வெளிவருகிறது உண்மை - 33வருடங்களுக்கு பின்னர்...

ஞாயிறு சனவரி 24, 2016

“கொழும்பு பொரள்ளை மயானத்தில் 10அடி நீள அகல ஆழத்தில் வெட்டப்பட்ட மூன்று புதைகுழிகளுக்குள் ஐம்பத்திமூன்று உடலங்கள் புதைக்கப்பட்டன”

“1983 யூலை மாத இறுதிவாரத்தில் நடுஇரவில் ராணுவ வண்டியில் வந்து இறங்கிய இராணுவத்தினர் 35 உடல்களை புதைத்தனர்.”

“மறுநாள் 18 உடலங்களை புதைத்தனர்.”

1983ம்ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு பொரள்ளை மயானத்தில் தொழிலாளியாக இரவுகாவல் பணியில் ஈடுபட்டு இருந்த அனிஸ் துவான் என்பவர் அண்மையில் வாய்திறந்து சொல்லிய வாக்குமூலம் இது.

ஏறத்தாழ 33 வருடங்களுக்கு பின்னர் வாய்திந்திருக்கிறார்.

மேலும் அவர் ‘ 1983 இறுதி வராத்தில் ஒரு நடுஇரவில் பொறள்ளை மயானத்தில் இராணுவ வண்டிகளில வந்திறங்கிய இராணுவ வீரர்கள் கனரக மண்அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் பத்துஅடி நீள,அகல, ஆழமுள்ள குழிகளை வெட்டினார்கள்.

மூடப்பட்ட இராணுவ வண்டியில கொண்டு வரப்பட்ட 35 ஆண்களுடைய உடலங்களை அதில் புதைத்து மூடினர். அது சம்பந்தமாக மயானத்தின் மேலாளர் கொழும்பு மாநகர மேஜருக்கு அறிவித்தபோது ‘இராணுவத்தினரை தடுக்க வேண்டாம். அதனை அவர்கள் செய்து முடிக்க அனுமதிக்கும்படி ‘ கொழும்பு மாநகர மேஜர் உத்தரவிட்டார் என்றும் அனிஸ் தவான் என்ற அந்த பொறள்ளை மயான காவலாளி தெரிவித்துள்ளார்.

மறுநாள் மேலும் 18 ஆண்களுடைய உடலங்களை இவ்வாறு இராணுவத்தினர் கொண்டுவந்து இராணுவத்தினர் நடு இரவில் புதைத்ததாக அவர் தெரிவித்தார்.

83ம்ஆண்டு யூலை 25ம் திகதி 27ம் திகதிகளில் வெலிக்கட சிறைச்சாலையில் கோழைத்தனமாக கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் முக்கியமான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், டொக்டர் ராஜசுந்தரம்,தேவன், சிவபாதம்மாஸ்டர் உட்பட 53 தமிழர்களுடைய உடலங்களே அவை.

இன்றுவரை அவர்கள் எவரதும் குடும்பங்களுக்கோ அவர்களது அன்புக்கு உரியவர்களுக்கோ இது சம்பந்தமான எந்தவொரு அறிவிப்பும் செய்யாது இந்த புதைப்பு நிகழ்ந்துள்ளது.

அது மட்டும் அல்லாமல் அவர்களின் புதைகுழிக்கு மேலாக கார் தரிப்பிடம் ஒன்றை அமைத்தும் விட்டார்கள். சிங்களதேசத்தின் தலைநகரத்தில் தினமும் லட்சம்மக்கள் கடந்து போகும் ஒரு சுறுசுறுப்பான பகுதியில் நிலத்துக்கு கீழே என் தேசத்தின் விடுதலை முன்னோடிகளை புதைத்துவிட்டு அதன்மீது நவீன கட்டிடம்கட்டி எழுந்து நிற்கிறது பேரினவாத உணர்வு.

யார் தம்மை கேட்க முடியும் என்ற ஆணவத்துடன், உலகத்தின் வியாபார நலன்களை வைத்து சர்வதேசத்தையே வளைத்து போட்ட சாதுர்யத்துடன் சிங்கள பேரினவாதம் நிற்கிறது.

