தேசியத் தலைவரின் மதிநுட்பத்தால் உருவான மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழ் மக்களின் கோயில்கள்!

வெள்ளி நவம்பர் 27, 2015

தமிழ் இனத்திற்காக தங்களை ஆகுதியாக்கிய அற்புத பிறவிகளாகிய மாவீரர்களின் நினைவு வாரம் தற்போது தமிழர் வாழும் பிரதேசம் எங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தன் இனத்தினுடைய விடிவிற்காகவும் நிம்மதியான வாழ்வுக்காகவும் எவனொருவன் உயரிய தியாகத்தைச் செய்கின்றானோ அவன் என்றென்றும் போற்றப்படுவான் என்ற தேசியத் தலைவரின் சிந்தனையைப் போன்று தமிழ் இனத்திற்காக மடிந்த மாவீரர்களை தமிழ் மக்கள் மனதில் இருத்தி நினைவுகூருகின்றனர். 

மாவீரர்கள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள். அனைவராலும் கைவிடப்பட்ட தமிழினத்திற்கு நாங்கள் இருக்கின்றோம் என்று முன்வந்து களத்தில் நின்ற காவிய நாயகர்கள். நாங்கள் தமிழர்களுக்கு அடிப்போம், உதைப்போம், அவர்களைக் கொலை செய்வோம், யார் கேட்பது என்று சிங்கள தேசம் மமதையில் கொக்கரித்தபோது நாங்கள் இருக்கின்றோம் என்று பகைக்கு முன் பொங்கி எழுந்தவர்களே மாவீரர்கள்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்படுகின்ற 1948 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே சிங்கள தேசம் தமிழ் மக்களை அடக்கியயாடுக்கியது. இலங்கை என்ற குட்டித் தீவில் தமிழ் மக்களே பூர்வீகக் குடிகள். சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்று தமிழர்களின் இலக்கியங்கள் மட்டுமன்றி இலங்கையின் வரலாற்றைக் கூறும் பழம்பெரும் நூல்களான மகாவம்சம், தீபவம்சம் போன்ற நூல்களும் எடுத்துரைக்கின்றன.

ஆனால், இந்த வரலாறுகளை மேற்படி இரு பெரும் இலக்கியங்களில் இருந்தும் சிங்கள ஆதிக்க வர்க்கம் நீக்கவிட்டு அந்த வரலாற்றை தங்களுக்கு சார்பாக மாற்றியமைத்தது. தமிழ் மக்களை அடக்கி ஆள்வதற்காகவே இந்த வரலாறுகள் மாற்றியமைக்கப்பட்டன.

இந்த வரலாற்று மாற்றங்களின் மூலம் சிங்கள தேசத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் மக்களை சர்வதேச அரங்கில் தூக்கி நிறுத்துவதற்காக தங்கள் வாழ்வைத் துறந்து களத்தில் போராடியவர்களே எங்கள் மாவீரர்கள். காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின. அந்த அடக்குமுறைகளுக் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று மனதால் உணர்வுபூர்வமாக சிந்தித்த பெரும் தலைவர் எங்கள் பிரபாகரன். மக்களில் அக்கறை கொண்ட அவரின் வழியில் திரண்டனர் ஆயிரமாயிரம் புலிகள்.

தமிழர் தாயகம் என்று வரையறுக்கப்பட்ட வடக்கு - கிழக்கிலுள்ள பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை சிங்கள இனவெறியர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கியமை கண்டு புலிகள் பொங்கி எழுந்தனர். இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வாழிடங்கள் ரீதியாகவும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டதை பொறுக்க முடியாமல் புலிகள் சிங்களத்தோடு மோத செருக்களம் புகுந்தவர்கள்.

சிங்கள தேசத்திடமும் நட்புறவு என்ற ரீதியில் சிங்கள தேசத்துடன் ஒட்டி உறவாடிய இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடமும் நீதி கோரிய தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். கொலைகாரர்களிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினர்.

ஆனால், இந்தப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று சித்திரித்த சிங்கள தேசம் புலிகளை அழித்தொழிக்க முற்பட்டது. இந்த அழித்தொழிப்புக்காக சிங்கள தேசம் அனுப்பிய படைகளை எமது வீரர்கள் எதிர்த்து நின்றார்கள். எதிர்த்து நின்று களமாடினார்கள். களத்தில் வீழ்ந்து மாவீரர் ஆனார்கள்.

மாவீரர்கள் காலத்தால் மறக்கப்பட முடியாத காவிய நாயகர்கள். இனத்திற்காக போராடியவர்களை இனம் மறக்காது. அதிலும் தமிழினம் உலகில் உள்ள இனங்களுக்குள் சிறப்பான இனம். இந்த இனத்தின் விடுதலைக்காக தோன்றிய போராட்டங்களும் சிறப்பானவையாகவே அமைந்தன. சேரர், சோழர், பாண்டியர்கள் என்ற தமிழ் மன்னர்கள் கங்கை தொட்டு கடாரம் வரை ஆட்சி செய்தார்கள். தமிழினத்தில் வீரத்தை இவர்கள் உலகெங்கும் பறைசாற்றினார்கள். அவர்கள் எதிரிகளைச் சிதறடித்த களமுனைகளிலும் ஆயிரமாயிரம் வீரர்கள் களப்பலியானார்கள்.

சோழர்கள் ஆழக் கடல் எங்கும் தமது வீரத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எட்டுத் திசைகளும் போர் முரசறைந்து எதிரிகளைச் சிதறடித்து, சிறைப்பிடித்து வெற்றிகளைக் குவித்தனர். அந்த வீரத் தளபதிகளின் வரிசையில் வந்தவரே எமது தேசியத் தலைவர் பிரபாகரன். அவரது தலைமையில் முகிழ்த்தெழுந்த புலிகள் தலைவரின் நேரிய வழிப்படுத்தலில் வெற்றிகளைக் குவித்தனர்.

உலகில் உள்ள எந்தவொரு விடுதலை அமைப்போ, இராணுவப் படையோ தமது படையணியில் இருந்து களமாடி உயிர்நீத்தவர்களை ஆண்டாண்டு  தோறும் பெருமெடுப்பில் நினைவுகூர்வதில்லை. யுத்தத்தில் பலியான தமது வீரர்களை எரியூட்டுதல் அல்லது ஒரே பாரிய குழியில் இட்டுப் புதைத்தல் போன்ற செயற்பாடுகளையே உலகில் உள்ள விடுதலை அமைப்புக்களும் இராணுவங்களும் மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தில் பலியான ஒவ்வொரு வீரர்களின் உடலையும் மதித்தனர். அவர்கள் உறங்குவதற்கு தனியான கல்லறைகள் அமைத்தனர். மாவீரர் துயிலும் இல்லங்கள் என்று அவை பெயர் புனிதம் பெற்றன. வீடுகளை விடவும் துயிலும் இல்லங்கள் அழகாகவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டன.

அந்த இடங்கள் புனிதப் பிரதேசமாக காட்சியளித்தன. தனது இனம் நிம்மதியாக வாழ்வதற்கு தங்களை ஆகுதியாக்கிய வீரர்களை புலிகள் அமைப்பு போற்றிய விதம் உலகையே ஆச்சரியப்படுத்தியது. தேசியத் தலைவரின் மதிநுட்பத்தால் உருவான மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழ் மக்களின் கோயில்களாக மாறின. ஆண்டுத் திருவிழாவுக்கு ஆலயம் செல்ல மறந்த மக்கள் ஆண்டுதோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் துயிலும் இல்லம் செல்லத் தவறுவதில்லை. மாவீரர்களுக்கு தீபமேற்றத் தவறுவதில்லை.

ஆனால், மனிதநேயம் என்பதே என்ன என்று தெரியாத சிங்களப் படைகளும் சிங்கள இனவெறி அரசும் தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையும் துவசம்சம் செய்திருக்கின்றது. உலக போர் விதிகளின் அடிப்படையில் யுத்தத்தில் உயிரிழந்த வீரரின் உடலை, கல்லறையை மதிக்கவேண்டியது எதிர் தரப்பு வீரரின் கடமை. புலிகள் இதை முறையாக கடைப்பிடித்தனர்.

களமுனையில் கைப்பற்றப்படும் சிறீலங்காப் படைகளின் சடலங்களை அவ்வப்போது புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், கண்காணிப்பு குழுக்கள் ஊடாக கையளித்து வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு படைத்தளத்தை தாக்கி அழித்தபோது கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான படையினரின் சடலங்களை சிங்கள தேசத்திடம் கையளித்தபோது அதை அவர்கள் ஏற்க மறுத்ததால் உரிய இராணுவ மரியாதையுடன் அவர்கள் வன்னியில் இறுதிக் கிரியைகளைச் செய்தார்கள். இதை உலகம் உன்னிப்பாக அவதானித்தது.

இப்படி நேர்மையான, புனிதமான போராட்டமாக நடத்தப்பட்ட உண்மையான விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் பயங்கரவாதக் கண்கொண்டு நோக்கியதால் எமது போராட்டம் இன்று சிதைக்கப்பட்டிருக்கின்றது. புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை தமிழ் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தினர். மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகின்றனர். தமிழீழ மாவீரர் நாள் இன்று தாயகத்திலும் ஆங்காங்கே கொண்டாடப்படுகின்றது. மக்கள் தங்கள் வீரர்களுக்கு விசேடமான இடங்களில் அஞ்சலி செலுத்தியே வருகின்றனர்.

சிறீலங்கா படைகளும் அரசும் எதைத்தான் செய்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மாவீரர்களையோ அவர்களின் விடுதலைக் கனவையோ தகர்த்து அழிக்க முடியாது. எத்தனை பரம்பரை கடந்து சென்றாலும் எமது மாவீரர்கள் உயிர்பெறுவார்கள். அவர்களின் கனவுகள் உயிர்வாழும்.

மாவீரர் வாரம் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமாகியதில் இருந்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் மாவீரர்களின் நினைவாகவே இருக்கின்றனர். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அண்மையில் வசிப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் காலை எழுந்தவுடன் கல்லறைகளுக்கு மலர் சூடிவிட்டே எமது கடமைகளை மேற்கொண்டனர். இன்று படையினர் கல்லறைகளைத் தகர்த்து அழித்த போதிலும் அந்த மக்கள் காலை எழுந்தவுடன் மாவீரரை நினைந்து துயிலும் இல்லம் நோக்கி மலர் தூவுகின்றனர். அதை எந்தப் படையாலும் தடுக்க முடியவில்லை.

ஆனாலும் மீண்டும் நாங்கள் மாவீரர்களுக்கு நேரில் சென்று மலர் தூவும் காலம் வரவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அந்தளவிற்கு அவர்கள் மாவீரர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள். காலத்தால் அழியாத அந்த அற்புதப் பிறவிகளை யாரால்தான் மறக்க முடியும். அவர்களின் தியாகங்களை யாரால்தான் நினைக்காமல் இருக்க முடியும்.

திருமணம் செய்து குடும்பம், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என்று ஆசாபாசங்களுடன் உலகியல் வாழ்வில் ஈடுபட்டுத் திழைக்கவேண்டிய ஆயிரமாயிரம் இளைஞர்களும் யுவதிகளும் அத்தனையையும் துறந்து களம் புகுந்து காவியமானதை எவரால்தான் மறக்க முடியும். தன் இனம் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களையே துச்சமாக மதித்து வீரகாவியமானவர்களை உலகம் உள்ளவரை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

தமிழீழம் ஒன்றே எமது விடுதலை மூச்சு என்று கூறி களம் புகுந்த மாவீரர்களின் கனவு நனவாக்கப்பட வேண்டும். அதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் தங்களைத் தயார்படுத்த வேண்டும். மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் கனவான தமிழீழத்தை அடைவதற்கு பல வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளை புலம்பெயர் தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் இணைந்து ஆராய வேண்டும்.

மேலும், புலத்திலும் நிலத்திலும் வாழ்கின்ற எமது இளைய தலைமுறைக்கு மாவீரர்கள் தொடர்பான சிந்தனைகளை எடுத்துக் கூறவேண்டும். எமது தேசம் எழுச்சியடையும் போதே தமிழீழம் என்ற எமது தாயக விடுதலை சாத்தியப்படும் என்பது மாவீரர்களின் எதிர்பார்ப்பு. அதை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாவீரர்களும் இறுதியாக தங்கள் உயிர்மூச்சை இழக்கும்போது ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தார்கள். அந்த இலட்சியத்தை அடைவதே நாங்கள் அவர்களுக்கு செய்கின்ற வணக்கமும் அஞ்சலியும் ஆகும். 

- தாயகத்தில் இருந்து காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு