10 ஆயிரம் ஆண்டு காவிரி மணல் இந்த தலைமுறையோடு அழியும் அபாயம்!

ஞாயிறு ஓகஸ்ட் 04, 2019

காவிரி தமிழகத்திற்கு கிடைத்த நன்கொடை.பிறப்பிடம் கர்நாடகமாக இருந்தாலும் புகுந்த வீடான தமிழகத்தில் நீண்டதூரம் பாய்ந்து வங்க கடலில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல் அருகே  காலடி பதித்து மேட்டூர் அணை வந்து அங்கிருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை கடந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் தஞ்சம் புகுந்து விடுகிறது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதல் நாமக்கல்  மாவட்டத்தின் பெரும்பகுதி வரை காவிரியின் வழித்தடம் பாறைகள் நிறைந்தது. நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தான் மணல் வற்றாத செல்வமாக கொழிக்கிறது.

காவிரி மணலை இரவு  பகலாக கொள்ளையடித்ததால் இன்று விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

காவிரியில் அள்ள அள்ள வற்றாத செல்வமான மணல் கிடைப்பதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் 2003ம் ஆண்டு முதல் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார்.

அதற்கு முன்பும் காவிரியில்  மணல் அள்ளப்பட்டு வந்தது. அவ்வப்போது ஆளுங்கட்சியினர் தங்களுக்கென்று எல்லைகளை பிரித்துக்கொண்டு மணலை அள்ளி வியாபாரம் செய்து செழித்தவர்கள் உண்டு.

இதனால் திருச்சியில் பலருக்கு காவிரி தந்த கலைச்செல்வன்கள் என்ற  பட்டமும் உண்டு. அவர்கள் காவிரி மணலால் தங்களை வளப்படுத்திக்கொண்டவர்கள்.

111

ஐகோர்ட் வகுத்த விதிமுறைகள்:- மணல் குவாரிகள் பொதுப்பணித்துறை சார்பில் நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டாலும் ஆளுங்கட்சியின் பினாமிகள் தான் இங்கு சர்வாதிகாரம் நடத்தினர்.

காவிரியை எவ்வளவு சுரண்ட முடியுமோ  அவ்வளவு சுரண்டினார்கள். இதனால் காவிரியில் பல இடங்களில் 40 அடி, 50 அடி பள்ளங்கள் ஏற்பட்டு ஆற்றின் போக்கே பல இடங்களில் மாறிப்போனது.

மணல் மாபியாக்களால் காவிரியை சூறையாடியதை தொடர்ந்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்குள் குவிந்தன. அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட் மணல் அள்ளுவதற்கு சில விதிமுறைகளை வகுத்தது.

அதாவது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மணல் அள்ளவேண்டும். மணல் அள்ளுவதற்கு (தோண்டுவதற்கு)  பொக்லைன் பயன்படுத்தக்கூடாது. 3 அடி ஆழத்தில் தான் மணல் எடுக்க வேண்டும்.

கரையில் இருந்து 100 அடி தூரத்தில் தான் எடுக்க வேண்டும். பாலம், நீரேற்று நிலையங்கள் உள்ள இடங்களில் மணல் எடுக்க கூடாது என்பது உள்பட பல  விதிகளை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.

கள்ள கணக்கில் விற்பனை ஜோர்:- ஐகோர்ட் விதித்த எந்த விதிகளையும் பின்பற்றாமல் காவிரியை சூறையாடினார்கள். 2 யூனிட் மணல்  ரூ.625 என அறிவிக்கப்பட்டது.(ஒரு யூனிட் என்பது பொக்லைனில் 3 பக்கெட்) இதற்கு டிடி கொடுக்க வேண்டும் என்ற போதிலும்,மணல் குவாரிகளில் 650 ரொக்கமாகவே வாங்கிக்கொண்டு மணல் கொடுத்தார்கள்.

இந்த மணல் வாங்குவதற்கு நெல்லையில் இருந்தோ, கோவையில் இருந்தோ வந்து ஒரு நாள் காத்து கிடந்த லாரிக்கு 2 யூனிட்  மணல் வாங்கி சென்றால், டீசல் கட்டணத்துக்கு கூட கட்டுப்படியாகது.

எனவே மேலும் 2 யூனிட்டோ, 4 யூனிட்டோ வேண்டும் என்றால் 2நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

செகண்ட் சேல் மணல்:- லாரி அதிபர்கள், டிரைவர்களின் இந்த நிலையை புரிந்து கொண்ட மணல் மாபியாக்கள், செகண்ட் சேல் என்ற ஒரு ஐடியாவை கண்டுபிடித்தார்கள். இரவோடு இரவாக காவிரி மணலை அள்ளி காவிரி கரையில் ஒரு பெரிய  இடத்தை பிடித்து அதில் குவித்து வைத்து கொள்வார்கள்.

