மயானத்தையே விட்டுவைக்காத கொள்ளையர்! - கந்தரதன்

ஞாயிறு சனவரி 24, 2016

இன்று தமிழர் தாயகத்தில் உள்ள பிரச்சினைகளில் பெரும் பிரச்சினையாக உள்ள பிரச்சினை மணல்கொள்ளையே என்றால் மிகையாகாது என்று கூறும் அளவிற்கு  தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் மணல் கொள்ளைகள் தாராளமாக   இடம்பெற்று வருகின்றது. இதற்கு சிறிலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் அதன் கைக்கூலிகள் துணைநிற்கின்றனர்.

இவர்கள் இதற்கு துணை நிற்பது என்பது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பறிப்பதற்கு சமன். அதாவது, இவர்களுக்கு பணம் வரும் அதேவேளை  தமிழர் தாயகப் பகுதிகளை சுடுகாடாய் மாற்றும் நிலைமைக்கு தள்ளுவது, இல்லை இல்லை தமிழ் மக்களின் சுடுகாடுகளையே மணல்கொள்ளைக்கு விட்டுவைக்காத நிலையே அங்கு உள்ளது.

இதனை நிருபிப்பதாக கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  கிளிநொச்சியில் வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் அருகில் உள்ள பொது மயானப்பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்றுவருவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர் சிவஞானம் சிறிதரனிடம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தார் அங்கு  மயானப்பகுதி முழுவதும் மணல் அகழப்பட்டுக்கொண்டுடிருந்த அதிர்ச்சிச் சம்பவம் அவரை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்களை வெளியே எடுத்துவைத்துவிட்டுக்கூட மணல் அகழ்வு மிகமோசமான முறையில்  நடைபெற்றுக்கொண்டு இருந்ததுடன் , சடலங்கள் எரியூட்டப்படும் இடங்கள் கூட மண் கொள்ளையர்களினால் அள்ளப்பட்டுள்ளமை பொதுமக்களை பெரும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.

பாரிய கிடங்குகளாக தோண்டப்பட்டுள்ள இப்பகுதிக்குள் பன்னங்கண்டி ஆறு உடைத்து உள்ளநுழைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மிகமோசமான சூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்  அதிர்ச்சிகரமான இந்த நிலைமை குறித்து சம்பவ இடத்தில் இருந்து கிளிநொச்சி காவல்துறை பொறுப்பதிகாரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அறிவித்தபோதும் அவர்கள் ஒன்றரை மணிநேரமாக சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை.

இதேவேளை, சம நேரத்தில் வீதியால் வந்த வீதிச் சுற்றுக்காவல் காவல்துறையினரிடம் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்திய போதும் கவனத்தில் எடுக்காமால் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உழவியந்திரத்தை எடுத்துச் செல்வதற்கு கால அவகாசத்தை வழங்கினர்.

இந்த சம்பவத்தை அறிந்து அப்பகுதியில் கூடிய மக்கள் இம்மண் கொள்ளை தினசரி நிகழ்வதாகவும் இது காவல்துறையினருக்கும் தெரியும் என்றும் இதன்பின்னனியில் பலரது தொடர்புகளும் பணப்பரிமாற்றங்களும் இருப்பதாகவும் தெரிவித்த அதேவேளை,  25 ஆயிரம் ருபாவை சிறிலங்கா காவல்துறை அதிகாரிக்கு கொடுத்தால் , மணல் அகழ தடைவிதித்துள்ள பகுதியிலும் மணல் அகழ்விற்கு அனுமதி கொடுத்துவிடுவார் எனவும் அப்பகுதிப் பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், சிறிலங்கா இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால், பொதுக்காணிகளில் சட்டவிரோதமாக மண் அகழப்படுவதாக பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக காவற்துறையினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கியதாகவும், அவர்களின் கண்காணிப்பு முல்லை‡பரந்தன் பிரதான வீதியில் மட்டுமே இருக்கின்றது, ஆனால் மண் அகழ்வுக்காரர் புதிதாக பாதைகள் அமைத்து இராணுவத்தினர் பயன்படுத்தும் பிரதான வழியூடாக மண்ணைக் கடத்திச் செல்வதாகவும் இதைக்கண்டும் காணாதவாறு படையினர் இருப்பதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரதேச மக்களின் தகவலை அடுத்து பிரதேசவாசிகளுடன்  ஊடகவியலாளர் ஒருவர் குறித்த மண் அகழ்வு இடத்திற்கு சென்ற போது மண் அகழ்ந்தவர்கள் சவல், மண்வெட்டி ஆயுதங்களை கைவிட்டு தலைமறைவாகிவிட்டார்கள். எனினும் சிலமணி நேரம் கழித்து தொடர்ந்து அகழ்ந்த மண்னை அங்கிருந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர். இதைத் தடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஊர் தலைவர் திரு.இ.நாகராசா குறிப்பிட்டார். ஆயினும் அப்பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  மட்டக்களப்பில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தன்னை பாரவூர்தியால் அடித்துக்கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். அரசியல்வாதிகளின் செல்வாக்குகளினால் பாரவூர்திகள் இல்லாதவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மண்அகழ்வு அனுமதிப்பதிரங்களை வைத்திருப்பதாகவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் சட்டவிரேத மண்அழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதைக் கண்டித்து அண்மையில் பாரவூர்தி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சமுகமளித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் பாரஊர்திகள் செல்வதாக குறிப்பிட்ட அவர், கடந்தவருடம் பாரஊர்தியில் விபத்துக்குள்ளாகி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரவூர்தி உரிமையாளர்களுக்கு மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படாமல் வேறு மாட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தாம் அண்மையில் வினவியதற்கு தன்னை பாரவூர்தியால் அடித்துக்கொலை செய்யவுள்ளதாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் எச்சரித்ததாகவும் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு ‡ சம்மாந்துறை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்ற ஐவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் அனுமதிப்பத்திரம் இன்றியே இந்த நடவடிக்கையில் இதுவரை ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் மாட்டுவண்டியில் ஆற்று மண் ஏற்றிச்சென்ற சந்தர்ப்பத்தில் சொறிக்கல்முனை ஆற்றுப் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளபோதும்,  இவர்களின் கைது பொதுமக்களை ஏமாற்றும் நாடகமே எனவும்  காவல்துறையினருக்கு பணம் கொடுத்து இவர்கள் தப்பிவிடுவார்கள் என, பொதுமக்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமிழீழத் தாயகத்தை சிதைப்பதில் இவர்கள் அடையப்போகும் நன்மை என்ன? மண்மீட்புப்போரில்  மண்ணுக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் இவர்கள் கூறப்போகும்  பதில் என்ன? விடை உரியவர்களின் மனங்களில் தான்.  சிந்தியுங்கள்! சிந்தித்து செயற்படுங்கள்!!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு