்களுக்கும் இருக்கும் நம்பிக்கையினை சீர்குலைத்து விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வடக்கு முதலமைச்சரை வீட்டிற்கு அனுப்ப சுமந்திரனின் கும்பல் அழுத்தம்!!

வடமாகாண முதலமைச்சரினை வீட்டுக்கனுப்பும் கூட்டமைப்பு சதித்திட்டம் தேர்தலின் பின்னராக மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மாதாந்த முன்னோடிக்கூட்டத்தில் முதலமைச்சரினை பதவியினை ராஜினாமா செய்து வீட்டுக்கு செல்லும்படி சுமந்திரனால் இயக்கப்படும் வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி மற்றும் ஆனோல்ட் கும்பல் கோரியுள்ளது.

 

இனிமேல் முதலமைச்சரின் தலைமையினை ஏற்கப்போவதில்லையெனவும் அவர் தலைமையிலான கூட்டங்களிற்கு பிரசன்னமாகப்போவதில்லையெனவும் தெரிவித்து மிரட்டியுள்ள இக்கும்பல் கௌரவமாக பதவியினை ராஜினாமா செய்துவிட்டு வீடு செல்லவும் வற்புறுத்தியுள்ளது.

 

புதிய திட்டத்தின் பிரகாரம் தற்போதைய தவிசாளரும் முதலமைச்சர் கதிரையில் மாறாத காதல் கொண்டவருமான சீ.வி.கே.சிவஞானத்தை முதலமைச்சராக்கவும் அமைச்சர்களுள் ஒருவரை பேரவை தலைவராக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வெற்றிடமாகும் அமைச்சு பதவிக்கு சுழற்சி முறையில் ஆனோல்ட், சுகிர்தன் தரப்புக்களிற்கு சந்தர்ப்பம் வழங்க சுமந்திரன் தரப்பு உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

தேர்தலில் நடுநிலை வகிக்கும் முதலமைச்சரது முடிவினையடுத்தும் ஏற்கனவே இனஅழிப்பு பிரேரணையினை நிறைவேற்றியமை மற்றும் சர்வதேச அழுத்தங்களிற்கு பணிந்து போகாமை, ரணில் அரசுடன் முரண்பட்ட போக்கென தமிழரசுக்கட்சி தலைமை பழிவாங்க காத்திருந்தது. தேர்தல் வெற்றிக்கு பின்னராக அதனை அமுல்படுத்த சம்பந்தன் தரப்பினிலிருந்தும் நல்லெண்ண சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

தொடர்ச்சியான அழுத்தங்களினை பிரயோகித்து தனிமனித கௌரவத்தை பேணும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சுயமாக ராஜினாமா செய்து வீடு போகச்செய்வதே இத்தரப்பினது நோக்கமென நம்பப்படுகின்றது.

 

மூத்த நீதிவானாகவும் தமிழர்களின் நன்மை மதிப்பினை பெற்றவருமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரினை நேற்று முளைத்த காளான்கள் கேள்வி கேட்ட அவமதித்த வேளை அவர் கூனிப்போயிருந்தமை மனதில் வலியினை தருவதாக நடுநிலையான கூட்டமைப்பு உறுப்பினரொருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ரணிலென பலதரப்பும் முதலமைச்சரினை வீட்டுக்கனுப்பும் நடவடிக்கைக்கு மறைமுக ஆசீர்வாதத்தை வழங்கிவருவதாக சுமந்திரனினது ஆதவாளர்கள் தரப்பில் ஏனைய உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

இத்தகைய சூழல் இன்ற வடமாகாண கூட்டத்தொடர் பல அதிசயங்களை தரலாமெனவும் அவர் கருத்து வெளியிட்டார். எங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன் சீற்றம்! பொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. தேர்தலில் நாங்கள் தேல்வியடைந்தமைக்கு தமிழரசுக் கட்சியே காரணமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

 

இத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செயலாளர் அவர்கள், எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தைக் கூறவில்லை.

 

மாறாக வாக்குப் போடக் கூடாது என்ற கருத்தே கூறியுள்ளார்.

 

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்’க வேண்டும். என் மீது அதிருப்தி இருந்தால் வாக்களிக்க வேண்டாம்
என மக்களிடம் கேட்டிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தோல்வியின் பின்னணியில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் – பொன்.செல்வராசா குற்றச்சாட்டு

 

பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழரசுக்கட்சியின் ஐந்து பேருக்கும் ஆதரவாக வேலை செய்கின்றேன் என்று வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மிக அக்கறையாக இருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டினார்.

 

மாலை மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கலந்து கொண்டார்.

நன்றி ஈழப்பார்வை