தடைநீக்கமும், தடைநீடிப்பும்: - கலாநிதி சேரமான்

வியாழன் நவம்பர் 26, 2015

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளடங்கலான பதினாறு தமிழ் அமைப்புக்கள் மீதும், நானுற்று இருபத்து நான்கு தனிநபர்கள் மீதும் கடந்த ஆண்டு ராஜபக்ச அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பாகக் கடந்த பத்து மாதங்களாக மைத்தரி- ரணில் அரசாங்கம் மேற்கொண்ட மீளாய்வுகள் சென்ற வாரம் நிறைவுக்கு வந்திருக்கின்றன.

இம் மீளாய்வின் பெறுபேறாக உலகத் தமிழர் பேரவை உள்ளடங்கலான எட்டு அமைப்புக்கள் மீதும், இருநூற்று அறுபத்தொன்பது தனிநபர்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்புக்களும், தனிநபர்களும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டமைக்கான எந்தவிதமான ஆதாரங்களோ அன்றி புலனாய்வுத் தகவல்களோ இல்லாத நிலையில் இவர்கள் மீதான தடையை நீடிப்பது அனாவசியமானது என்ற வகையிலேயே தடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.

அதேநேரத்தில் தடை நீடிக்கப்பட்டுள்ள ஏனைய எட்டு அமைப்புக்களும், நூற்று ஐம்பத்தைந்து தனிநபர்களும் வன்முறையையும், பிரிவினைவாதத்தையும் கைவிடுவதாகப் பகிரங்கமாக அறிவித்தால் அவர்கள் மீதான தடையும் நீக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

மறுபுறத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் தடைநீக்கம் நல்லிணக்கத்திற்கான பாதையில் ஒரு முக்கிய நகர்வு என்று பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலகத்தின் அமைச்சர் கூகோ சுவையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ராஜபக்ச அரசாங்கம் தடைப்பட்டியலை வெளியிட்ட பொழுது புலம்பெயர் தமிழர்களில் பலர் அதிர்ந்து போய் விட்டார்கள். ஏனென்றால் புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் முழுப்பெயர், புனைபெயர், வெளிநாட்டு முகவரி, தாயக முகவரி, தொலைபேசி எண், பிறந்த நாள், கடவுச்சீட்டு எண் உள்ளடங்கலான விபரங்கள் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

போதாக்குறைக்கு இன்னும் மூவாயிரம் தனிநபர்களின் தடைப்பட்டியலை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வருவதாக கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் விறுவிறுப்புச் செய்தி வெளியிடும் இணையம் ஒன்று கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டது. ஒட்டுமொத்தத்தில் ராஜபக்ச அரசாங்கம் வெளியிட்ட தடைப்பட்டியல் அன்று புலம்பெயர் தமிழர்கள் பலரிடையே உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சிங்களப் புலனாய்வுத்துறை உலகெங்கும் அகலக் கால்பதித்துத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் விபரங்களைத் துல்லியமாகத் திரட்டி வருவது போன்ற பிரம்மை அப்பொழுது பலரிடையே ஏற்பட்டிருந்தது.

ஆனால் நடந்ததோ வேறு. போர்நிறுத்த காலப்பகுதியில் வன்னிக்குச் சென்று வந்த புலம்பெயர் தமிழர்கள் அனைவரின் விபரங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பதிவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. புளியங்குளத்திலும், பளையிலும் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடிகள் ஊடாகப் பயணித்தோருக்கும், வன்னியில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்காக கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தில் சுற்றுப்பயண அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்தோருக்கும் இது தெரியும்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்த கோவைகளில் சிலவற்றை இறுதி யுத்தத்தின் முடிவில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இக்கோவைகளில் காணப்பட்ட நானுVற்று இருபத்து நான்கு பேரே ராஜபக்ச அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர். இப்பட்டியல் வெளியிடப்பட்டு ஏறத்தாள மூன்று வாரங்களின் பின்னர் தெய்வீகன் என்பவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்டம் அளிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை முறியடித்ததாக பரபரப்பான செய்தியயான்றை ராஜபக்ச அரசாங்கம் வெளியிட்டிருந்தது.

