தமிழீழப் பெண்களின் அரசியல் ஆளுமையின் வடிவமாகத் திகழ்ந்தவர் வீரப்புதல்வி தமிழினி: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ஞாயிறு அக்டோபர் 18, 2015

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி அவர்கள் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

 

சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1991 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டது முதல் தனது பல்துறைசார் திறன்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். பேச்சாற்றல், படைப்புத்திறன் என்பவற்றுடன் சிறந்த அரசியல் அறிவுமிக்கவராகவும் விளங்கிய தமிழினி அவர்கள் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் என்கிற நிலையில் இருந்து ஆற்றிய பணிகள் ஏராளம்.

 

தமிழீழப் பெண்களை அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களாக மாற்றியதில் தமிழினியின் பங்கு அளப்பரியது. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் 'பிரிகேடியர்' சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இணைந்து தாயகத்தில் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்த சமகாலத்தில் வெளிநாடுகளில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளிலும் பங்கேற்றிருந்தார்.

 

சிங்கள பௌத்த பேரினவாத அரசால் 2009 இல் தமிழீழ தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புப் போரின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிங்கள கொடுஞ்சிறையில் சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தமிழினி அவர்கள் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டு 2013 இல் விடுவிக்கப்பட்டிருந்தார்.

 

சிறை வாழ்வில் அனுபவித்த கொடுமைகள் யாவும் புனர்வாழ்வு காலத்திலும் தொடர்கதையாகிய நிலையில் தளராத மன உறுதியுடன் இயல்பு வாழ்வில் அடியெடுத்துவைத்த தமிழினி அவர்களது வாழ்க்கைப் பயணம் இன்று அதிகாலையுடன் முடிந்துபோனமை பெரும் துயரமாகும்.

 

தமிழீழப் பெண்களின் அரசியல் ஆளுமையின் வடிவமாகத் திகழ்ந்த  தமிழினி அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாததென்றாலும் அவர் உயிர் மூச்சாய் கொண்ட இலட்சிய தாகம் உயிரோடுதான் உள்ளது. அந்த இலட்சிய தாகத்தை ஈடேற்றுவது எங்கள் ஒவ்வொருவரது கடமையாகும்.

 

தமிழினி அவர்களுக்கு உலகத்தமிழர்கள் சார்பில் எமது அகவணக்கத்தை செலுத்துவதோடு அவரின் இழப்பால் துயருற்று வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம் .

 

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.