தமிழ் அவமானமல்ல அடையாளம் - உலகத் தாய்மொழி தினம்

திங்கள் பெப்ரவரி 22, 2016

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பேசத் தொடங்கிய முதல் மொழிக்கு, அவனுடைய தாய் தான் முதல் ஆசிரியை. அதுதான் அவன் தாய் மொழி. பிப்ரவரி 21ஆம் தேதி. உலகத் தாய் மொழி தினம். யுனெஸ்கோ அமைப்பின் பிரகடனத்தின் வழி உலகமெங்கும் தாய்மொழி தினம், கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

சுய பெயர் இல்லாத மனிதனே உலகில் இல்லை. அப்படியொருவன் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவனுக்கும் கூட ஓர் அடையாளம் உண்டு. அதுதான் அவனது தாய்மொழி.

இன்றைக்கு உலகில் 7,000 மொழிகள் உள்ளன. இவற்றில் பல விறுவிறுவென அழிந்து கொண்டிருக்கின்றன. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழின் நிலையென்ன? வீடுகளில், பொது இடங்களில், தமிழர்களுக்குத் தமிழர்கள் சரளமாகப் பேசும் மொழியாகத் தமிழ் நீடிக்கிறதா? வீட்டில் எங்கள் பிள்ளைகளிடம் நாங்கள் தமிழில் உரையாடுகின்றோமா? எதிர்காலத்தில், இந்நிலைமை மேலும் மோசமடையலாம். “தமிழில் பேசுவோம்; தமிழாய் வாழ்வோம்” என்ற முழக்கத்தை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

தாய் மொழி மட்டுமே, அம்மொழி சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகளை, பண்பியல் தொன்மைகளை, புறவியல் ரீதியாகவும் அகவியல் ரீதியாகவும் உள்வாங்கி உயரச் செய்கிறது. மொழியை இழந்தவன் செத்த பிணத்துக்கு சமன் என்று கூறுவார்கள். இன்று தமிழீழத்தில் எத்தனை எத்தனை கிராமங்கள் ஊர்கள் சிங்கள பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன? சிங்களத் திணிப்பு இப்பவும் தாயகத்தில் தொடர்கின்றது, ஸ்ரீலங்கா தலைநகரில் வெளிநாடுகளை ஏமாற்ற தமிழில் தேசிய கீதம் ஆனால் தமிழீழ மண்ணில் எங்களது மக்கள் மீது சிங்கள திணிப்பு மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம். இவற்றையெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே எம்மால் பார்க்க முடியும். மொழியை அழித்தால் எல்லாம் அடங்கிவிடும் என்று சிங்களம் கனவு கொண்டு இருக்கின்றது .

அன்று நான்கு மாணவர்கள் மொழிக்காக போராடி சுட்டுக்கொல்லப்பட்ட படியால் யுனஸ்கோ தாய்மொழி தினம் என்று பெப்ரவரி 21ஐ அறிவித்தது இன்று எங்களது தமிழ் மொழியை காக்க 40 000 க்கும் மேற்பட்ட மாவீரர்களை நாம் இழந்து நிற்கின்றோம்.

எங்களது அன்பிற்குரிய தமிழ் மக்களே புலத்தில் எத்தனை ஆயிரம் தமிழ்ப் பாடசாலைகள் இருந்தாலும் 'அம்மா' 'அப்பா' என்று முதலில் சொல்லி கொடுக்குமிடம் உங்கள் வீடுதான். தாய்மொழியை நேசிக்கும் பண்புதனை அடுத்தடுத்த தலை முறைக்குக் கொண்டு செல்லவேண்டும். நமது முன்னோர்கள், காலகாலமாய் கையில் ஏந்தி வந்து நம்மிடம் ஒப்படைத்த தாய்மொழி என்கிற தீபத்தை, நமது பிள்ளைகளிடம் நாம் ஒப்படைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இந் நேரத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பும் முயன்றளவு தமிழை எங்கள் தலைமுறைக்கும் அடுத்துவரும் சந்ததிக்கும் எடுத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளோம். பல்கலைக்கழகங்கள் தொடக்கம் அனைத்து இளையவர் வேலைத்திடங்களிலும் எங்களது மொழியையும் எமது அடையாளத்தையும் வெளிக்கொண்டு வந்து கொண்டிடிருக்குறோம் இதன் ஒரு முயற்சியாக இவ் முறை தாய்மொழி தினத்தை முன்ணிட்டு எங்களது அடையாளம் சார்ந்த சிறிய புத்தகமொன்றை அனைத்து லண்டன் தமிழ்ப்பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு வழங்கவிருக்குறோம். உங்களது பாடசாலைக்கும் எங்களை அழைக்க எம்மை தொடர்புகொள்ளுங்கள்.