யோகா குரு ராம்தேவின் உணவு தயாரிப்பு நிறுவனத்திற்கு துணை ராணுவ பாதுகாப்பு

செவ்வாய் மார்ச் 08, 2016

ஹரித்வாரில் உள்ள யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி உணவு மற்றும் மூலிகை பூங்கா நிறுவனத்திற்கு மத்திய துணை ராணுவம் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயக்குனர் சுரிந்தர் சிங் கூறுகையில், “பதஞ்சலி உணவு மற்றும் மூலிகை பூங்கா நிறுவனத்திற்கு 35 படை வீரர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் பாதுகாக்க அளிக்க உள்ளது. இதற்கான அனைத்து செலவுகளையும் பதஞ்சலி நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். மேலும் இதற்காக ஆண்டுக்கு ரூ. 40 லட்சத்தை கட்டணமாக பதஞ்சலி நிறுவனம் செலுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பாதுகாவலர்களுக்கும் லாரி டிரைவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் இறந்ததையடுத்து இத்தகைய உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு வழங்குவது இது முதல் முறை அல்ல. தற்போது இந்தியாவில் இன்போசிஸ் உட்பட 8 தனியார் நிறுவனங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன.