10வருடங்களின் பின்னர் விடுதலையாகிய அரசியல் கைதி செந்தூரனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

சனி சனவரி 09, 2016

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான சிவராசா ஜெனிகன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உயிர்நீத்த கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் செந்தூரனின் வீட்டுக்கு சென்று செந்தூரனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, பெற்றோர்களுடன் கலந்துரையாடி இருந்தார்.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு  10 வருடங்கள் சிறை தண்டணை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜனாதிபதியினால் இவர் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை யாழ்ப்பாணம் வந்த ஜெனீகன் கோப்பாய் பகுதியில் உள்ள செந்தூரனின் வீட்டுக்கு சென்று செந்தூரனின் பெற்றோருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் செந்தூரனின் 45ம் நாள் நினைவு தினம் நேற்று நடைபெறும் நிலையில் செந்தூரனின் உருவப்படத்திற்கு அஞ்சலிகளையும் செலுத்தினார்.

இதன் பின்னதாகவே யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்தார். உயிர்களை தியாகம் செய்து சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் விடுதலை அவர்களை விடுதலைக்கு பின்னரும் குற்ற உணர்வுடன் வாழ வைக்கும் என ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனீகன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். என்னோடு பல அரசியல் கைதிகள் சிறை வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் எமது விடுதலையை வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த மானவனின் குடும்பதை நேரில் சந்திபதற்கு வந்துள்ளேன் இது எனது தனிபட்ட முடிவல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளின் விருப்பம் நான் விடுதலையாகும் போது கட்டாயம் செந்தூரனின் வீட்டிற்கு செல்லவேண்டும் என்பதே. என அவர் மேலும் கூறினார்