பேரவை வசந்தராசா தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கம்

வெள்ளி சனவரி 08, 2016

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக செயற்பட்டுவரும் த.வசந்தராசாவை  தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அங்கத்துவ விண்ணப்பம் தமிழரசுக்கட்சியின் தொகுதிக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆயுட்கால அங்கத்துவ பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த பொதுதேர்தல் நேரங்களில் சரியாக செயற்படவில்லை என்பதுடன தற்போதைய நடவடிக்கைகள் சரியாக இல்லை என்ற காரணத்தை கூறி அங்கத்துவ விண்ணப்பத்தை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பினில் கருத்து வெளியிட்ட வசந்தராசா நான் செய்த தவறு என்ன என்று எனக்கு தெரியவில்லை நான் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டேனா? அல்லது பேரினவாதக் கட்சிகளுடன் உறவு வைத்துள்ளேனா? அல்லது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளேனா? என்பதை தமிழரசுக்கட்சியின் தலைமை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும் நான் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துகொண்டதுதான் என்னை நீக்குவதற்கு காரணமாகவிருந்தால் தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பேராசிரியர் சிற்றம்பலம் மற்றும் சி.விக்கினேஸ்வரன் ஐயா உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இனிமேல் தமிழரசுக் கட்சி சேர்க்க கூடாது .என தெரிவித்தார்.

இதனை தமிழரசுக்கட்சி உடனடியாக கைவிடவேண்டும் தமிழ் மக்களது ஜனாநாயக செயற்பாடுகளை தமிழ் மக்களுக்காக பணியாற்ற வருபவர்களை நசுக்குவதற்கு முற்படுவதையும் அல்லது தமிழ் மக்களுக்கு பணியாற்ற எம்மைத்தவிர வேறுயாரும் வரக்கூடாது என்ற மனப்பாங்கினையும் மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கைவிடவேண்டும்.

தமிழ் மக்களை வேறு யாரும் பிரிக்கத்தேவையில்லை காசியானந்தன் காலத்தில் கட்சிக்காக பணியாற்றிய என்னையே தமிழரசுக்கட்சி ஒதுக்கியுள்ளது என்றால் என்னைப்போன்று இன்னும் பலரை தொடர்ச்சியாக நீக்கி தமிழ் மக்களை பிரிப்பதற்கான வேலையை இவர்களே செய்யத்தொடங்கியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.