பொங்கல் "உறுதி'!

வெள்ளி சனவரி 15, 2016

தமிழர், பன்னெடுங்காலமாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். சிற்றூர்ப் புறங்களில் சாமிக்கு வேண்டிக் கொண்டு பொங்கல் இடுவதும், படைப்பதும்  இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றன. இத்தகு பொங்கல் நடுநடுவே எளிய மக்களால் கொண்டாடப்படினும், தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் ஏனைய பொங்கல்களைவிட மிகச் சிறப்பானது. தொடர்ந்து மூன்று நாளும் கொண்டாடப் பெறுவதால் ‘பெரும் பொங்கல்’ என்றே அழைக்கப் பெறுகிறது.

‘பெரும் பொங்கல்` கொண்டாடப் பெறும் தை மாத முதல் நாளை ஆண்டுப் பிறப்பு என்று சொல்வதும் நாட்டுப்புற வழக்கம். எனவேதான்  மறைமலையடிகள் முதலான தமிழ்ச் சான்றோர் தமிழர் ஆண்டுப் பிறப்பாக விளங்கும் தை முதல் நாளைத் திருவள்ளுவர் ஆண்டு பிறப்பாகப் பலருடன் கூடி முடிவு செய்தனர். அதன்படி திருவள்ளுவர் ஆண்டு-2037 இந்தத் தை முதல் நாளன்று பிறக்கிறது. 

ஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும் போது கொள்கைநலம் வாய்ந்த சான்றோர்கள் வரும் ஆண்டுக்கு உரியனவும், வரும் காலத்திற்கு உரியனவும் ஆன திட்டங்களைத் தீட்டுவதும் அவற்றைச் செயல்படுத்தும் முகமாகத் தொடர்ந்து செயல்படுவதும் வழக்கம். 

தமிழரைப் பொறுத்து நல்லவை சிலவற்றையேனும் நிறைவேற்றுவது என்று உறுதி மேற்கொள்வோம். அவற்றைக் குறிப்பதற்கு முன்பு, உலகளாவிய மக்களின் நிலையைப் பறவைப் பார்வையில் பார்வை இடுவோம். சமூக உளவியல் அறிஞர்கள் உலகில் வெற்றி பெற்ற இனங்களின் குண இயல்புகளைக் கண்டறிந்துள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பார்த்துத் தமிழரோடு ஒப்பு நோக்குவோம். 

அமெரிக்கர் கடின உழைப்பு, வணிக நோக்கு, தனக்குத்தானே உதவி, சுதந்திரம், சமநீதி ஆகியவற்றின் மேல் பெரும் அக்கறை உடையவர். எதனையும் பயன்நோக்கியே பார்ப்பவர் மதிப்பிடுபவர். பயன் இல்லாத எதுவும், எவரும் பயன் இல்லை என்பது அவர்களுடைய கருத்து. 

பெல்ஜிய மக்கள் இரு பெரும் பிரிவாக அமைந்துள்ளனர். பிளம்மிஷ் (Flemish) என்ற மொழி பேசுவோர் என்றும், பிரெஞ்சு (French மொழி பேசுவோர் என்றும் பிரிந்துள்ளனர். முதலாவது தம்மை பிளம்மிஷ் மொழி பேசுவோர் என்றும், இரண்டாவது ஐரோப்பிய இனத்தினர் என்றும், மூன்றாவது பெல்ஜிய  நாட்டினர் என்றும் வரிசைப் படுத்தி வாழ்பவர். பிரெஞ்சு பேசும் மக்களுக்கு அவர்கள் பொதுவாக முதன்மை கொடுப்பதில்லை. இரு மொழி   இனத்தாருமே புதுக்கருத்துகளை ஏற்பதில் தயக்கம் காட்டுபவர். 