அத்தோடு ராஜபக்ச அரசாங்கம் நிற்கவில்லை. கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராசதந்திரிகளை உடனடியாக அழைத்த அன்றைய வெளியுறத்துறை அமைச்சர் காமினி லக்ஷ்மன் பீரிஸ், தடைப்பட்டியலில் இணைக்கப்பட்ட அனைவரும் தெய்வீகன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் என்றும், இவர்கள் மீது அவர்கள் வாழும் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் இதனையிட்டு மேற்குலக நாடுகள் அலட்டிக் கொள்ளவில்லை. இதுபற்றி அப்பொழுது அறிக்கையயான்றை வெளியிட்ட பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு, ராஜபக்ச அரசாங்கத்தின் தடைப்பட்டியலைத் தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும், இது சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை மூடி அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி என்றும் அறிவித்தது. இதே பாணியிலான கருத்தையே கனடிய அரசாங்கமும் வெளியிட்டிருந்தது.

அத்தோடு தெய்வீகன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி வெளிவந்த செய்திகளையும் மேற்குலக நாடுகள் பெரிதாக எடுக்கவில்லை. இது பற்றி பிரித்தானியத் தமிழ் அரசறிவியலாளர்கள் சிலரிடம் மேற்குலக இராசதந்திரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் பற்றி ராஜபக்ச அரசாங்கம் ஒரு நாடகத்தை நடத்தி முடித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கடந்த பங்குனி மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது புதிய சிங்கள அதிபர் மைத்திரிபால சிறீசேனவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மறைமுகமாக ஒப்புக் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றுசேர்கின்றார்கள் என்ற பிரம்மையைத் தோற்றுவித்துப் புலம்பெயர் தமிழர்களில் ஒரு தொகுதியினரை ராஜபக்ச அரசாங்கம் அவசர அவசரமாகத் தடைப்பட்டியலில் இணைத்துக் கொண்டது என்றும், இம்முடிவைப் புதிய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார். அதிலும் தடைப்பட்டியலில் இணைக்கப்பட்ட சிலர் உயிருடன் இல்லை என்றும், ஏனைய பலர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி தடைப்பட்டியலில் இணைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது மைத்திரி-ரணில் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் நூற்று ஐம்பத்தைந்து பேரில் ஒருவர் இப்பொழுது உயிரோடு இல்லை என்பதுதான். அந்த நபர் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் யார் என்பது பற்றிய விபரத்தை நாம் இவ்விடத்தில் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்கின்றோம். ஏனென்றால் சிறீலங்கா அரசாங்கத்திடம் உண்மையில் வலுவானதொரு புலனாய்வு வலையமைப்பு இருக்குமானால் இறந்துபோன அந்த நபர் யார் என்பதை அவர்களின் புலனாய்வாளர்கள் கண்டறிந்து கொள்ளட்டும். அத்தோடு புதிய தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட கணிசமானோரின் பெயர் விபரங்களிலும் ராஜபக்ச அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் இருந்த அதே தவறான விபரங்கள் உள்ளன. அவை என்ன என்பதையும் இவ்விடத்தில் வெளியிடுவதை நாம் தவிர்த்துக் கொள்கின்றோம். ஏனென்றால் அவற்றையும் முடிந்தால் சிறீலங்கா புலனாய்வுத்துறை கண்டறியட்டும்.

ஆக ஆட்சியிழந்த ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் சரி, இப்பொழுது ஆட்சியிலிருக்கும் மைத்திரி‡ரணில் அரசாங்கமாக இருந்தாலும் சரி, துல்லியமான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இவ்விரு அரசாங்கங்களும் தடைப்பட்டியல்களை வெளியிடவில்லை. மாறாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆவணக் கோவைகளில் பெறப்பட்ட 2006ஆம் ஆண்டுக்கு முன்னரான (கண்டி வீதி மூடப்படுவதற்கு முன்னர்) காலவதியாகிய தகவல்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒன்றிரண்டு தரவுகளை சரிசெய்து விட்டுத் தடைப்பட்டியல்களைத் தயாரித்திருக்கின்றன.

