தமிழை வளர்ப்பதற்கு மலேசியாவில் ஐம்பெரும் விழா

வெள்ளி டிசம்பர் 11, 2015

ராஜராஜ சோழன், பாரதியார், ராஜேந்திர சோழன் புகழ் பற்றிய விழா ஐம்பெரும் விழாவாக மலேசியாவில் மூன்று நாட்கள் நடக்கிறது. பேரரசன் ராஜராஜ சோழனின் 1030 -ம் ஆண்டு பிறந்த நாள் விழாவான சதய விழா, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் விழா, மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணையேறிய 1001 ஆண்டு ஆனதை போற்றும் விழா ஆகியவற்றை சென்னை தமிழ்சங்கமும், மலேசிய தமிழ்சங்கமும் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கத்துடன் ஐம்பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

இது மலேசியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க உள்ள தமிழ் அறிஞர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ் வாழ் மக்கள் கலந்து கொள்கின்றனர். இன்று (10-ம் தேதி) மாலை தொடங்கும் இந்த விழா, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

தமிழை போற்றும் வகையிலும் தமிழக கலைகளை உலகுக்கு எடுத்து செல்லும் வகையிலும் விழாவில் தமிழக கலை பண்பாட்டுதுறை சார்பில் பிரமாண்ட கலை நிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, பன்னாட்டு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பை தொடங்கி வைப்பதுடன், தமிழ் வளர்ச்சி குறித்தும் உரையாற்றுக்கிறார்.

இந்த விழா குறித்து சென்னை தமிழ் சங்கத்தின் உறுப்பினர் ராஜேஷிடம் பேசியபோது ”எப்பவும் எளிமையாக நடத்தப்படும் இந்த விழா இந்த முறைதான் ஐம்பெரும் விழாவாக பிரமாண்டமாக நடக்கிறது. விழா நடக்கும் இடங்கள் எல்லாம் விழா கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழை வளர்க்கவும், தமிழர்களின் பெருமையை உலகம் அறியவும் செய்த பேரரசன் ராஜராஜ சோழன் பற்றி உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் அறிஞர்கள் பேச உள்ளனர். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுக்கவே ஆட்சி செய்த ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் புகழ் இன்றளவும் பரவி கிடக்கிறது. அவர்களின் செயல்பாடுகளை இப்போது பின்பற்றும் வகையில் வரலாற்று வல்லுநர்கள் பேச உள்ளனர்.

பாரதியார் கவிதையை உலகம் முழுக்க பரவ செய்யும் விதத்திலும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்க செந்தமிழ், வாழ்க நற்றமிழர் என்ற சொல்லுகேற்ப பிரமாண்டமாக நடக்கும் இந்த விழா, இனி வரும் காலங்களிலும் விமரிசையாக நடக்கும்” என்றார்.