மாவீரர், போராளி குடும்பங்கள் நயவஞ்சகத்திட்டத்தை நிறைவேற்றும் உயர் அதிகாரிகள்

செவ்வாய் டிசம்பர் 01, 2015

புலிகள் மீது வெறுப்படைவதற்காகவே மாவீரர், போராளி குடும்பங்களுக்கு சிங்கள அரசு உதவித் திட்டங்களை வழங்காது பாராமுகம், இதற்கு தமிழ் அதிகாரிகளும் துணை நின்றுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்கள் வெறுப்பதற்காக இனவாதச் சிங்கள் அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வந்துள்ளார்கள். இதில் ஒன்றுதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களது குடும்பங்களையும் முன்னாள் போராளிகளது குடும்பங்களையும் வறுமையில் வாடவைத்து உணவுக்காகவும் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் ஏங்க வைத்து உணவையும் அடிப்படைத் தேவைகளையும் பற்றிச் சிந்திப்பதைத் தவிர வேறு சிந்தனைகளை இல்லாமல் செய்வதும் இச்சந்தர்ப்பத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி கைக்கூலிகளை வைத்து கள்ளச் சாரயம் கசிப்புக் காச்சுதல், விற்பனை செய்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்துதல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுமாறு தூண்டிவிடுதல், தமிழர் கலாச்சாரத்தைச் சீரழித்தல் போன்றவற்றை தமிழ் மக்கள் வாழ்வியலில் திணித்துள்ளது இனவாதச் சிங்கள அரசு. இதற்குள் மாட்டுப்படாதவர்கள் வேறு பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டபடியேதான் வாழ்நாளைக் கடத்தி வருகின்றார்கள்.

உணவுக்காகவும் நிரந்தர வீட்டுத் திட்டத்திற்காகவும் ஏங்கும் மக்கள் இவற்றைத் தவிர விடுதலைப் போராட்டத்தைப் பற்றியோ தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியோ சிந்திக்கமாட்டார்கள் என்பதும் கஸ்ரப்பட்டுக் கலங்கி நிற்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால்தான் தாம் இந்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக நினைத்து விடுதலைப் புலிகளை வெறுக்க வேண்டும் என்பதற்காகவுமே சிங்கள இனவாத அரசின் திட்டங்களின்படி மாவீரர் போராளி குடும்பங்களுக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு வெளிநாட்டு அரசுகளால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டமோ வாழ்வாதார உதவித்திட்டங்களோ எதுவுமே இதுவரை வழங்கப்படவில்லை.

இதற்கு இனவாதச் சிங்கள அரசினால் ஒழுங்கமைக்கப்பட்ட சில அரச உயரதிகாரிகள் ஆதரவு நல்கி துணைநின்று செயற்படுத்தி வருகின்றார்கள். வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வசிக்கும் மாவீரர், முன்னாள் போராளி குடும்பங்கள் அரசினது நயவஞ்சகத் திட்டத்தின்படி சில அரச அதிகாரிகளால் திட்டமிட்ட வகையில் பழிவாங்கப்பட்டு வருகின்றார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காணப்படும் பரந்தன் சிவபுரம் மாவீரர் கிராமத்தை குறிப்பிடலாம். சிவபுரம் மாவீரர் கிராமத்தில் 325 இற்கும் மேற்பட்ட மாவீரர், போராளி குடும்பங்கள் சிங்கள இனவெறி அரசினால் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்ட வகையில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் தற்காலிக தகரக்கொட்டகைகளில் கடந்த 6 வருடகாலமாக அவல வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார்கள்.

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களைச் சிங்களப் படை கைதுசெய்து முள்வேலி முகாம்களிலும் தடுப்பு சித்திரவதை முகாம்களிலும் அடைத்து வைத்திருந்தார்கள். இதில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் சர்வதேசத்தின் அழுத்தங்களால் கடந்த 2010 இறுதிக் காலப் பகுதி முதல் மீள்குடியேற்றப்பட்டார்கள். தடுப்பு புனர்வாழ்வு முகாமிலுள்ள முன்னாள் போராளிகள் கட்டம் கட்டமாக சிலர் விடுவிக்கப்பட்ட போதும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் பலர் இன்னமும் விடுவிக்கப்படாமலும் அவர்கள் எங்கே உள்ளார்கள் என உறவினர்களுக்குத் தெரியாத நிலையில் காணாமல் போனோர் என்ற அடைமொழியுடன் காணப்படுகின்றார்கள்.

மாவீரர், போராளி குடும்பங்களே தற்போதும் கடந்த 6 வருடங்களாக வெறுமனே 6 மாதங்கள் தற்காலிகமாகக் குடியிருக்கவென தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் அவல வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார்கள். மாவீரர் போராளி குடும்பங்கள் இப்படியாகக் கஸ்ரப்பட்டால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளால்தான் தாம் இந்த நிலைக்கு வந்ததாக நினைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தக் குடும்பங்கள் வெறுப்பார்களாம். இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட சிவபுரம் மாவீரர் கிராமத்தை இல்லாமல் செய்யவேண்டும் என அரச உயரதிகாரி பல தடவைகள் முயற்சித்தார்கள் என்பதும் அது முடியாமல் போன நிலையில் சிவபுரம் கிராமத்திற்கான கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் வழங்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டு இனவாதச் சிங்கள அரசின் பழிவாங்கல்கள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன. சிவபுரம் மாவீரர் கிராமம் இப்படியாக சிங்கள அரசினால் திட்டமிடப்பட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு அங்குள்ள குடும்பங்கள் வஞ்சிக்கப்படுவது வெளியே தெரியாதபடி மூடிமறைக்கப்பட்டே வந்துள்ளது.

இக்கிராமம் பற்றி வெளியே தெரிவதில்லை. கடந்த மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் சாவு வீட்டுக்குச் சென்றபோதுதான் இக்கிராமத்தின் நிலை பற்றி பலருக்கும் தெரியவந்தது. சிவபுரம் என்னும் மாவீரர் கிராமத்தின் அவல நிலை பற்றி சிங்கள இனவாத அரசின் நயவஞ்சகத்திட்டத்தை நிறைவேற்றும் உயர் அதிகாரிகள் சிலரால்தான் இக்கிராமத்து மக்களின் நிலை இப்படியாக இருக்கக் காரணம் என்பது புலனாகின்றது. கண்டாவளைப் பிரதேச செயலாளர் தான் இருக்கும் வரை இப்படியான மாவீரர் கிராமங்களுக்கு எவ்வித கிராமிய அபிவிருத்தித் திட்டங்களையும் வழங்கப்போவதில்லை என உறுதியாகவுள்ளதாகக் கூறுகின்றாராம்.

மாவீரர் போராளி குடும்பங்களைக் கஸ்ரப்படுத்தி அவலத்தில் வருத்தியபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலை உணர்வையும் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தையும் எந்த இனவாதச் சிங்கள அரசாலோ அல்லது அவர்களுக்கு துணை நின்று அவர்களின் நயவஞ்சகத் திட்டங்களைச் செயற்படுத்தும் துரோகத்தனங்கள் நிறைந்த மனிதாபிமானமற்ற துரோகிகளாலோ உணர்வுகொண்ட தமிழர் மனங்களிலிருந்து அழித்துவிட முடியாது.

மாவீரர் போராளி குடும்பங்களுக்கு சிங்கள அரசும் அதனது கைக்கூலிகளும் துன்பத்தைக் கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுக்க வைக்கவோ விடுதலைப் போராட்டத்தின் மீது வெறுப்படையச் செய்யலாம் என்றோ கனவு காணவேண்டாம். இனவாதச் சிங்கள அரசினது நயவஞ்சகத் திட்டங்களால் துன்பப்பட்டு அவலப்படும் மக்கள்தான் தற்போதும் அதிகமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிக்கின்றார்கள், விடுதலைப் போராட்டத்தின் மீது பற்றுறுதி கொண்டுள்ளார்கள், தமக்கான விடுதலையை வேண்டி நிற்கிறார்கள் என்பதை தமிழினத்தின் விடுதலை உணர்வைச் சிதைக்கத் துணைபோகும் துரோகிகள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

- தமிழன்பன்