விபரீத ஆசைகளில் இருந்து எழும் வெற்று அறிக்கைகள் - கலாநிதி சேரமான்

திங்கள் நவம்பர் 30, 2015

ஆயுத எதிர்ப்பியக்கமாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்த 1970களில் இருந்தே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலரிடையே விபரீதமான சில ஆசைகள் நிலவி வருகின்றன.

அன்றைய காலப்பகுதியில் பிரித்தானியாவில் கிருஷ்ணா வைகுந்தவாசன் என்றொருவர் இருந்தார். அவரிடம் தமிழ்ப்பற்று நிறைய இருந்தது. தமிழினப் பற்றும் இருந்தது. ஐ.நா.வில் அன்றைய சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹமீத் அவர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்து மேடையேறிச் சில நிமிடங்கள் தமிழீழம் பற்றியும் உரையாற்றினார்.

திடீரென அவருக்கு விபரீதமான ஆசையொன்று ஏற்பட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய தனது நண்பர்கள் சிலரின் துணையுடன் இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கிய அவர், அவ் அமைப்பின் தலைவராகத் தன்னைத் தானே பிரகடனம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து 31.08.1980 அன்று தனது நண்பர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றைக் கூட்டிய வைகுந்தவாசன், 1982ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று சுதந்திரத் தமிழீழம் உதயமாகும் என்று பிரகடனம் செய்தார். அக்காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், அப்பிரடகனம் பற்றிக் கேள்வியுற்றதும் வாய்விட்டுச் சிரித்தாராம். ஆனாலும் அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எதனையும் கூறாது அமைதி காத்தது.

அதனைத் தொடர்ந்து ஓராண்டு கழித்து 14.11.1981 அன்று தனது நண்பர்களை அழைத்து மீண்டும் ஒரு பிரகடனத்தை வைகுந்தவாசன் மேற்கொண்டார். 1982ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று நாடுகடத்தப்பட்ட நிலையில் இயங்கும் தமிழீழ அரசை (இப்பொழுது இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலைப் போன்று) தாம் பிரகடனம் செய்யப் போவதாகவும், அவ்வாறு அமையப் போகும் நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசின் தலைவராகத் தானே பதவி வகிக்கப் போவதாகவும் வைகுந்தவாசன் அறிவித்தார். இம்முறை இதற்குக் கடும் ஆட்சேபனையும், விமர்சனமும் தெரிவித்துத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்பீடத்தால் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்புரைக்கு அமைய, அவ் அறிக்கையை தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியிருந்தார். நான்கு பக்கங்களைக் கொண்ட அவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த ஒரு வசனம் இக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது. அவ் வசனம் இதுதான்: ‘தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைவிதியைப் பாதிக்கக்கூடிய அதிமுக்கிய விவகாரங்களில் மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாமல், அதற்கான சூழ்நிலை எழுமுன் தன்னிச்சையாக சில நபர்கள் தமிழீழ அரசை வெளிநாட்டில் அமைக்க முயல்வது எமது சுதந்திரப் போராட்டத்தை வெறும் கேலிக்கூத்தாகச் செய்வதாக முடியும்’.

இவ்வாறு தமிழீழத்தின் முதலாவது அதிபராக வேண்டும் என்ற கனவுடன் நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசை உருவாக்கும் கனவில் மிதந்து, இறுதியில் கனவு நிறைவேறாத நிலையில் 2000ஆம் வைகுந்தவாசன் இயற்கை எய்தினார். ஆனாலும் வைகுந்தவாசனின் மரணத்தோடு புலம்பெயர் தமிழர்கள் சிலரிடையே காணப்பட்ட விபரீதமான ஆசைகள் இறந்து போய் விடவில்லை. நடந்த முடிந்த மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அறிக்கை, இவ் விபரீத ஆசைகளுக்கு இனியும்கூட முற்றுப்புள்ளி வைக்கப்படப் போவதில்லை என்பதையே உணர்த்துகின்றது.

1989ஆம் ஆண்டு மாவீரர் நாளைத் தொடங்கி வைத்த பொழுது அதனை ஆண்டுதோறும் தனது கொள்கைப் பிரகடனங்களை மேற்கொள்வதற்கான நாளாகத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எண்ணியிருக்கவில்லை. 1989ஆம், 1990ஆம் ஆண்டுகளில் மாவீரர் நாளன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் கூர்ந்து அவதானித்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம். அவ் இரு ஆண்டுகளுக்குமான அறிக்கைகளிலும் மாவீரர்களை மதிப்பளிப்பதையே தனது முக்கியமான நோக்கமாகத் தலைவர் அவர்கள் கொண்டிருந்தார்.

ஆனால் 1991ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ நடைமுறை அரசுக்கான கட்டுமாணங்களைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கத் தொடங்கிய பின்னர் மாவீரர் நாளில் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மாவீரர்களை மதிப்பளித்தல் என்பதற்கு அப்பால் சென்று அரசியல் பரிமாணத்தை எய்தின. அவ்வாண்டில் இருந்து தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் அறிக்கைகள் அவரது கொள்கைப் பிரகடன அறிக்கைகளாக பரிணமித்தன.

2008ஆம் ஆண்டு வரை இந்நடைமுறையே தொடர்ந்தது. 2009 மே 17 உடன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்பை உலகத் தமிழினம் இழந்த நிலையில் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை வெளிவரும் நேரம் கடந்த ஏழு ஆண்டுகளாக வெறுமையாகவே உள்ளது.

ஆனாலும் தலைவர் அவர்களின் இடத்தைத் தாம் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில் அறிக்கை வெளியிடுவதையே தமது தலையாய கடமையாகக் கொண்டு புகலிட நாடுகளில் சிலர் செயற்படுவதுதான் வேடிக்கையானது.

மாவீரர் நாளன்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கடிதத் தலைப்புக்களில் அறிக்கைகளை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி அறிக்கை வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தின் அதிகாரபூர்வ அறிக்கைகள் என்று வரும் பொழுது அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடக்கம் அவற்றில் கையாளப்பட வேண்டிய மொழிநடை வரை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் அவதானமாக இருப்பார். அதிலும் தனது அதிகாரபூர்வ அறிக்கைகளை எழுதும் பொறுப்பை தேசத்தின் குரல் பாலா அண்ணையிடமே வழங்கியிருந்தார்.

1998ஆம் ஆண்டு வன்னியில் பாலா அண்ணை தங்கியிருந்த பொழுது அவரது சிறுநீரகம் பழுதடைந்திருப்பது ஓரளவு உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவரை இனியும் காப்பாற்றுவது சாத்தியமாகுமா என்ற நிலை ஏற்பட்ட பொழுது பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை உடனடியாக அழைத்த தலைவர் அவர்கள், அவருக்கு அவசரமாக பணிப்புரை ஒன்றை விடுத்தார். நன்கு தமிழில் எழுதக்கூடிய, அதேநேரத்தில் அரசியல் அறிவுடைய இரண்டு போராளிகளை உடனடியாகத் தனக்கு அடையாளம் காட்டுமாறு தலைவர் பணித்தார். அதன்படி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் இரண்டு போராளிகளைத் தேர்ந்தெடுத்து தலைவரின் முன் நிறுத்தினார். அவ்விரு போராளிகளுக்கும் அப்பொழுது ஒரு கட்டளையைத் தலைவர் அவர்கள் பிறப்பித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்தின் சார்பாகவும், தனிப்பட்ட எழுத்தாக்கங்களாகவும் பாலா அண்ணையால் எழுதப்பட்ட அறிக்கைகள், கட்டுரைகள், நூல்கள் அனைத்தையும் ஆழமாகப் படித்து, அவரது மொழிநடையையும், அரசியல் பார்வையையும் கற்றுத் தேறுமாறு அவர்களைத் தலைவர் பணித்தார்.

ஒரு வேளை பாலா அண்ணையைக் காப்பாற்ற முடியாது போனால், அவருக்குப் பின்னரான காலத்தில் வெளியிடப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தின் அறிக்கைகள் அனைத்தும், அதே மொழிநடையுடனும், அதே அரசியல் பார்வையுடனும் வெளிவர வேண்டும் என்பதற்காகவே அப் பணிப்புரையைத் தலைவர் அவர்கள் பிறப்பித்தார்.

அதிர்ஷ்டவசமாக தலைவர் அவர்களின் முயற்சியால் பாலா அண்ணை பாதுகாப்பாகக் கடல்வழியில் தாய்லாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து இலண்டனை வந்தடைந்து பின்னர் நோர்வேயில் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்று 2006ஆம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார்.

2006ஆம் ஆண்டின் இறுதியில் பாலா அண்ணை புற்றுநோய்க்கு ஆளாகி மீண்டும் மரணத்தின் வாயிலில் நின்ற பொழுது, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களால் இனம்காணப்பட்ட இரண்டு போராளிகளும் அரசியல் ரீதியில் முழுமையாகப் புடம்போடப்பட்டவர்களாக மாறியிருந்தார்கள். இவர்களை விடத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிக்கைகளை எழுதும் ஆற்றலுடைய தனிக்குழு ஒன்றும் தமிழீழ அரசியல்துறையின் கீழ் இயங்கத் தொடங்கியிருந்தது.

அக்கட்டத்தில் பாலா அண்ணை மரணிக்கப் போகின்றார் என்பது உறுதியாகி ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், புலம்பெயர் தேசங்களில் சிலரிடையே விபரீதமான ஆசையொன்று தொற்றிக் கொண்டது. பாலா அண்ணையின் இடத்திற்குத் தங்களைத் தலைவர் அவர்கள் நியமித்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அது.

ஆனால் பாலா அண்ணை சாவைத் தழுவிய சில மணிநேரத்திற்குள் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், பாலா அண்ணையின் இழப்பு இட்டுநிரப்ப முடியாதது என்று அறிவித்ததன் மூலம் இவ் விபரீத ஆசைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனாலும் அவ்வாண்டு தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையில் பாலா அண்ணை தொடர்புபடவில்லை என்பதை அறிந்திராத பலர், 2007ஆம் ஆண்டிற்கான தலைவர் அவர்களின் உரையை எழுதும் பொறுப்பு தமக்குக் கிட்டும் என்ற கனவில் சஞ்சரிக்கத் தவறவில்லை. பலர் முண்டியடித்துக் கொண்டு முதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது வீரச்சாவைத் தொடர்ந்து புதிய அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்ற பா.நடேசன் அவர்களுக்கு ஆலோசனைக் கடிதங்களையும், மாதிரி அறிக்கைகளையும் அனுப்பத் தவறவில்லை.

அவர்களின் கனவுகளையெல்லாம் தவிடு பொடியாக்கி 2007ஆம் ஆண்டு மாவீரர் நாள் அறிக்கையைத் தலைவர் அவர்கள் வெளியிட்ட பொழுதுதான் பலர் திகைத்தார்கள். பாலா அண்ணைக்குப் பின்னர் இயங்கக்கூடிய புலமையாளர்களைக் கொண்ட கட்டமைப்பு ஒன்றைத் தமிழீழ தாயகத்தில், அதுவும் தனது நேரடி கண்காணிப்பில் இயங்கும் வகையில் தலைவர் ஏற்கனவே நிறுவி விட்டார் என்பது அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது.

ஆனாலும் 2009ஆம் ஆண்டு மே 17 உடன் தலைவர் அவர்களுடனான தொடர்பை உலகத் தமிழினம் இழந்து விட்ட நிலையில், தலைவர் இனிமேல் வரமாட்டார், அவரது மாவீரர் நாள் அறிக்கைகள் இனி வெளிவராது என்ற நம்பிக்கையில் சிலர் ஆண்டுதோறும் முண்டியடித்துக் கொண்டு மாவீரர் நாள் அறிக்கைகளை எழுதி வெளியிட்டு வருகின்றார்கள்.

கைது நாடகத்தை கே.பி அரங்கேற்றும் முன்னர் அவரால் உருவாக்கப்பட்டு, அவரைத் தொடர்ந்து சிங்களப் புலனாய்வாளர்களின் பின்னணியில் ராம் என்பவராலும், அதன் பின்னர் விநாயகம் என்பவராலும் வழிநடத்தப்பட்ட ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் ஒரு தரப்பினரும், ‘தமிழீழ விடுதலைப் புலிகள் - தமிழீழம்’ என்ற பெயரில் இன்னொரு தரப்பினருமாக மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுக்கும், தமிழீழ தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடனங்களுக்கும் களங்கம் விளைவிக்கின்றார்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தலைவர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய அவ்வியக்கத்தின் தலைமைச் செயலகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று எத்தனையோ தடவைகள் எத்தனையோ தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களும் மன்றாடியும் கூட, அதனை இக்கும்பல்களைச் சேர்ந்த எவரும் கேட்பதாக இல்லை. அது பற்றி அக்கறையும் இவர்களுக்கு எள்ளளவும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கைகளைத் தாமே எழுத வேண்டும் என்ற தமது விபரீத ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபிற்கு முரணாகவும், மொழிநடைக்கு மாறாகவும் தாம் நினைத்த மாத்திரத்தில் ஆண்டுதோறும் அறிக்கைகளை எழுதுவதைத் தமது தலையாய கடமையாகக் கொண்டு இவர்கள் இயங்கி வருகின்றார்கள்.

சகல விதமான அரசியல் செயற்பாடுகளையும், ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இடைநிறுத்தித் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தொடர்பை இழந்த நிலையில் உலகத் தமிழினம் இருக்கும் நிலையில், ஆண்டு தோறும் அறிக்கை வெளியிட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு வெற்றுக் காதிக அமைப்பாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டி நிற்கும் இந்தக் காகிதப் புலிகளுக்கு யார் மணிகட்டப் போகின்றார்கள் என்பதுதான் இப்பொழுது எல்லோரிடமும் எழும் கேள்வி.

இம்முறை தலைமைச் செயலகம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில் வெளிவந்திருக்கும் அறிக்கை பற்றி இப்பொழுது புலம்பெயர் தமிழர்களிடையே இன்னுமொரு கேள்வியும் எழுப்பப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு கே.பியைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டு, ராம் என்பவரால் வழிநடத்தப்பட்டு, விநாயகத்தால் முன்னகர்த்தப்பட்டு மூக்குடைபட்டுப் போன ‘தலைமைச் செயலகம்’ என்ற இக்கும்பலின் புதிய வழிநடத்துனர் யார் என்பதுதான் அந்தக் கேள்வி.

இதற்கு தலைமைச் செயலகம் என்ற பெயரில் இவ்வாண்டு மாவீரர் நாள் அறிக்கை எழுதியவர்கள் விளக்கம் தந்தால் நல்லது. அல்லாது போனால் இவர்கள் யார், இவர்களின் பின்னணியில் இருந்து கொண்டு இவர்களை இயக்குவோர் யார் என்பதை உலகத் தமிழர்கள் புரிந்து கொள்வதற்கு விண்வெளி விஞ்ஞானக் கற்கைகளை மேற்கொள்வது அவசியமில்லை.