தலையாட்டி சம்பந்தனும் விழித்தெழ வேண்டிய தமிழினமும்

ஞாயிறு சனவரி 24, 2016

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்ற இலட்சியக் கொள்கையுடன் போராட்டத்தை நடத்தி சர்வதேசமே வியக்கும் வகையில் பெரும் சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானங்கள் சிறீலங்கா அரச படைகளால் சிதைக்கப்பட்ட பின்னர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் தமிழ் மக்களைக் கவலையடைய வைத்துள்ளன.

இதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்களை பெரும் அதிருப்திக்கு கொண்டு சென்றிருக்கின்றது. கூட்டமைப்பின் வாயிலிருந்து இதுவரை வெளிவந்த கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு, அதிலும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு பெரும் எரிச்சலைக் கொடுத்திருந்தது.

இந்தக் கருத்துக்கள் அனைத்திற்கும் மேல் சென்ற கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த வாரம் சிறீலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரை தமிழ் மக்களைக் கடுப்பேற்றியிருக்கின்றது. சம்பந்தனை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவரது கருத்து தமிழ் மக்களை விசனமடைய வைத்துள்ளது.

சம்பந்தன் அப்படி என்னதான் சொன்னார்? ‘தமிழ் மக்களுக்கு இனி தனிநாடு தேவையில்லை. தனிநாடு என்ற கோரிக்கையை இனி யாரும் முன்வைக்க மாட்டார்கள். இலங்கை எமது நாடு என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்வதற்கு தமிழர்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள்? என்று அவர் சிறீலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரை ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துள்ளது.

மேலும், தமிழ் மக்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவை சம்பந்தன் தேசியத் தலைவர் என்று வர்ணித்திருக்கின்றார். சிங்களத்துடன் சேர்ந்து வாழ்வதற்கு தமிழர்கள் தயார் என்ற அர்த்தத்தில் அவரது உரை அமைந்திருக்கின்றது. தமிழர்களின் தலைமைப் பிரதிநிதி என்ற பாத்திரத்தை வகிக்கும் சம்பந்தன் ஆற்றிய இந்த உரையானது அனைத்துச் சிங்களவர்களின் வாயிலும் பாலையும் தேனையும் வார்த்திருக்கும் என்பது ஐயமற்ற உண்மை.

சம்பந்தன் இவ்வாறு உரையாற்றியமைக்கு காரணம் இல்லாமல் இல்லை. அதற்கு முக்கிய காரணம் அவரது செல்லப்பிள்ளை சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்ற போதிலும் இங்கு முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தன், சுமந்திரன் ஆகிய இருவருக்கு மட்டுமே இருக்கின்றது.

மேற்படி சுமந்திரன் என்பவர், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியத்தில் சிறந்த பற்றுடையவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நேசித்தவருமான மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்காக என கூட்டமைப்பினுள் கொண்டுவரப்பட்டவர். இவரைக் கூட்டமைப்பினுள் கொண்டுவருவதற்காகவே ஜோசப் பரராஜசிங்கம் சிறீலங்கா அரச கைக்கூலிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்று தமிழ்த் தேசியவாதிகளிடையே இருக்கின்ற சந்தேகத்தை சுமந்திரன் இன்று நிரூபணமாக்கிக்கொண்டிருக்கின்றார்.

கூட்டமைப்பின் சாணக்கியன் என்றும், புலிகளுக்கு அன்ரன் பாலசிங்கம் போன்று கூட்டமைப்புக்கு சுமந்திரன் என்றும் கூட்டமைப்பின் கதிரைகளுக்காக அலைகின்றவர்கள் புகழ்கின்ற அளவுக்கு சுமந்திரன் கூட்டமைப்புக்குள் தனது காலை ஆழமாக ஊன்றிவிட்டார். இவரது பிடிக்குள் சம்பந்தன் சிக்கிக்கொண்டார் என்பதே உண்மை. சம்பந்தரின் அண்மைக்கால நகர்வுகள் இதனை துலாம்பரமாக எடுத்துரைக்கின்றன.

சுமந்திரனுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக பேசப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுமந்திரன் சிறீலங்கா புலனாய்வுத்துறையால் இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து அவர்களின் இலட்சிய வேள்வியை அடக்கிய அவர்களின் கொள்கைகளில் பலவீனத்தை ஏற்படுத்துவதற்காகவே சுமந்திரன் சிறீலங்கா அரசாங்கத்தால் தத்தெடுக்கப்பட்டிருக்கின்றார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சம்பந்தனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார். போராட்டம் என்பது தேவையற்றது என்றும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பிரபாகரனின் வழி சாத்தியப்பாடற்றது என்றும் சம்பந்தன் தொடர்ச்சியாக கூறி வருகின்றார். தேர்தல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளும் அவர்களின் தியாகங்களும் சம்பந்தரால் போற்றப்படும். பிரபாகரன் புனிதர் என்ற பட்டங்கள் வேறு வழங்கப்படும். ஆனால், வாக்குகள் பெற்று கதிரை ஏறிய பின்னர்தான் பிரபாகரன் பயங்கரவாதி, அவரது வழி சாத்தியப்பாடற்றது என்பது சம்பந்தனின் நினைவுக்கு வரும்.

சம்பந்தன் - சுமந்திரனின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிரானது என்று கூட்டமைப்பில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால், பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகளுக்கும் மாகாண சபை, நாடாளுமன்றுக்கும் கதிரை ஏறும் ஆசை கொண்ட கூட்டமைப்பின் உயர் நிலை, இளநிலை உறுப்பினர்கள் இதுபற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று கூறுகின்ற இவர்கள் தமிழ் மக்களை விற்றுப் பிழைக்கும் கூட்டமாக மாறிவிட்டனர்.

இந்த இடத்தில்தான், தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்களும் விழித்தெழவேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் இனியும் உறங்குவார்களாயின் உறக்கத்திலேயே படுகொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் தயாராகி வருகின்றனர். சர்வதேசத்தின் நச்சரிப்புகள் மற்றும் அழுத்தங்களில் இருந்தும் போர்க்குற்றத்தில் இருந்தும் தப்புவதற்காக சிறீலங்கா அரசு நாட்டில் நல்லாட்சி என்ற மாயை ஒன்றைக் காட்டி வருகின்றது. வெளிப்படையாக நல்லாட்சி மாயை காட்டுகின்ற மைத்திரி ‡ ரணில் கூட்டரசாங்கம் மறுபுறம் தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இவர்களின் இந்த நரித்தந்திரத்தினுள் தமிழ் மக்களின் முப்பதாண்டு காலப் போராட்ட இலட்சியம் சிக்குண்டு அடிபட்டுப் போய்விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் மக்களின் விடுதலைக்காக நாற்பதாயிரம் மாவீரர்களும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களும் செய்த தியாகங்கள் வீண் போகக்கூடாது. அது வீண்போகுமாயின் தமிழினம் இந்த உலகில் வாழ்வதில் அர்த்தம் இருக்காது.

தற்போது தமிழ் மக்களின் ஒற்றுமை மிகவும் அவசியமாக உள்ளது. புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அப்பளுக்கற்ற பிரதிநிதிகளும் ஒன்றுசேர்ந்து செயற்படவேண்டும். இந்த சேர்க்கையானது முப்பதாண்டு காலப் போராட்டத்தின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்கான சேர்க்கையாக இருக்கவேண்டும்.

காலத்தைக் கடத்தினால் தமிழ் மக்களின் காயங்களை ஆற்றலாம் என்று சிங்கள தேசம் கனவு காண்கிறது. இது வெறும் கனவுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாடும் தமிழ் மக்களை உணர்ச்சிக்குள் வைத்திருக்க உதவுமே தவிர பிரச்சினைக்கான, இழப்புகளுக்கான தீர்வைப் பெற்றுத்தர உதவாது.

புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் இணைகின்ற தமிழர் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளுக்கு கொடுக்கின்ற அழுத்தமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும். இந்த உண்மையை உணர்ந்து செயற்பட, உலக அரங்கில் அழுத்தி உரைக்க புலம்பெயர் தேசத்திலும் தமிழர் தாயகத்திலும் உள்ள அப்பழுக்கற்ற தமிழ்த் தேசியவாதிகள் முன்வரவேண்டும். 

 - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு