தமிழர்களின் உரிமைக்காக தொடர்ச்சியாகக் குரல்கொடுத்தது கொன்சவ்வேட்டிவ் கட்சி மட்டுமே: கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர்

திங்கள் அக்டோபர் 19, 2015

கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜேசன் கெனி வழங்கிய விரிவான நேர்காணலில், தமிழர்களுக்கு கொன்சவ்வேட்டிவ் கட்சி வழங்கிய தொடர்ச்சியான ஆதரவையும், மனித உரிமை விடயத்தில் கொடுத்த மிக உச்சக்கட்ட அழுத்தத்தையும், கொமன்வெல்த் தலைவர்களுக்கான மாநாட்டைப் புறக்கணித்ததால் சிறீலங்கா அரசுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கொடுத்த மேலதிக அழுத்தங்களையும் சுட்டிக்காட்டினார்.

 

தற்போது உள்நாட்டு விசாரணை பற்றிப் பேசப்படுவதுடன், அதனூடாக நீதி கிடைத்துவிடும் என்று தமிழர்களை நம்பவைக்க பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச விசாரணை மூலமே தமிழினத்திற்கு நிரந்தர சமாதானமும் நீதியும் கிடைக்கும் என்றும், அத்தகைய சர்வதேச விசாரணைக்கான அழுத்தத்தையும் நிதியுதவியையும் கொன்சவ்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால் நிட்சயம் முன்னெடுக்கும் என்று உறுதிகூறினார் அமைச்சர்.

 

கொன்சவ்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பூப்புனித நீராட்டு விழாவை நடத்துவது தடைப்பட்டுவிடும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யுமளவிற்கு, லிபரல் கட்சியின் தமிழ் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்கள் சிலரும் மிகவும் தரமிறங்கிப்போயிருக்கும் நிலையில், முள்ளிவாய்க்கால் துயரத்தின் பின் தமிழர்கள் சர்வதேச சக்திகளின் ஆதரவைப் பெறமுடியாமல் புறக்கணிக்கப்பட்டபோது, அதிஉச்ச அழுத்தங்களை அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வழங்கியது கனடாவின் கொன்சவ்வேட்டிவ் கட்சியே என்பதை பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

 

இந்நிலையில், கௌரவ ஜேசன் கெனி அவர்கள், பலரும் முன்வைக்கின்ற பல்வேறு விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கமளிக்கிறார்.