அரசு குவாரியில் 2 யூனிட் வாங்கியது போக மீதம் தேவையான அளவுக்கு செகண்ட் சேல் மையங்களில் வாங்கி கொள்ளுங்கள் என அறிவுறுத்துவார்கள்.

செகண்ட் சேலில் ஒரு யூனிட் மணல் 1200 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த செகண்ட் சேல் மணல் எங்கிருந்து வருகிறது, யார் இதை விற்கிறார்கள் என்பது ஆளுங்கட்சிக்கு மட்டுமே தெரியும்.

இந்த விற்பனை மூலம் தான் ஆளுங்கட்சியினர்  மேலிடத்தில் இருந்து அடிமட்டம் வரை சம்பாதித்து கோடீஸ்வரர்கள் ஆனார்கள். காவிரி மணல் கேரளா, கர்நாடகம், ஆந்திரா என வெளி மாநிலங்களுக்கும் சென்றது. அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்மட்டம்: இப்படி காவிரியை சுரண்டியதால் பல இடங்களில் ஆற்றின் போக்கு மாறி நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு பாதாளத்தில் ஓடுகிறது.  இதனால் அதன் கிளை ஆறுகளுக்கோ,வாய்க்கால்களுக்கோ தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை.இதனால் மணல் மாபியாக்களுக்கு எதிராக தமிழகத்தில் குரல் ஒலிக்கத்தொடங்கியதால், மணல் குவாரிகளை மூடுவதாக அரசு அறிவித்தது.  

அதன்பிறகு ஐகோர்ட் அனுமதி பெற்று ஒரு சில இடங்களில் குவாரிகள் திறக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அங்கு சுத்தி, இங்கு சுத்தி, கடைசியில... இறுதியாக காவிரி தான் ஒரு வழி என்ற நிலையில் ஆங்காங்கே மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

மணல் குவாரிகளால் தங்கள் பகுதியில் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள்  பாதிக்கப்படுவதாக மக்கள் நடத்திய போராட்டங்களால் இப்போது டெல்டா மாவட்டங்களில் மாட்டு வண்டிகளுக்கு மட்டுமே மணல் குவாரிகள் செயல்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் கீழமுல்லக்குடியில் காவிரி ஆற்றில் கடந்த 30ம் தேதி மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கு மணல் எடுக்க வேண்டுமானால் மாட்டு வண்டி வைத்திருப்பவர்கள் விஏஓ, ஆர் ஐ ஆகியோரிடம், இவர் மாட்டு வண்டி  வைத்துள்ளார் என்ற சான்று பெற்று, அதை தாசில்தார் உறுதி செய்து சான்று வழங்க வேண்டும்.

அவர்கள் தான் மாட்டு வண்டியில் மணல் அள்ள முடியும். இந்த மணல் எடுப்பதற்கு குவாரியில் இருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரியிடம்  ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும். ஒரு மாட்டு வண்டி மணலுக்கு ₹105 கொடுக்க வேண்டும். வண்டியில் அவரவர் திறமைப்படி, மாட்டின் இழுப்பு திறனுக்கு ஏற்ப மணல் அள்ளிக்கொள்ளலாம். இதற்காக ஆன்லைனில் முன்பதிவும்  செய்ய வேண்டும்.

இப்படி 105 ரூபாய்க்கு எடுக்கும் மணல் வெளியில் 20 கி.மீ. தூரம் சென்றால் 4 ஆயிரம் ரூபாய்க்கும், அதற்கு மேல் சென்றால் 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இந்த மணல் குவாரிக்கு அனுமதிக்கும் அலுவலகம் கீழ முல்லக்குடி  திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு இந்த ஆற்றின் மறுகரை (வடக்குபகுதி) திருச்சி மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட திருவளர்சோலை காவிரியிலும் மணல் அள்ளுகிறார்கள்.

டெல்டாவில் களைகட்டுகிறது:- திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் தலைசுமையாகவும், டூவீலர்களிலும் இரவு நேரங்களில் மணல் திருட்டுத்தனமாக அள்ளப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி அதிமுகவினர்,  போலீசார், வருவாய்த்துறையினரை சரிக்கட்டி கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.

25 கிலோ அரிசி மூட்டையில் அரை மூட்டை அளவு மணல் அள்ளிவந்து ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை தூரத்துக்கு ஏற்ப விற்கிறார்கள். இது தவிர டூவீலர்களில் அள்ளி வருபவர்கள் முக்கால் மூட்டை அளவுக்கு அள்ளி  வந்து 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். திருச்சி காவிரி ஆற்றில் இந்த தொழில் ஓகோவென நடந்து வருகிறது.

கனிம கடத்தல் பிரிவு வழக்கு எங்கே? பெரிய அளவில் கடத்துகிறவர்கள் ஆட்டோ, வேன், லாரி என ஆற்றுக்குள் இறக்கி மணல் அள்ளி வருகிறார்கள். இப்படி கடத்துகிறவர்களில் சிலர் மீது எப்போதாவது வழக்கும் பதிவு செய்கிறார்கள். இந்த  வழக்கு கனிம கடத்தல் பிரிவில் பதிவு செய்வதில்லை.

திருட்டு வழக்கு என்ற சாதாரண பிரிவில் போட்டு விடுகிறார்கள். இதனால் கைது செய்யப்படுகிறவர்கள் அபராதம் கட்டிவிட்டு எளிதில் வெளியே வந்து விடுகிறார்கள். போலீசாரும் மணல் கடத்தலை தடுக்க முக்கிய சட்டப்பிரிவுகளை பயன்படுத்தக்கூடாது என்பது மேலிட உத்தரவு.

மணல் கடத்தல் குறித்து எந்த விஏஓவும் போலீசில் புகார் செய்வதுமில்லை. திருவாரூர் மாவட்டத்தில் அரசு மணல் குவாரி எதுவும் செயல்படவில்லை.

ஆனால் நீடாமங்கலம் பகுதியில் மணல் திருட்டு கொடி கட்டிப்பறக்கிறது. பெரிய வெண்ணாற்றில் நரசிங்கமங்கலம், பன்னிமங்கலம், சிறிய வெண்ணாற்றில்  கொட்டையூர், முடுக்குசாலை, பாப்பயைன்தோப்பு, அனுமந்தபுரம், மேல்கரை, கோரையாற்றில் நடுப்படுகை, பெரியார் தெரு, முல்லைவாசல், கண்ணம்பாடி, பாமணி ஆற்றில் பரப்பனாமேடு, கடம்பூர், பூவனூர் ஆகிய இடங்களில் முறைகேடாக  பகலில் மட்டுமின்றி இரவிலும் மணல் அள்ளப்படுகிறது.

இதில் நரசிங்கமங்கலம், பன்னிமங்கலம் ஆகிய இடங்களில் லாரிகள், டிராக்டர்களிலும், மற்ற இடங்களில் டிராக்டர்கள், டூவீலர்களிலும் அள்ளப்படுகிறது.

உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்  துணையுடன் நடைபெறுகிறது. அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இப்போது காவிரியில் கிடைக்கும் மணல் ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகள் வரையிலான காலத்தில் உருவானது. அதை இந்த தலைமுறையோடு அழித்து விடும் நிலையில் காவிரி மணலை கபளீகரம் செய்கிறார்கள்.

எம்.சாண்ட் வந்தது எப்படி?

மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க எம்.சாண்ட் அறிமுகமானது. காவிரி மணலை விட இது விலை குறைவாக இருந்தபோதிலும், அது மணலைப்போல குவாலிட்டியாக இல்லை என்பது கட்டிட கான்ட்ராக்டர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும்  தற்போது எம்.சாண்ட்டும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க புதுகையை சேர்ந்த ஒருவர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து மணல் கொண்டு வந்தார்.

அந்த மணலை அவர் வெளியே கொண்டு செல்ல அவர் பட்டப்பாடு அவருக்குத்தான் தெரியும். அந்த மணலை விற்க அரசின் சார்பில் பல்வேறு இடையூறுகள் செய்யப்பட்டன. இதனால் அந்த மணலும் விலை அதிகமாகவே இருந்தது.

111

கண்டு கொள்ளாதீங்க.. மேலிடம் உத்தரவு யார் யார் கட்டிடங்கள் கட்டுகிறார்களோ, அவர்கள் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் சொல்லி விட்டால் நள்ளிரவில் மணல் மூட்டைகள் வீட்டு முன் வந்து விழுகிறது.

இதை கிராம அதிகாரிகளும், போலீசாரும், பொதுப்பணித்துறையும்  கண்டுகொள்ளக்கூடாது என்பது வாய்மொழி மேலிட உத்தரவு. தொட்டியம், முசிறி, அய்யம்பாளையம், ஆமூர், நொச்சியம் போன்ற பகுதிகளில் தலைச்சுமை, டூவீலர்கடத்தல் தொழில் இப்போது குடிசை தொழிலாக நடந்து வருகிறது.

முக்கிய புள்ளிகள் தப்புவது எப்படி?டிரைவர்களும், மணல் அள்ளிப்போட சென்ற கூலித் தொழிலாளர்களும் தான் கைது செய்யப்படுகிறார்கள்.

மணல் கடத்தலின் முக்கிய புள்ளிகள் எங்கும் சிக்குவதில்லை. போலீசாரும் இந்த கடத்தலின் ஆணிவேர் எது என்று கண்டுபிடிக்க  முயற்சிப்பதும் இல்லை. இதனால் எல்லா மாவட்டங்களிலும் மணல் கடத்தல் நடந்து கொண்டே தான் இருக்கிறது.