105 வயதான தாயை வாக்குச்சாவடிக்கு தோளில் சுமந்து வந்த மகன்!

திங்கள் மே 06, 2019

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் பகுதியில் வசிக்கும் ஒருவர், 105 வயது நிரம்பிய தன் தாயை தோளில் சுமந்து வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

நாடாளுமன்ற தேர்தல் 5வது கட்டமாக இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர்.

மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தன் மனைவி காயத்ரியுடன் ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய மந்திரியும் ஹசாரியாபாக் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயந்த் சின்கா ஜார்க்கண்டில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, லக்னோ மாண்டிசோடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இந்நிலையில் பொது மக்களும் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து, மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  

 

அந்த வகையில்  ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 450க்கு, வாக்காளர் ஒருவர் தனது 105 வயதான தாயை தோளில் சுமந்து ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். இந்த காட்சி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த 5ம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக  31.29% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.