மது அருந்த காசு கேட்டு மிரட்டிய ஸ்ரீலங்கா பொலிஸ்

சனி சனவரி 09, 2016

தனியார் பேருந்துகளுக்கு இருக்கை ஓதுக்கீடு செய்யும் இளைஞர் ஒருவரை சாராயத்துக்கு காசு பேருந்து கேட்டு மிரட்டிய ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரி ஒருவர், பணம் கொடுக்க மறுத்ததால் அவரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் யாழ்.நகர் தனியார் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, தனியார் பேருந்து பணியாளர்கள் அங்கு திரளவே புலனாய்வுப் பிரிவென தன்னை அறிமுகப்படுத்திய பண்டார எனப்படும் குறித்த பொலிஸ் அதிகாரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் பேருந்து ஒன்றில் பயணம் செய்த அவர் கொடிகாமம் பகுதியில் வைத்து நேற்றிரவு கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவருடன் கூட வந்து தானும் புலனாய்வுத் துறைதான் என அடாவடி செய்த மற்றொருவரை அங்கிருந்தவர்கள் பிடித்து உடனடியாகவே யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாக்குதலுடன் தொடர்புடைய தப்பியோடி பிடிபட்ட பண்டார என்ற நபர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை பொலிஸ் தரப்புத் தகவல்கள் உறுதி செய்தன.மற்றையவர் பொலிஸ் இல்லை என அந்தத் தகவல்கள் கூறின. 

இதேவேளை, சாரயத்துக்கு காசு கேட்டு அடாவடி செய்து கைதான பண்டார என்ற பொலிஸ் அதிகாரி இதேபோன்ற குற்றங்களுக்காக முன்னரும் இரு தடவைகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் பெற்று அவர் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணம் வந்து இவ்வாறான அடாவடியில் இவர் ஈடுபட்டள்ளார்.

இதே நபர் முன்னர் யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். அப்போது இதேபோன்ற ஒரு சம்பவத்தில் தனியார் பேருந்துகளுக்கு இட ஒதுக்கீடு செய்யும் ஒருவரை சாராயத்துக்கு காசு கேட்டு மிரட்டியதுடன்,

பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று அங்குவைத்து கடுமையாகத் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.

நான் பொலிஸ் புலனாய்வு அதிகாரி. சாரயத்துக்கு காசு தராவிட்டால் உன்னை 4 மாடிவரை கொண்டு செல்வேன் என அவர் அப்போது தன்னை அச்சுறத்தியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் இவர்கள் நீதி மன்றங்களில் முற்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தாக்குதல் குறித்து சாட்சியங்களை வழங்க தாம் தயாராக இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்த பல தனியார் பேருந்து பணியாளர்கள் யாழ்.பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.