புல்லாங்குழல் கலைஞர் ஏ.வி. பிரகாஷ் காலமானார்

சனி மார்ச் 19, 2016

பிரபல புல்லாங்குழல் இசைமேதை என்.ரமணியின் சீடரும் புல்லாங்குழல் கலைஞருமான ஏ.வி. பிரகாஷ்(74) கச்சேரியின்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கர்நாடக மாநிலம், ஹஸ்ஸன் மாவட்டத்தில் உள்ள அன்கேரே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், இளம்வயதில் பிரபல புல்லாங்குழல் இசைமேதை என்.ரமணியிடம் முறையாக புல்லாங்குழல் இசைக்க பயின்றதுடன், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு புல்லாங்குழல் இசைக்க கற்றுத் தந்துள்ளார். 

வயதான காலத்திலும் தொடர்ந்து இசைப் பயிற்சியையும், இசை நிகழ்ச்சிகளையும் இடைவிடாது செய்துவந்த பிரகாஷ், கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் நேற்று வயலின் இசைக்கலைஞர் நரசிம்ம மூர்த்தியுடன் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உயிர் பிரியும் தருணத்திலும், நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துமாறு சகக்கலைஞர் நரசிம்ம மூர்த்தியிடம் கேட்டுக்கொண்டார். ஏ.வி.பிரகாஷின் இசைச்சேவையை கவுரவிக்கும் வகையில் கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.