இன்றுவரை வெலிக்கட சிறையில் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு சிங்களத்தின் எந்த ஆட்சியாளர்களும் எதுவிதமான கவலையோ கண்டனமோ மன்னிப்போ எதுவுமே கோரவில்லை என்பது மட்டுமின்றி இந்த வெலிக்கடை படுகொலைகள் மிகவும் கவனமாக திட்டமிட்டு சிங்கள அரசின் துணையுடனே நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதுதான் மிக உண்மை.

முழுக்க முழுக்க சிங்கள அரசின் திட்டமிடுதலுடன் அரச உயர்பீட அனுமதியுடனே இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழர்களை காலகாலமாக தொடர்ந்து அடிமைகளாக, உரிமைகள் அற்றவர்களாக வைத்திருக்க வேண்டுமானால் அவர்களுக்கு மத்தியில் இருந்து எழும் விடுதலைக்குரல்களை நசுக்கியே தீரவேண்டும்.

அப்போது சிங்களதேச அதிபராக இருந்த ஜேஆர் ஜெயவர்த்தனா தனது மருமகன் முறையிலான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்காவை 79ல் யாழ் அனுப்பி விடுதலைப் போராளிகளை வேட்டையாடி அழிக்க எடுத்த முயற்சி எதிர்விளைவுகளையே அதிகம் உருவாக்கி போராட்டத்தை வீச்சுப்பெற வைத்தது.

அரசு நியமித்த கண்துடைப்பு விசாரணைக்குழுவின் முன்னால் சிங்களத்துக்கு சார்பாக சாட்சி சொன்ன காவல்துறை ஏவல் குருசாமி போன்றோர் அழிக்கப்பட்டதும்,

இலங்கைத்தீவின் மிகப்பெரும் வங்கி பணம் பறிப்பு பட்டப்பகலில் இயந்திர துப்பாக்கிகள் ஏந்திய போராளிகளால் நடாத்தப்பட்டதும் அதன் விளைவாக மக்கள் வங்கி இயக்குநர்கள் அனைவரும் பதவி விலகவேண்டி வந்ததும் என்று சிங்களத்தை பொருளாதார -பாதுகாப்பு தளங்களில் ஆட்டங்காண வைத்த காலமது.

செய்வதறியாது சிங்களம் கலங்கி நின்ற வேளையிலே தங்கத்துரை குட்டிமணி கைது நடக்கிறது.

அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலையின் முன்னோடி வீரர்கள் பலர் பிடிக்கப்படுகிறார்கள். பனாகொடை இராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்து முக்கியமானவர்கள்மீது எண்ணற்ற வழக்குகளை சுமத்தி இனி என்றைக்குமே வெளியே வரமுடியாதவாறு செய்துவிட்டு இனி தமிழர்கள் எழவே மாட்டார்கள் என்று ஜேஆர் கனவுலகில் மூழ்கி கிடந்தார். ஆனால் வரலாறு என்பது வேறு விதமாக நகர்ந்தது.

தங்களை தண்டிக்க என்று சிங்களம் வகுத்த வியூகத்தை சிங்களபேரினவாதத்துக்கு எதிராக திருப்பி விடும் அற்புத நகர்வை கைதான போராளிகள் நிகழ்த்தினார்கள்.

இதற்கு முன்னர் பல தேசத்து விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த ஒன்றுதான். கைதான போது பகத்சிங் செய்ததையே, பிடிக்கப்பட்டு நீதிமன்றில் நிறுத்திய போது ஆபிரிக்க சிங்கம் நெல்சன் மண்டேலா செய்ததையே, மொன்காட இராணுவமுகாம் மீதான தாக்குதலில் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் நிறுத்தியபோது பிடல் காஸ்ரோ வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று முழங்கியதையே தமிழீழ விடுதலையின் முன்னோடிகளான தங்கத்துரை குட்டிமணி ஜெகன் தன்னெழுச்சியாக சிங்கள நீதிமன்றில் செய்தார்கள்.

