நுளம்பிற்கு மருந்தடிக்கத் தயாராகின்றதா ஐ.நா? - கலாநிதி சேரமான்

வியாழன் ஓகஸ்ட் 06, 2015

உலக சமூகத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்வதும், பின்னர் ஏமாற்றப்படுவதும் காலம் காலமாக நிகழும் ஒன்று. அதிலும் உலக சமாதானத்தின் காவலன் என்று போற்றப்படும் ஐ.நா. மன்றம் தமிழ் மக்களின் காலை வாரி விடுவது என்பது இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல. அமைதி காக்கும் போர்வையில் போர் ஆயுதங்களுடன் தமிழீழ மண்ணில் இந்தியப் படைகள் களமிறங்கிப் பெரும் அட்டூழியங்களைப் புரிந்த பொழுதும், சூரியக்கதிரின் பெயரில் யாழ் குடாநாடு மீது பெரும் படையயடுப்பை சிங்களப் படைகள் தொடங்கி ஒரே இரவில் வலிகாமம் மண்ணில் இருந்து ஐந்து இலட்சம் தமிழர்களை இடம்பெயர வைத்த பொழுதும், அதன் பின்னர் வன்னி கிழக்கில் நான்கரை இலட்சம் தமிழர்களை முற்றுகைக்குள் வைத்து சிங்களம் நரபலி வேட்டையாடி இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப் பெரும் இனவழிப்பை அரங்கேற்றிய பொழுதும் உதவிக்கு வந்து கைகொடுக்கும் என்று தமிழர்கள் எதிர்பார்த்த ஐ.நா. மன்றம், அன்று கண்மூடி, வாய்புதைத்து மெளனம் சாதித்தது.

 

நியூயோர்க்கில் இருந்து கொழும்புக்குப் பறந்து சென்று போர்நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை ஐ.நா. மன்றத்தின் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்கள் செய்வார் என்று தமிழர்கள் காத்திருக்க, அவரோ அதனையிட்டு அலட்டிக் கொள்ளாது தென்கொரியாவில் ஏற்பாடாகியிருந்த தனது புதல்வனின் திருமண வைபவ ஒழுங்கமைப்பில் மூழ்கியிருந்தார். இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 1942ஆம் ஆண்டு சனவரி மாதம் 1ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் மன்றத்தை நிறுவுவதற்கான பிரகடனத்தை அமெரிக்கா தலைமையிலான இருபத்தாறு நேச நாடுகள் மேற்கொண்டன. அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் என்ற பெயரை அன்றைய அமெரிக்க அதிபர் பிராங்க்லின் ரூஸ்செவெல்ற் அவர்களே முன்மொழிந்தார்.

 

இவ்வாறு அமெரிக்கா என்ற உலக வல்லரசின் மூளையத்தில் உதித்த ஐக்கிய நாடுகள் என்ற எண்ணக்கரு, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 26.06.1945 அன்று அமெரிக்காவில் ஐம்பது நாடுகள் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கான பிரகடனத்தைத் தொடர்ந்து 24.10.1945 அன்று ஐக்கிய நாடுகள் மன்றம் என்ற அமைப்பு தோற்றம் பெறுவதில் முடிந்தது. மனித குலத்திற்கு பெரும் துயரை ஏற்படுத்தும் யுத்தத்தை இல்லாதொழிப்பதும், மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதும், நீதியான உலக ஒழுங்கைப் பேணுவதும், சமூக மாற்றத்தையும், மேம்பாடான வாழ்நிலையை ஊக்குவிப்பதும் ஐ.நா. மன்றத்தின் அடிப்படை இலட்சியங்களாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தாலும், இற்றைவரை இவற்றையயல்லாம் ஐ.நா. மன்றம் காற்றில் பறக்கவிட்டே வந்துள்ளது.

 