1994ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடொன்றில் இருந்து தாயகம் சென்று விட்டு மீண்டும் ஐரோப்பா திரும்ப முற்பட்ட பொழுது கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ்த் தேசியசெயற்பட்டாளர் ஒருவர் விடுதலையாகி மீண்டும் வெளிநாடு திரும்பி வந்ததும் ஒரு நகைச்சுவையான தகவலை வெளியிட்டிருந்தார். அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்த சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவர் செயற்பட்ட நாட்டில் பணிபுரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விபரங்களை சித்திரவதை செய்து வினவுவார்களாம். பதில் கூறாவிட்டால் சித்திரவதை தொடரும். அதனால் அவரும் ஏதாவது பொய்யை கூறுவாராம்.

ஒருமுறை அவர் செயற்பட்ட நாட்டிற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளரின் பெயரை சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் வினவியுள்ளார்கள். அப்பொழுது நிதிப் பொறுப்பாளர் பதவிக்கு அவரது நாட்டில் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அப்பதவியில் எவரும் இல்லை என்று சம்பந்தப்பட்ட நபர் கூறியிருக்கின்றார். ஆனால் அதனை நம்பாத சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் உடனே தமது சித்திரவதையை அதிகரித்திருக்கின்றார்கள். இதனால் வெலவெலத்துப் போன அவர், தனக்குத் தெரிந்த எவரோ ஒருவரின் பெயரையும், பொய்யான முகவரியையும் கூறியிருக்கின்றார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், அவரது நாட்டுக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளர் யார் என்று அடுத்த கேள்வியைத் தொடுத்திருக்கின்றார்கள். அதற்கு அவர் எவ்வித சலனமும் இன்றி தனக்குத் தெரிந்த இன்னுமொரு சாதாரண பொதுமகன் ஒருவரின் பெயரையும், மீண்டும் போலியான முகவரியையும் வழங்கியிருக்கின்றார். இதனால் திருப்தியடைந்த சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், அதன் பின்னர் சித்திரவதைகளைக் குறைத்தார்களாம்.

இது நடந்து இருபத்தொரு ஆண்டுகள் கடந்து விட்டன. இப்பொழுது வெளிவந்திருக்கும் தடைப்பட்டியலைப் பார்க்கும் பொழுது, சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரின் சித்திரவதையைத் தாங்க முடியாத யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் கண்ணை மூடிக் கொண்டு சுட்டிவிரலை நீட்டிக் காட்டிய நூற்று ஐம்பத்தைந்து தனிநபர்களைப் புதிய தடைப்பட்டியலில் மைத்திரி - ரணில் அரசாங்கம் இணைத்துள்ளது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால் தடைப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள இறந்து போன ஒரு தனிநபரையும், தவறான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சிலரையும் விட இன்னும் பலர் தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்று முழுதாக ஒதுங்கி வாழ்பவர்கள்.

இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால், கே.பியின் வழிகாட்டலில் புலம்பெயர் தேசங்களில் இயங்கி வரும் வேலும்மயிலும் மனோகரன் (பிரான்ஸ்), விசுவநாதன் உருத்திரகுமாரன் (அமெரிக்கா) போன்ற தனது முகவர்களையும் தடைப்பட்டியலில் மைத்தரி ‡ ரணில் அரசாங்கம் இணைத்திருப்பதுதான். ஏதோ இவர்கள் இருவரையும் தடைப்பட்டியில் இணைத்து விட்டால் இவர்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் புலம்பெயர் தமிழர்கள் நம்பிவிடுவார்கள் என்று மைத்திரி - ரணில் அரசாங்கம் நம்புகின்றது போலும். இதே திருவிளையாடலைத்தான் ராஜபக்ச அரசாங்கமும் மேற்கொண்டது என்பதைப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் எவரும் மறந்து விடவில்லை.

‘சிங்களவனுக்கு மேல்மாடியில் எதுவும் இல்லை’ என்று 2005 ஆம் ஆண்டு இலண்டன் அலெக்சாண்டரா மாளிகையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் உரையாற்றும் பொழுது தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறியதுதான் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது.