14,617 சிறீலங்கா படையினருக்கு இன்று பதவி உயர்வு

திங்கள் மே 18, 2020

யுத்தம் நிறைவடைந்து 11 வருட பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தை சேர்ந்த 14 ஆயிரத்து 617 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த பதவி உயர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இராணுவ வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள இராணுவ நினைவு தூபிக்கு அருகில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் போது 14,617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. நாட்டின் பௌதீக தேவைகள், ஒருமைப்பாட்டை பாதுகாத்தல் மற்றும் மக்களுக்கு அச்சுறுத்தலான இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், சர்வதேச தொற்று நோய் ஆகியவற்றிற்காக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள சேவைகளை பாராட்டும் வகையில் சிறிலங்கா  இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

2020ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி 7210 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.