தமிழினியின் இழப்பு உலகத் தமிழ் பெண்களுக்கே ஏற்பட்ட இழப்பு!

செவ்வாய் அக்டோபர் 20, 2015

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை மற்றும் மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி (ஜெயக்குமார் சிவகாமி) அவர்கள்18.10.2015 அன்று காலமான செய்தியறிந்து, பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினராகிய நாம் மிகுந்த வேதனையடைகின்றோம். 

 


43 வயதேயான தமிழினி புற்றுநோய் காரணமாக இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும், இதுவும் சிறிலங்காவினால் திட்டமிட்டு நடத்தப்பட்டுவருகின்ற தமிழினப் படுகொலைகளில் ஒன்றே என பலரும் தமது ஆதங்கங்களைத் தெரிவிக்கத் தவறவில்லை.  தமிழினி 1991ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார். தொடர்ந்து அவர் ஆற்றிய களப் பணிகள் ஏராளம். 

 


தமிழினி 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா பாதுகாப்புப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டு, வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் புனர்வாழ்வு எனும் பெயரில் 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 

 


அதன்பின்னரும் அவரால் நின்மதியாக வாழ முடியாத நிலையே அவருக்கு அங்கு ஏற்பட்டது. அவர் உடல், உள ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். சிறிலங்கா அரசினால் அவருடைய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர் அங்கு காணப்பட்டார்.

 


கடந்த 2003 ஆம் ஆண்டில் ஊடகம் ஒன்றுக்கு தமிழினி வழங்கிய நேர்காணலில்,

 


 'எமது தமிழ் பெண்கள் அமைதியான வாழ்க்கை வாழவே ஆசைப்பட்டார்கள். ஆனால், அந்த வாழ்க்கை மறுக்கப்பட்டதனாலேயே ஆயுதம் ஏந்தினார்கள். எமது தேச விடுதலைப் போராட்டத்தில பெண்களும் சமமாகத் தமது பங்களிப்பைச் செய்கின்றனர். அது மிகவும் முக்கியமான தவிர்க்கமுடியாத கடமை." என்று பெண்களின் கடமை பற்றி தெரிவித்திருக்கின்றார். 

 


இவரின் இழப்பினால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் பெண்கள் அமைப்பினரும் மிகுந்த வேதனையையும் துக்கத்தையும் அடைந்துள்ளனர். 
 தமிழினியின் இழப்பு உலகத் தமிழ்ப் பெண்களுக்கே ஏற்பட்ட இழப்பாகும். இவருக்கு பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினராகிய நாம், மிகுந்த வேதனையுடன் கண்ணீர் அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரிவிக்கின்றோம்.

 


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! 

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு                             
தமிழ் பெண்கள் அமைப்பு.