ஐ.நா. மன்றம் என்பது ஒரு பொதுச் சந்தை போன்றது. அங்கு யாரும் செல்லலாம். எவரும் எதனையும் பேசலாம். ஆனால் அரசுகள் என்ற வியாபாரிகள் மட்டுமே அங்கு அதிகாரம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். அதிலும் சக்தி வாய்ந்த அரசுகள் என்ற தொழிலதிபர்களே சந்தையின் அன்றாட நடப்புக்கள் பற்றிய இறுதித் தீர்மானங்களை எடுப்பார்கள். மக்களின் நலனுக்காக ஐ.நா. மன்றம் என்ற பொதுச் சந்தை உருவாக்கப்பட்டதாகக் கூறிக் கொள்ளப்பட்டாலும், அங்கு மக்களின் நிலை என்பது வெள்ளாட்டு மந்தைகளின் பரிதாப நிலைக்கு ஒப்பான ஒன்று. வெள்ளாடுகளுக்காக பசுத்தோல் அணிந்த ஓநாய்கள் அழுவதுண்டு. ஓநாய்களின் நீலிக் கண்ணீரைக் கண்டு ஆடுகளும் உருகிப் போவதுண்டு. இறுதியில் ஓநாய்களின் பசுத்தோல் கழன்று விழும் பொழுதுதான் வெள்ளாடுகள் சுதாகரித்துக் கொள்ளும். அதற்குள் காலம் கடந்து விடும். இவ்வாறு பசுத்தோல் அணிந்த ஓநாய்கள் அழுவதும், அவற்றைக் கண்டு வெள்ளாடுகள் உருகுவதும் காலம் காலமாக நடைபெறும் நிகழ்வுகள்.

 

இதுதான் இன்று தமிழ் மக்களுக்கும் நடக்கின்றது. காலம் காலமாகத் தமிழ் மக்களின் காலைவாரிய ஐ.நா. மன்றம், மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களின் காலை வாருவதற்கு தயாராகி வருவதாகப் பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சனல்‡4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் செயலகம் மேற்கொண்ட விசாரணைகளின் பெறுபேறாக சிங்கள ஆளும் வர்க்கம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படும் அல்லது சிங்கள ஆளும் வர்க்கத்தைக் கூண்டில் ஏற்றுவதற்காக சிறப்பு நடுவர் மன்றம் ஒன்றை ஐ.நா. மன்றம் உருவாக்கும் என்று தமிழ் மக்கள் இலவு காத்த கிளிகளாகக் காத்திருக்க, உள்ளகப் பொறிமுறையை சிங்கள ஆளும் வர்க்கம் நிறுவுவதற்கு ஐ.நா. மன்றம் உதவிபுரியத் திட்டமிட்டுள்ளது என்ற தகவலை தற்பொழுது சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது.

 

‘உள்நாட்டு விசாரணை முடிந்து விட்டது. இனி நடக்கப் போவது விசாரணையின் பெறுபேறுகளை உள்நாட்டில் அமுல்படுத்தும் வேலைதான். அதற்காகத்தான் உள்ளகப் பொறிமுறை நிறுவப்பட இருக்கின்றது’ என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டத்து இளவரசர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சனல்‡4 தொலைக்காட்சியின் செய்தி அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு விடயம் பட்டவர்த்தனமாகின்றது. உள்ளகப் பொறிமுறையை உருவாக்குவதற்கு சிங்கள அரசுடன் இணைந்து ஐ.நா. மன்றம் மேற்கொண்ட இரகசிய ஏற்பாடுகளில் சுமந்திரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அவருக்குப் பரிவட்டம் கட்டுவோரும் காத்திரமான பங்கை வகித்திருந்தார்கள் என்பதுதான் அது.சிங்கள ஆளும் வர்க்கத்துடனும், அதன் தமிழ் அடிவருடிகளுடனும் இணைந்து ஐ.நா. மன்றம் வகுத்திருக்கும் இரகசிய திட்டத்தில் இன்னுமொரு சூட்சுமமும் அடங்கியிருக்கின்றது.

 

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் குள்ளநரி என்று வர்ணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவினதும், உலகத் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்துவதில் மும்முரமாக செயற்படும் மங்கள சமரவீரவினதும் பங்குதான் அது. ஐ.நா. மன்றத்தின் திட்டம் உள்ளகப் பொறிமுறையை மேற்பார்வை செய்யும் பணியை சிங்கள தேசத்தின் பிரதம மந்திரிக்கும், அதன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் வழங்குகின்றது. இதில் இரண்டு விடயங்கள் மறைந்திருக்கின்றன. முதலாவது, இத்திட்டம் சிங்கள தேசத்தின் பிரதம மந்திரியாக ரணில் விக்கிரமசிங்கவும், வெளியுறவுத்துறை அமைச்சராக மங்கள சமரவீரவும் பதவி வகிக்கும் கடந்த ஏழு மாத காலப் பகுதிக்குள் வகுக்கப்பட்டுள்ளது என்பதாகும். இரண்டாவது, வரும் 17ஆம் நாளன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிபெறுவார் என்ற ஐ.நா. மன்றம் நம்புகின்றது என்பதாகும்.

