பிஜி நாட்டிலிருந்து பிரிந்து சென்று தனியாக கிறிஸ்தவ நாடு

திங்கள் ஓகஸ்ட் 17, 2015

பிஜி நாட்டிலிருந்து பிரிந்து சென்று தனியாக கிறிஸ்தவ நாடு ஒன்றை அமைக்க சதி செய்தனர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் 50க்கும் அதிகமானவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


அங்குள்ள முக்கியத் தீவான விடீ லேவூவில், பிஜி நாட்டுப் பிரஜையும், பிரிட்டிஷ் இராணுவத்தில் முன்னர் அதிகாரியாக இருந்த ஒருவரே இரகசியமாக, இராணுவ பாணியில் பயிற்சிகளை அளித்து வந்தார் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.


பிஜி பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது, ஏராளமான பிஜியர்கள் இராணுவத்தில் பணியாற்றியிருந்தனர்
அந்த நாட்டில் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் பூர்வகுடி பிஜியர்களுக்கும், இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக அங்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்களான இந்தோ- பிஜியர்களும் மக்கள் தொகையை பகிர்ந்து கொள்கின்றனர்.


இதனிடையே நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த முயலும் எந்த முன்னெடுப்பும் ஒடுக்கப்படும் என பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.
தீவு நாடான பிஜியை இணைத்து ஒற்றுமையுடன் இருக்க தான் உறுதிபூண்டுள்ளதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடும்போது அவர் கூறியிருந்தார்.