மெளனத்தைக் கலைத்து தமிழ் மண்ணைக் காப்பாற்றுங்கள்

புதன் சனவரி 20, 2016

 விடுதலைப் போராட்டத்தின் தோல்வி தந்த மனப் பாதிப்புக்கள் பலரையும் மெளனிகளாக்கி விட்டது என்பதை உணர முடிகின்றது. ஒரு பெரும் இலட்சியக் கனவோடு பல்லாயிரக் கணக்கான உறவுகளை ஆகுதியாக்கிய ஒரு இனத்தின் மெளனம் சாதாரணமானதல்ல. அந்த மெளனம் பலவற்றை பேசுகின்றன.

இருந்தும் இனப்பற்று இல்லாத பதவி ஆசைபிடித்த - ஊழல் மோசடிகளை கூசாமல் செய்கின்றவர்கள் தமிழ் மக்களின் மெளனத்தையும் தமக்குச் சாதகமாக்கி கொள்கின்றனர் என்ற உண்மை மிகப்பெரும் வேதனை தருவதாகும்.

இதில் வடக்கு மாகாண சபையிலுள்ள நான்கு ஐந்து உறுப்பினர்கள் நடந்து கொள்கின்ற முறைமைகள் தமிழ் மக்களின் இதயங்களைப் பிழிந்து கொள்கின்றன.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு கடுமையான தொந்தரவுகளை, உபாதைகளைக் கொடுக்கின்றனர் என்ற தகவல்கள் சாதாரணமானவையல்ல.

தமிழ் மக்களின் உரிமைக்காக, உண்மையை பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்த உறுப்பினர்கள் மன உளைச்சலைக் கொடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதற்குள் மிக மோசமான, தமிழ் மக்களுக்கு எதிரான நோக்கங்கள் உள்ளன என்றவாறு வெளிவரும் தகவல்களை எவரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட முடியாது.

இதற்கு மேலாக குறித்த மாகாண சபை உறுப்பினர்களால் ஏனைய உறுப்பினர்கள் எதுவும் செய்யமுடியாமல் வாயடைத்திருப்பதாகவும் அறியும் போது நெஞ்சம் வெடித்துவிடும் போல் உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பச் சுமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, வாக்களிப்பு நிலையங்களுக்கு நடந்தும் தவழ்ந்தும் சென்று வாக்களித்து எங்கள் துயரம் போக்குக என்று அனுப்பி வைக்க, இவர்கள் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவதையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

எனவே இத்தகைய நிலைமைகளை தமிழ் மக்களும் தமிழ் ஊடகங்களும் பொறுமையோடு பார்த்திருந்தால், மிகப் பயங்கரமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகையால் தமிழ் மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சரை பாதுகாக்க; ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்த; தமிழ் மக்களுக்கு எதிரான அமைப்புகளின் வலைகளில் வீழ்ந்து சபையை குழப்ப நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டத் தயாராக வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொது வழக்குகளை தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்களைக் கைது செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.

ஆகையால் அன்புக்குரிய தமிழ் மக்களே ! உங்கள் மெளனம் விலை பேசப்படுவதை உணர்ந்து கொள்ளுங்கள். காலம் நெருங்குகிறது நீங்கள் யார் என்பதைக் காட்டுவதற்கு.

தேர்தலில் வென்றுவிட்டால் எப்படியும் நடக்கலாம் என்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் சக்தி என்ன என்பதை செயலில் நிரூபித்துக் காட்டுங்கள்.

ஓ! புலம்பெயர் தமிழ் மக்களே! தமிழ் வாழக் குரல் கொடுக்கும் ஊடகங்களே! மெளனத்தைக் கலைத்து தமிழ் மண்ணைக் காப்பாற்றுங்கள்.