பிரிட்டனைச் சேர்ந்த இங்கிலீஷ் மக்கள் பழமை மீது பிடிவாதப் போக்கினர். அவரவருடைய செயல் திறமைக்கு முதன்மை கொடுப்பவர். அரச குடும்பம், தோட்டம் போடுதல், கால்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றில் மிகுந்த பற்றுடையவர். அவர்கள் சோம்பேறிகளாக இருக்கவே மாட்டார்கள். சோம்பேறிகளை மதிக்கவும் மாட்டார்கள். அமெரிக்கர்களைப் போல எதிலும் எவரிடத்தும் பயன் நோக்கியே பழகுபவர். 

டேனிஷ் (Danish) மக்கள் மிக நேர்மையானவர்கள். காலம் தவறாமையை உறுதியாகக் கடைபிடிப்பவர்கள். எதையும் வெளிப்படையாகப் பேசும் பழக்கத்தினர். அவர்கள் பண்பாட்டில் ஒளிவு மறைவு இல்லை. டச்சு மக்கள் கடுமையான உழைப்பாளிகள். எதையும் ஒளிக்காமலும், மறைக்காமலும் பேசும் பழக்கத்தினர் 
பிரெஞ்சுக்காரர்கள் உணவு மீதும், மது மீதும் காதல் கொண்டவர்கள். உழைத்து வேலை செய்வதைவிட, வாழ்வது முதன்மையானது என்று  கருதுகிறவர்கள்.  

விடுமுறை, விளையாட்டு, நாடகம் பார்த்தல், குடும்பத்தினரோடு கூடி இருத்தல் முதலானவற்றுக்கு முதன்மை கொடுப்பவர். புறம் பேசுதலை இழிந்த பழக்கம் என்று நம்புகிறவர்கள். தங்கள் மொழிமேல் மிகுந்த அன்புடையவர்கள். பிரெஞ்சு மொழி பிழையாகப் பேசப்படுவதைக் கேட்கவே பொறுக்காதவர்கள். நியாயப்படுத்த முடியாத மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

ஜெர்மன்காரர்கள், மேல் அதிகாரியை எதிர்த்துப் பேச மாட்டார்கள். மன உறுதி, பளிச்சென்று முடிவெடுப்பது, நிர்வகிப்பது ஆகியவற்றில் வல்லவர்கள். கோபம், துக்கம் முதலானவற்றிற்கு எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்கள். காலம் தவறாமை, போட்டியிட்டு வெல்வதில் ஆர்வம், தோல்விக்குக் கலங்காமை, உயரத் துடித்தல் முதலானவை அவர்களின் இயல்புக் குணங்கள். கடுமையாக வேலை செய்வது மிக முதன்மையானது என்று கருதுகிறவர்கள். தங்கள் மொழிமேலும் இனத்தின்மேலும் பெரும் பற்றுக் கொண்டவர்கள். வேலை செய்யும் இடங்களில் சிரித்து விளையாடுதல் முதலானவற்றைச் சற்றும் விரும்பாதவர்கள். 

கிரேக்கர்கள் எதையும் முகத்துக்கு முகம் நேரில் சொல்லிவிடும் பழக்கத்தினர். அயல்நாட்டாரை வரவேற்பார்கள். அவர்கள் கருத்தை ஏற்பார்கள். ஆனால் தங்கள் மேல் எவரும் ஆதிக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். மிகக் காலையில் அலுவலக வேலையைத் தொடங்கி மதியத்தில் வேலையை முடித்துக் கொள்ளும் பழக்கத்தினர். 

ஐரிஷ் மக்கள் மனித உறவுகளை, சுதந்திரத்தை விரும்புகிறவர்கள். அதிகாரப் படிநிலையையும், அதிகார ஆதிக்கத்தையும் விரும்பாதவர்கள், மிக மன உறுதி படைத்தவர்கள். 

இத்தாலியர்கள், புதியன கண்டுபிடிப்பதிலும், புதிது புதிதாகக் கற்பனை செய்வதிலும் கூர்த்த மதி கொண்டிருப்பதிலும், கற்பதிலும், விருப்பமுடையவர்கள். பொறுமைசாலிகள் என்றாலும், மற்றவர்களின் திமிரையும், முரட்டுத் தனத்தையும், காலம் தவறுதலையும் விரும்ப மாட்டார்கள். பேசுவதில் விருப்பமுடையவர்கள், வாழ்வதில் நாட்டம் உடையவர்கள். 

