மைத்திரி அரசியலும் குடும்ப அரசியலா?

திங்கள் சனவரி 25, 2016

மைத்திரிபால சிறிசேனவின் வாரிசுகளும் குடும்ப அரசியலில் ஈடுபட்டுவருவதாக அண்மைய நாட்களாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு துறையின் அமைச்சராகவும் கடமையாற்றிவருகிறார். இதேவேளை, மூத்த புதல்வி சதுரிக்காவின் கணவர் சுரஞ்சித் பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மகள் சதுரிகா சிறிசேன பாதுகாப்பு அமைச்சகத்தின் விழாக்களில் சிறப்பு விருந்தினராகவும் அவ்வப்போது அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக மைத்திரி குடும்ப உறுப்பினர்களுக்கு அரசியலில் முக்கிய இடம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் மிஹிந்து சேத் மெதுரா வளாகத்தை பார்வையிட்டார்.

அங்கிருந்த ஊனமடைந்த வீரர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் நாரம்மலா குழந்தைகள் பிக்குமார் பாடசலைக்கு சென்ற அவர், அங்கிருந்த குழந்தைகளுடம் தனது நேரத்தையும் செலவிட்டார்.

முன்னதாக ஐ.நா மனிதவுரிமை மாநாட்டிற்கும் ஜனாதிபதி செல்லும் பொழுது மகனையும் அழைத்துச் சென்றிருந்தார். இது அப்பொழுது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

அந்நிகழ்விற்குப் பின்னர் தஹம் சிறிசேன சிறிது காலம் அரசியல் நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மீண்டும் அவர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

முன்னைய ஆட்சியில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகின்றது என்றும், அந்த அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே நல்லாட்சி கூட்டணி ஏற்பட்டது. தவிர, அக் குடும்ப ஆட்சியை தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்தே மைத்திரிபால சிறிசேன மஹிந்த அரசிடம் இருந்து பிரிந்து பொதுவேட்பாளராகும் முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மஹிந்தவின் ஆட்சியில் அவர் தனது சகோதரர்களுக்கும், பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும், தனக்கு விசுவாசமானவர்களுக்கும் ஆட்சியின் போது அதிக சலுகைகளைச் செய்ததோடு, ஆட்சி அதிகாரங்களில் தலையிடவும் அனுமதியளித்திருந்தார்.

இந்நிலையில் அதே செயற்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் இடம்பெற கூடாதென அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.