‘ சிறீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த நீதிமன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல…

எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் கழிக்கவோ-வேண்டுமாயின் மரணத்தைக்கூட தழுவவோ நாம் தயங்கவில்லை’ என்று நீதிமன்றில் தங்கத்துரையும்,

‘தமிழ் பிரதேசத்தில் இருந்து சிறீலங்கா இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையேல் நாம் அவர்களை பலாத்காரமாக வெளியேற்றுவோம்’ என்று குட்டிமணி பிரகடனம் செய்தார்.

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று சிங்களத்து தலைநகரின் நீதிமன்றில் ஜெகன் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்ததும் அது தமிழகம் தமிழீழம் என்று எங்கும் தமிழ்தேசிய உணர்வை பன்மடங்கு அதிகமாக்கியது.

வெளியே இருந்தபோது இந்த போராளிகள் சிங்களத்துக்கு ஏற்படுத்திய அச்சத்தை விட பலமடங்கு அதிகமான அச்சத்தை பதட்டத்தை உள்ளே இருக்கும்போது ஏற்படுத்தினார்கள்.

மிக கவனமாக இவர்களை பனாகொடை முகாமில் இருந்து சிறைச்சாலைகளுக்கு நகர்த்தியது சிங்களம். பாரிய கலவரம் போன்ற ஒன்று உருவாகும்போது இவர்களை அழித்துவிடுவது என்று முடிவானது.

யூலை 23ம்திகதி யாழ் திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் வழக்கத்துக்கு மாறாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பபடாமல் கொழும்பு பொறள்ளை மயானத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதன்போது சிங்கள கட்சிகளின் பிரமுகர்களே முன்நின்று வன்முறையை ஆரம்பித்து வைத்தனர். மறுநாள் (1983யூலை 25) பொறள்ளை மயானத்துக்கு வெகு கிட்டவாக இருந்த வெலிக்கடை சிறையில் ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அத்தனை தமிழ்வீரர்களும் (35பேர்) சிறைச்சாலை உத்தியோகத்தினரின் வழிகாட்டலுடன் சிங்களகைதிகளால் கொல்லப்பட்டனர்.

27ம் திகதி 18 தமிழ்வீரர்கள் கொல்லப்பட்டனர். இநத கொலைகளை முன்னின்று நடாத்திய கொனவில்ல சுனில் அதன் பின்னர் ஜேஆரின் ஜனாதிபதி அதிகாரத்தை பாவித்து விடுதலை செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் இவனுக்கு அகில இலங்கை சமாதான நீதிவான் பட்டமும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த கொனவில்ல சுனில் ஜேஆரின் மருமகனான ரணில் விக்ரமசிங்கவின் மெய்பாதுகாலனாக கடமை ஆற்றினான். அது மட்டுமல்லாமல் ரணில் கல்வி அமைச்சராக இருந்தபோது இந்த கொனவில்ல சுனில்தான் முழு கல்விஅமைச்சையும் தனது கட்டுப்பாட்டுள் வைத்திருந்தாக சிங்கள ஆங்கில ஊடகங்கள் அந்த நேரத்தில் பதிந்துள்ளன.

1983ல் வெலிக்கடை சிறையின் பாதுகாப்புக்காக ஒரு சிறிய பிளட்டூன் இராணுவ அணி இருபத்துநாலு மணிநேரமும் சிறையில் நின்றிருந்தது. 25,27 ம்திகதி சிறைச்சாலை படுகொலைகள் நடக்கும்போது இந்த இராணுவ அணி சிறைச்சாலை சுவருக்கு வெளியே கண்டும் காணாதது போல நின்றிருந்தது.

அப்போது இந்த இராணுவ அணிக்கு பொறுப்பாக லெப்படினன்ட பொறுப்பில் இருந்த மகிந்த கித்ருசிங்கதான் இப்போதைய மேஜர் ஜெனரல் மகிந்த கித்ருசிங்க.

அன்று எமது இனத்தின் சுதந்திரத்துக்காக எழுந்த குரல்களை கோழைத்தனமாக கொன்றுவிட்டு ஆணவமாக ஜேஆர் பேசியது போலவே இப்போது இந்த பொங்கல் நிகழ்வில் காணாமல் போன யாருமே உயிருடன் இல்லை என்று ஜேஆரின் மருமகன் ரணில் பேசி இருக்கிறார்.