 

இதிலிருந்து இன்னொரு விடயத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். சக்தி வாய்ந்த அரசுகளின் பொம்மையாகச் செயற்படும் அமைப்பு என்ற வகையில், ஐ.நா. மன்றம் வகுத்திருக்கும் இத்திட்டத்தின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க சிம்மாசனம் ஏறுவதை விரும்பும் அமெரிக்கா தலைமையிலான சில சக்திவாய்ந்த நாடுகள் இருக்கின்றன என்பதே அது. அதாவது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியீட்ட வைக்கும் நோக்கத்துடன் ஐ.நா. மன்றத்தின் இரகசியத் திட்டம் திட்டமிட்டுக் கசிய விடப்பட்டிருக்கலாம். ரணில் ஆட்சிக்கு வந்தால், படை வீரர்களையும், யுத்த காலத்தின் ஆயுதப் படைகளின் முதன்மை தளகர்த்தாவாக விளங்கிய மகிந்த ராஜபக்சவையும் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று மின்சாரக் கதிரையில் அமர்த்திவிடுவார் என்பதுதான் இன்று மகிந்த அணி மேற்கொள்ளும் பரப்புரைகளில் முதன்மையானதாகும். இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைத்து மகிந்தரின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தி, அதன் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதற்கே இத் திட்டத்தை தேர்தலுக்கு முன்னர் ஐ.நா. மன்றம் கசியவிட்டிருக்கலாம் என நாம் கருத முடியும்.

 

இது இவ்விதம் இருக்க, இதுவிடயமாக சணல்‡4 தொலைக்காட்சிக்கு அறிக்கை ஒன்றை ஐ.நா. மன்றம் அனுப்பியிருக்கின்றது. நான்காம் கட்ட ஈழப்போரில் நிகழ்ந்த அனைத்துலக சட்ட மீறல்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் செயலகம் மேற்கொண்டிருக்கும் விசாரணைகளின் பெறுபேறுகளையும், பரிந்துரைகளையும் உள்ளகப் பொறிமுறை ஊடாகவா? அல்லது பன்னாட்டுப் பொறிமுறை வாயிலாகவா? அல்லது இவை இரண்டும் கலந்த பொறிமுறைகள் ஊடாகவா? அமுல்படுத்துவது என்பது பற்றிய முடிவுகள் இதுவரை எட்டப்படவில்லை என்பதுதான் அது. இதிலும் சில சூட்சுமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

 

அதாவது, வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே உள்ளகப் பொறிமுறையை நிறுவுவதா? அல்லது பன்னாட்டுப் பொறிமுறைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதா? அல்லது இரண்டும் கலந்த பொறிமுறைகளை உருவாக்குவதா? என்பது பற்றிய முடிவை ஐ.நா. மன்றம் எடுக்கப் போகின்றது என்பதாகும். அதாவது ரணில் வெற்றி பெற்றால் உள்ளகப் பொறிமுறை, மகிந்தர் வெற்றி பெற்றால் பன்னாட்டுப் பொறிமுறை, இப்பொழுது இருப்பது போன்று சிறுபான்மை அரசாங்கம் உருவாகினால் இரண்டும் கலந்த பொறிமுறை என மூன்று விதமான தெரிவுகளுக்கு ஐ.நா. மன்றம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது.

 

அப்படிப் பார்த்தால் வரும் தேர்தலில் மகிந்தர் வெற்றிபெற்றால் மட்டுமே மீண்டும் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஐ.நா. மன்றம் மிளிரத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். அதே போன்று சிறுபான்மை அரசாங்கம் உருவாகினாலும் நீண்ட கால நோக்கில் (உடனடியாக அல்ல) தமிழ் மக்களுக்கு நம்பிக்கையும், ஓரளவு நன்மையும் அளிக்கக்கூடிய சில நகர்வுகளை ஐ.நா. மன்றம் செய்யக்கூடும் என்று நாம் கருத முடியும். இவை இரண்டும் நடைபெறாது தேர்தல் ரணில் வெற்றி பெற்று உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் விரும்பும் உறுதியான அரசாங்கம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களை ஐ.நா. மன்றம் கைவிட்டு விடும். அப்பொழுது நுளம்பிற்கு மருந்தடித்து மலேரியா நோய் பரவுவதைத் தடுக்கும் வேலையைத் தவிர வேறு எதனையும் செய்ய முடியாத கையாலாகாத அமைப்பு என்ற நிலையில் வைத்து ஐ.நா. மன்றத்தைப் பார்ப்பதைத் தவிர தமிழ் மக்களால் வேறு எதனைத்தான் செய்ய முடியும்?

- கலாநிதி சேரமான்

நன்றி: ஈழமுரசு