ஜப்பானியர்கள், தனி மனித நலத்தைவிட சமூக நலனே முதன்மையானது என்ற கருத்துடையவர்கள். கூட்டுணர்வு மிக்கவர்கள். கூடி முடிவு செய்வதிலும், பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதிலும், தான் சார்ந்த நிறுவனத்துடன் ஒன்றிப் பணிபுரிவதிலும், நிகரற்றவர்கள். மரியாதைக் குணம் உடையவர்கள். பல சமயம் தன் நலத்தைவிட குடும்ப நலத்தைவிடத் தான் பணிபுரியும் குழும (Company) நலமே பெரிது என்று போற்றுகிறவர்கள். 

ஸ்பானிஷ் மக்கள் கூட்டாக முடிவெடுப்பதைவிடத் தத்தம் சொந்த முடிவையே மேற்கொள்ளுவார்கள். எனவே குழு, கூட்டம் முதலானவற்றைத் தவிர்ப்பார்கள். ஒருவருடைய அறிவுக் கூர்மையைவிட அவரிடம் உள்ள பண்பையே முதலாவது மதிக்கிறவர்கள். ஒவ்வொருவருடைய சொத்து மதிப்பு, வைத்திருக்கும் வாகனம், அணிந்திருக்கும் ஆடை ஆகியவற்றுக்கு முதன்மை கொடுப்பவர்கள். 

(ஜோன் மோல் - ohn Mole எழுதிய, மைன்ட் யுவர் மேனர்ஸ் - Mind your manners, பிலிப் ஓல்டன் - -Philip Holden எழுதிய சூப்பர் சக்சஸ் - Super Success என்ற நூல்களைத் தழுவி எழுதப்பட்டவை). 

இப்பின்னணியில் தமிழருடைய சமூக உளவியலை மதிப்பிடுகிறபோது அவர்களிடம் மேலோங்கி உள்ள விருந்தோம்பல் பண்பு, ஆன்மிகப் பிடிவாதம், கடின உழைப்பு, எளிதாக நம்பும் குணம் முதலானவற்றைச் சிறந்தவையாகக் குறிப்பிடலாம். 

மறுதலையாகத் தமிழர்களை, 

(1) போதிய அளவு தொலைநோக்கற்றவர், (2) பயந்த சுபாவத்தினர், (3) தனிமானத்தினர், இனமானம் இல்லாதவர், (4) கூட்டூக்கம் குறைந்
தவர், (5) தாழ்வு மனப்பான்மையினர், (6) தலைமை வழிபாட்டினர், (7) தத்துவங்களைப் பின்பற்றாதவர், (8) சாதி வெறியினர், (9) திரை, கலை முதலானவற்றை அடியற்றி எளிதே உணர்ச்சிவசப்படுபவர் எனப் பட்டியல் இடலாம். இக்கணிப்பு பெரும்பான்மைத் தமிழரின் இயல்புகளை அடியற்றிக் கணிக்கப்பட்டதாகும். 

இப்பொங்கல் நாளில், தமிழர் தொடர்ந்து போற்ற வேண்டிய நல்ல இயல்புகளையும், தொடர்ந்து ஒழித்து அழிக்க வேண்டிய இயல்பு
களையும் நினைத்துப் பார்ப்பதும் உரிய செயல் திட்டங்களை வகுப்பதும் நடைமுறைப் படுத்துவதும் மிக மிகக் கட்டாயமாகும். பிற இனமக்
களோடு சேர்ந்து உயர, வேறு இன மக்களிடம் காணப்பெறும் நல்ல இயல்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்த நல்ல நாளில் முடிவு செய்வோமாக!

க.ப.அறவாணன்
முன்னாள் துணைவேந்தர், 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்
(ஆவணம்)