83 யூலையில் வெலிக்கடை சிறையில் தமிழர்களை கொன்று ரத்தத்தை பருகிய கொனவெல்ல சுனிலை தனது மெய்பாதுகாவலனாக, தனது அமைச்சின் முக்கிய பொறுப்பாளனாக 86 வரை வைத்திருந்த ரணில் விக்ரமசிங்கவிடம் அற்ப சொற்ப மனிதாபிமானத்தை கூட எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

முதுகு இருப்பதே வளைந்து நிற்பதற்காக என்று முடிவு செய்து தூங்கி கிடந்த தமிழர்களிடை இருநது எழுந்த எம் விடுதலை முன்னோடிகளை கொன்று அவர்களின் உடலங்களை நடுஇரவில் கொண்டுபோய் புதைத்தது இப்போது பொரள்ளை காவல்தொழிலாளியின் வாக்குமூலமாக வெளிவந்திருக்கிறது.

இதனை பற்றி 1984ல் விசாரித்த ஒரு சர்வதேச நீதி அமைப்பு கொமிசனின் அறிக்கையில் ‘அதி உயர் பாதுகாப்புடன் இருந்த சிறைச்சாலையில் இந்த கொலைகள் நடக்கும்போது எந்தவொரு சிறைச்சாலை அதிகாரியும் ஏன் தடுக்கவில்லை என்பதும்,

மீண்டும் இரண்டுநாள் கழித்து மீண்டும் எப்படி கொலைகள் தொடர்ந்தன என்பதும் பலத்த சந்தேகத்தை தருகிறது ‘ என குறிப்பிட்டு இருந்ததையும் (,Ethnic Violence in Sri Lanka, 1981-83: Staff Report of the International Commission of Jurists, ICJ Review) அந்த நேரத்தைய சர்வதேச மன்னிப்புசபை மற்றும் ஐநா உப அமைப்புகளின் மாநாட்டில் (1984) அகில இந்திய பெண்கள் அமைப்பு வெலிக்கடை படுகொலை பற்றிய நீதி விசாரணை கோரியது,

மற்றும் விபரங்களை திரட்டி இப்போது மீண்டும் இந்த படுகொலைகளுக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.

எங்களுக்காக தங்களை ,தமது குடும்பங்களை, தமது இனிய உறவுகளை, தமது இளமையை துறந்து போராட புறப்பட்டு வெலிக்கடை சிறையில் மரணித்த எம் உறவுகள் அனைவரது நினைவாக இதனை செய்தாக வேண்டும்.

ஒரு முழு விசாரணை அது சம்பந்தமாக நடாத்தப்பட வேண்டும்.சிறிசேன குரே முதல் ஜேஆர்,ரணில் வரைக்கும் இதன் பின்னால் நீண்டிருக்கும் இருண்ட நிழல்களை அம்பலபடுத்தியே தீர வேண்டும்.

சர்வதேசத்துக்கு மென்முகம் காட்டும் சிங்களத்தின் அதிஉயர் அதிகார பீடத்தின் கோர முகத்தை இதன் மூலம் உரித்து காட்டலாம்.

எம் தேசத்து வீரர்களை கோழைத்தனமாக கொன்று அவர்களின் உடலங்களை யாரும் அறியாமல் புதைத்து அதன்மீது கட்டிடங்களை எழுப்பி விட்டால் எல்லாம் முடிந்துவிடும் என நினைக்கும் சிங்களத்தின் நினைப்பு தகரவேண்டும்.

தமிழ்அரசியல்வாதிகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.எங்கள் மக்களின் உரிமைக்காக போரடிய இந்த உன்னத மனிதர்களின் நினைவாக வருகின்ற யூலையில் அந்த பொறள்ளை புதைகுழிகளுக்கு மேலாக தீபம் ஏற்ற வேண்டும்.

உங்களை நாம் என்றும் மறவோம் என உறுதி சொல்வோம்.

ச.ச.முத்து