வித்தியாதரன், சுமந்திரன் தெரிவு செய்யப்படுவார்களேயாயின் தமிழ்த் தேசியம் இல்லாதொழியும்!

புதன் ஓகஸ்ட் 05, 2015

சிறீலங்காவில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் மிகவும் விபரீதமான முடிவுகளைத் தரப்போகின்றதோ என்று தமிழ் அரசியல் அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கில் போட்டியிடும் கட்சிகள் தொடர்பில் பெரிதும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லாவிட்டாலும் வடக்கில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் தொடர்பாக அதிக கரிசனை கொள்ளவேண்டிய தேவை அரசியல் அவதானிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகத்தில் பலமான இராணுவ, அரசியல் சமபலத்துடன் இருந்தபோது உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பின்னடைவிற்கு பின்னர் வந்த அத்தனை தேர்தல்களிலும் தனித் தமிழ்த் தேசியக் கட்சியாக நின்று வெற்றிகளைக் குவித்தது. இதன்மூலம் தமிழரின் ஒற்றுமை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று நிலமை முற்றிலும் மாறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டு வருகின்ற முரண்பாடுகள், சுமந்திரன் போன்ற துரோகிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தன்னகத்தே உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றமை போன்ற பல்வேறு காரணங்களால் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே விரிசல் நிலை ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. இந்த விரிசலை தமிழ்?த் தேச விரோத சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன.

 

குறிப்பாக, இந்த தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழரின் பாரம்பரிய கட்சியாகிய அகில இலங்கைத் தமிழ்க் கொங்கிரஸ் கட்சி மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வர் தலைமையில்  களமிறங்கியிருக்கின்றது. இது தமிழ்த் தேசியக் கட்சியாக இருக்கின்ற நிலையில் வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர் சமூகம் இந்தக் கட்சிக்கு பின்னால் அணிதி ரள்வது போன்ற நிலையை அவதானிக்க முடிகின்றது. இதற்கு அப்பால் புதிய துரோக அரசியல் அணியயான்றும் தாயகத்தில் களமிறங்கியிருக்கின்றது. அதுதான் ஜனநாயகப் போராளிகள் கட்சி. சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரனால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி நேரடியாகவே சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவால் வழிப்படுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியத்தின் ஒன்றுபட்ட சக்தியை உடைப்பதற்கான சிறந்த ஆயுதமாக இந்த ஜனநாயகப் போராளிகள் கட்சி தென்னிலங்கை அரசியல் தலைமையின் பூரண ஆதரவோடு முன்னோக்கி நகர்த்தப்படுகின்றது.

 

தெற்கில் மீண்டும் மகிந்தவின் ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக சிறீலங்காவின் புலனாய்வுத்துறை மிக தீவிரமாக உழைத்து வருகின்றது. இதற்கு காரணம் சிறீலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படாமையாகும். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவரது தம்பியாகிய கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர். இவர் சிறீலங்காவின் படைக் கட்டமைப்பு முழுமையையும் தனக்குச் சாதமாக கட்டியயழுப்பியிருந்தார். இந்தப் படைக் கட்டமைப்புக்கு அப்பால் புலனாய்வுக் கட்டமைப்பையும் தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததார்.

 

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் சிறீலங்கா படை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றில் உள்ள உயரதிகாரிகள் அதீத சுகத்தை அனுபவித்தனர். புலனாய்வுத்துறையின் சாதாரண நபர்களுக்குக்கூட கோத்தபாய பெருந்தொகைப் பணத்தை ஊதியமாக வழங்கினார். புலிகளின் கட்டமைப்புக்களை அழித்த பின்னர் புலிகளுடன் சார்பான நபர்களைக் கண்காணிப்பதற்கும் தேவையேற்பட்டால் அவர்களைக் கைது செய்து நாலாம் மாடிக்கு கொண்டு செல்வதற்கும் காவல்துறையினருக்கு அப்பால் இந்தப் புலனாய்வுப் பிரிவினரே அதிகமாக பங்கெடுத்தனர். இந்த நிலையில், சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவில் இன்றுவரை கோத்தபாயவின் செல்வாக்கே மேலோங்கியிருக்கின்றது. கோத்தபாயவின் கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய உயரதிகாரிகள் இன்றுவரை மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் இந்தப் புலனாய்வுப் பிரிவு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தனது காரியங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவு வடக்கில் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து வித்தியாதரனின் தலைமையில் களமிறக்கியிருக்கின்றது.

 

வடக்கில் முன்னாள் போராளிகளைக் களமிறக்கினால் தெற்கில் அது மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்பது புலனாய்வுத்துறையின் அசைக்க முடியாத நம்பிக்கை. தனது ஆட்சியில் வடக்கே முற்றுமுழுதாக புலிகளை அடக்கியிருந்த நிலையில் தற்போது மைத்திரி புலிகளை ஜனநாயக ரீதியில் எழுச்சி பெற வைக்கின்றார் என்றும் இந்த எழுச்சி எதிர்காலத்தில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்து நாட்டை சீரழிக்கும், தெற்கில் குண்டுகளை வெடிக்க வைக்கும் என்று தென்னிலங்கை சிங்கள மக்களைச் சூடேற்றி வாக்குகளை அபகரித்து மீண்டும் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதற்கு ஏற்றாற்போல தெற்கில் பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் தேர்தலில் குதித்துள்ள முன்னாள் புலிகள், வடக்கே யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை தமது பிரச்சாரத்தில் முன்னெடுத்திருக்கின்றனர். குறிப்பாக சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் தமது இயக்கப் பெயர்களையும் சொந்தப் பெயர்களையும் அச்சிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் பிரச்சாரத்தைப் போன்று இவர்களின் பிரச்சாரம் நடைபெறுகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் ‡ கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு 30 ஆயிரம் தொடக்கம் 35 ஆயிரம் வரையான வாக்குகள் தேவையான நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் இலக்குவைத்து வித்தியாதரன் அணியின் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் இந்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், பலாலி படைத்தளத்தில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவால் இயக்கப்படும் நியூஜப்னா என்ற இணையத்தளம் மட்டும் இவர்களின் செய்திகளையே தொடர்ந்து தரவேற்றி வருகின்றது. இந்த இணையத்தளம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து புலி எதிர்ப்பு செய்திகளையே வெளியிட்டு வந்த நிலையில், தற்போது தமிழீழ தேசியத் தலைவரின் (முன்னர் எடுத்த) ஒளிநாடாக்கள், புலிகளின் ஒளிநாடாக்கள், மற்றும் புலிகளைப் போற்றும் செய்திகளை தரவேற்றி வருகின்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு வாக்களிக்குமாறு இந்த இணையம் நேரடியாகவே தமிழ் மக்களைக் கோரி வருகின்றது.

 

ஜனநாய போராளிகள் கட்சியில் இருந்து வித்தியாதரனை எப்படியாவது பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் சிறீலங்காவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவு எந்தளவு தீவிரமாக இருக்கின்றது என்பதை நியூஜப்னா இணையத்தளத்தைப் பார்க்கின்ற புலம்பெயர் உறவுகளால் புரிந்துகொள்ள முடியும். வித்தியாதரனை பாராளுமன்றுக்கு அனுப்பினால் அது தமிழரின் தற்போதைய ஜனநாயகப் போராட்டத்துக்கு விழுகின்ற முதல் அடியாக இருக்கும். அது சர்வதேச ரீதியாக எமது மக்களை மேலும் மேலும் ஏதிலிகளாக்கும். சிறீலங்கா புலனாய்வுத்துறை இதனை செய்து முடிக்கும். வித்தியாதரன் தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற ரீதியில் தனக்கு இருந்த அபிமானத்தைப் பயன்படுத்தி தமிழீழ தேசியத் தலைவரை சந்தித்தார். இவர் தேசியத் தலைவரை சந்திப்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் விரும்பியிருக்கவில்லை என்றும் ஆனாலும் தீவிர பிரயத்தனத்தின் பின்னரே வித்தியாதரன் தேசியத் தலைவரைச் சந்தித்தார் என்றும் விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித்தன. வித்தியாதரன் தான் எழுதி வெளியிட்ட ‘என் எழுத்தாயுதம்’ என்ற நூலிலும் பொட்டு அம்மான் தொடர்ந்து தன்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்ததாக கூறியிருக்கின்றார்.

 

இவ்வாறான நிலையில், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் கனவுடன் இருந்த வித்தியாதரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளியது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலிலும் வித்தியாதரன் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கும் கனவுடன் இருந்தார். ஆனாலும் அதுவும் சாத்தியப்படாமல் போகவே சிறீலங்கா புலனாய்வுத்துறையின் நேரடி கண்காணிப்பில் களமிறங்கியிருக்கின்றார்.

 

அன்புக்குரிய புலம்பெயர் தேசத்து உறவுகளே,

உங்கள் வாயிலிருந்து வருகின்ற கருத்துக்களே தாயகத்து தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப்போகின்றன. எனவே, வித்தியாதரன் உள்ளிட்ட தேசத் துரோகிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பகிரங்கமாக அறிக்கை மூலமும் தொலைபேசி மூலமும் உங்கள் தாயகத்து உறவுகளுக்கு எடுத்துரையுங்கள். மேலும் கூட்டமைப்பில் உள்ள சுமந்திரனுக்கு எந்தவொரு விருப்பு வாக்கையும் வழங்கவேண்டாம் என்றும் அறிவுறுத்துங்கள்.

 

வித்தியாதரன், சுமந்திரன் போன்ற துரோகிகள் நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்யப்படுவார்களேயாயின் எஞ்சியிருக்கின்ற தமிழ்த் தேசியமும் இல்லாதொழிக்கப்படும். எமது விடுதலை நோக்கிய பாதை முற்றுமுழுதாகவே தடைப்படும்.

புலம்பெயர் உறவுகளே களத்தில் இறங்குங்கள்.

 

- தாயகத்தில் இருந்து காந்தரூபன்

 

நன்றி: ஈழமுரசு